Ilayaraja: "அண்ணன் ஆசையை நான் நிறைவேற்றிட்டேன்’’ - யேசுதாஸிற்காக இளையராஜா செய்த...
EPFO: ``இனி வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம்'' - எளிமைப்படுத்தும் தொழிலாளர் அமைச்சகம்
இனி வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலமே எடுக்கலாம் என்கிற வசதி விரைவில் வரப்போகிறது என்று தொழிலாளர் அமைச்சகத்தின் செயலாளர் சுமிதா தவ்ரா சமீபத்தில் அறிவித்துள்ளார்.
ஓய்வுக்காலத்திற்கு பிறகு, வைப்பு நிதியை எளிதாக எடுக்கவும், அதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும், அடுத்த ஆண்டு மே அல்லது ஜூலை மாதம் இது அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
யார் யார் பயன்பெறலாம்?
வருங்கால வைப்பு நிதி கணக்கோடு வங்கி கணக்கை இணைப்பது மூலம் ஏ.டி.எம்மில் இருந்து வைப்பு நிதியை எடுக்கலாம். இந்த வசதியை வைப்பு நிதி உறுப்பினர்கள், வைப்பு நிதி பயனாளர்கள், வைப்பு நிதி காப்பீட்டாளர்கள் பயன்படுத்தலாம்.
இந்த வசதியை வைப்பு நிதி உறுப்பினர் இறக்கும்பட்சத்தில், அவருடைய நாமினியும், வாரிசும் பெறலாம். ஆனால், இறந்தவரின் வைப்பு நிதி கணக்கோடு, நாமினி அல்லது வாரிசின் வங்கி கணக்கை இணைக்க வேண்டும்.
ஊழியர் டெபாசிட் காப்பீட்டில் ரூ.7 லட்சம் வரையான காப்பீட்டு தொகையை இறந்த வைப்பு நிதி உறுப்பினரின் நாமினி அல்லது வாரிசு பெறலாம். இந்தப் பணத்தைக்கூட ஏ.டி.எம் மூலம் நாமினி எடுக்கலாம். ஆனால், அவர் இறந்தவரின் வைப்பு நிதி கணக்கோடு, அவரது வங்கி கணக்கை இணைத்திருப்பது அவசியம்.
புதிய நடைமுறை
பொதுவாக, வைப்பு நிதி நடைமுறையின் படி, ஓய்விற்கு பிறகு, ஒருவர் மொத்த வைப்பு நிதியும் எடுக்கலாம். ஓய்வுப்பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்னர் 90 சதவிகித வைப்பு நிதியை எடுக்கலாம்.
மேலும், இந்த நிதியை இடையில் வேலையின்மை, மருத்துவ செலவு, வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது, உறுப்பினர், அவரது உடன்பிறப்புகள் அல்லது அவரது குழந்தைகளின் திருமணம் போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டும் எடுக்கலாம்.
ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப் போகும் நடைமுறையில், எப்போது எல்லாம் பணம் எடுக்கலாம் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.