செய்திகள் :

Estate Diwali: 2 1/2 நாள் லீவு; போனஸுக்கான ஏக்கம்; கொண்டாட்டம் - எஸ்டேட் கால தீபாவளி நினைவுகள்

post image
எல்லா தீபாவளியை மாதிரியும் அல்ல இந்த தீபாவளி. வழக்கத்தை விட ஏதோ இனம்புரியாத கூடுதல் சந்தோஷம் எனக்குள்ள இருக்கு.

கொஞ்சம் பொறுப்பும் கூடவே சேர்ந்து வந்த மாதிரியும் இருக்கு. காரணம், வேலைக்காக சென்னை வந்து கிட்டத்தட்ட ரெண்டரை வருஷத்துல முதல் தடவையா போனஸ் வாங்கியிருக்கேன். இந்த போனஸ்ல அப்பா அம்மான்னு ஃபேமிலில இருக்க எல்லோருக்கும் டிரெஸ் வாங்கிருக்கேன். படிச்சு, வேலைக்கு வந்து இந்த மாதிரி என்னோட காசுல என்னோட குடும்பத்துக்கு நான் வாங்கிக் கொடுக்குறதுல அப்படியொரு சந்தோஷம். அதனாலயே இந்த தீபாவளி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இது எல்லாரும் பண்ற ஒரு விஷயம் தானே அப்படினு நீங்க நினைக்கலாம்.

இருந்தாலும் இது எனக்கு ஸ்பெஷலான தீபாவளிதான். இதுல என்ன இருக்கு அப்படிங்குற உங்க கேள்வி எனக்குப் புரியுது. ஆனா, சின்ன வயசுல இருந்து நான் பல தீபாவளிகள எஸ்டேட்லதான் கொண்டாடியிருக்கேன். என் மனசுல தேங்கியிருக்குற அந்த எஸ்டேட் கால நினைவுகளோட இந்த தீபாவளிய அணுகுறப்போ எனக்கு எல்லாமே ஸ்பெஷலாதான் தெரியுது.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே நீலகிரில இருக்கற எஸ்டேட்லதான். அந்த எஸ்டேட்டுக்கு `ஆவுக்கல்' ன்னு பேரு. கிட்டத்தட்ட ஒரு 400 ஏக்கர் இருக்கும். சுத்தி எல்லா பக்கமும் டீ தோட்டம். அந்த எஸ்டேட்டுக்குள்ளயே எருமைப்பட்டி, இரத்தனகிரி, காலனி, பத்தாம் நம்பர், பங்களான்னு நிறைய ஏரியா இருக்கும். அதுல எருமைப்பட்டிதான் எங்களோட ஏரியா. பச்சை பசேல்னு இருக்க அந்த இடத்துல இரயில் பூச்சிங்க மாதிரி லைன் வீடுங்க இருக்கும். வெள்ளக்காரவங்க கிட்ட இருந்து இந்த எஸ்டேட்ட எங்க ஓனர் வாங்குனதா அப்பாவும் அம்மாவும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்.

எஸ்டேட்

நூறு வருஷம் தாண்டி இப்பவும் அந்த எஸ்டேட் இயங்கிட்டுதான் இருக்கு. நானே கிட்டத்தட்ட என்னோட 17 வயசு வரைக்கும் அதாவது 12 ஆவது படிச்சு முடிக்கிற வரைக்கும் அந்த எஸ்டேட்லயேதான் இருந்தேன். எங்க அம்மா, அப்பா எல்லாம் 30, 40 வருஷமா அந்த எஸ்டேட்டிலேயேதான் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. இப்ப கோயம்புத்தூர்ல செட்டில் ஆகிட்டோம். என்னதான் இப்ப ஒரு பெருநகரத்துல செட்டில் ஆனாலும் எங்களோட எஸ்டேட் தேநீர் வாசனையை இன்னும் மறக்க முடியல. குறிப்பா பண்டிகை காலங்கள். ஒரு வருஷத்துல நிறைய பண்டிகைகள் வரும் ஆனா எஸ்டேட் மக்கள் ரொம்ப விரும்பிக் கொண்டாடுற ஒரு பண்டிகைனா அது தீபாவளியாத்தான் இருக்கும். ஏனா, அப்பதான் அங்க வேலை செய்யுறவங்களுக்கு போனஸ் கொடுப்பாங்க.

இந்த போனஸ்காகத்தான் வருஷம் முழுவதும் காடு, மேடு ஏறி, வெயில், மழைன்னு பார்க்காம அத்தனை மக்களும் வேலை செய்வாங்க. எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல எங்க அப்பா, அம்மா ஓட சம்பளம் ஒரு நாளைக்கு 90 ரூபாயா இருந்துச்சு. ஆனா, எங்க அப்பா 20 வயசுல எஸ்டேட்ல வேலை செய்ய தொடங்குனப்போ அவருக்கு 1.75 காசுதான் சம்பளம்னு சொல்லிருக்காங்க. அந்த ஒன்னே முக்கா ரூவா காசுல இருந்து 90 ரூவா சம்பளத்துக்கு வந்து சேர அத்தனை வருசம் பிடிச்சிருக்கு. காலத்துக்கு ஏத்த மாதிரி டீத்தூளோட விலை ராக்கெட் வேகத்துல உயர்ந்திருக்கு. டீயோட விலையும் உயர்ந்திருக்கு.

எஸ்டேட் மக்கள்

ஆனா, எங்க அப்பாவ மாதிரி அந்த எஸ்டேட்கள்ல வியர்வை சிந்தி உழைக்கிறவங்களுக்கான ஊதியம் மட்டும் எப்பவுமே நத்தை நகர்ந்தா மாதிரிதான் இருந்திருக்கு. தீபாவளி அப்ப போனஸ் ஒரு மூவாயிரம் நாலாயிரம் கொடுப்பாங்க. இந்த போனஸ் கிடைச்சிருச்சுனா அப்பா, அம்மாவுக்கு கொண்டாட்டமோ இல்லையோ எங்களுக்கு ஒரே கொண்டாட்டமாகிடும். நானும், என் ப்ரெண்ட்ஸும் எப்படா டிரெஸும், பட்டாசும் வாங்கிக் கொடுப்பாங்கன்னு காத்துக்கிட்டு இருப்போம். பெரிய பெரிய கடைங்களுக்கு போயி டிரஸ் எடுக்குற பழக்கம் எஸ்டேட் மக்களுக்கு கிடையாது. கோத்தகிரி தான் எங்களுக்கு டவுனு. அங்க கூட்டிட்டு வந்துதான் புது ட்ரெஸ்ஸெல்லாம் வாங்கித் தருவாங்க. அதையும் மீறி ஒரு பெரிய கடையில தள்ளுபடியோட டிரெஸ் வாங்கணும்னா மேட்டுபாளையம், கோயம்புத்தூர் மாதிரியான ஊர்களுக்கு வந்துதான் வாங்கணும்.

தீபாவளினா ஸ்கூல், காலேஜ் படிக்குறவுங்களுக்கு கொண்டாட்டமோ, இல்லையோ எஸ்டேட்டுல வேலை செய்யுறவுங்களுக்கு ரொம்பக் கொண்டாட்டமா இருக்கும். ஏன்னா நாங்க படிக்கும் போதெல்லாம் எங்களுக்குத் தீபாவளி அன்னைக்கு மட்டும்தான் லீவு இருக்கும். ஆனா அப்பா, அம்மாங்களுக்கு எல்லாம் தீபாவளிக்கு முன்னாடி நாள் அரை நேரதுக்கு மேல லீவு விட்டுறுவாங்க. தீபாவளி அன்னைக்கு லீவு. அடுத்த நாளும் லீவு. அவங்களோட அன்றாட வேலையே கொஞ்சம் இயந்திரத்தனமாத்தான் இருக்கும். காலைல 6 மணிக்கே கிளம்பிப் போயி பொம்பளை ஆளுங்க இலை பறிக்க, ஆம்பளை ஆளுங்க செடிக்கெல்லாம் மருந்து பாய்ச்சுவாங்க.

அங்கேயே ஒரு டீத்தூள் பேக்டரியும் கூட இருந்துச்சு. அங்கேயும் நிறைய பேர் வேலை பார்த்தாங்க. தொடர்ந்து வேலை செய்யுற அவுங்களுக்கு கிட்டத்தட்ட ரெண்டரை நாள் லீவுங்றது எதோ விடுதலை கிடைச்சா மாதிரி இருக்கும். இப்பெல்லாம் எனக்கு எதாச்சு பொருள் தேவைன்னா பக்கத்துலேயே கடை இருக்கு வாங்கிடுறேன். சில சமயத்துல அது முடியலனாக் கூட ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி ஈசியா வாங்கிடுறேன். ஆனா, அங்க எஸ்டேட்ல அவ்ளோ ஈசியா எந்தப் பொருளும் கிடைக்காது. நினைச்ச உடனே எல்லாம் பொருட்கள வாங்கிட முடியாது. எஸ்டேட்டில பெரும்பாலும் மளிகை சமான் வாங்கணும்னா டவுனுக்குத்தான் வரணும். அதுனால தீபாவளிக்கு முன்னாடி நாள் கொடுக்குற அந்த அரைநாள் லீவுல போயி தீபாவளிக்குத் தேவையான பொருட்கள் எல்லாத்தையும் வாங்கிட்டு வருவாங்க.

டவுனு நாங்க இருக்க இடத்துல இருந்து ஒரு 15 கி.மீ இருக்கும். 20 ரூபா கொடுத்து ஜீப்லதான் போவாங்க. ஜீப்தான் அங்க இருக்கவுங்களுக்கான ஒரே போக்குவரத்து ஆறுதல். ஏனா அங்க பஸ்ஸூ வசதியெல்லாம் பெருசா இருக்காது. காலையில 7 மணிக்கு ஒரு பஸ், சாயங்காலம் 7.30 மணிக்கு ஒரு பஸ் வரும் அவ்வளவுதான். ஏதாச்சு ஒரு தேவை இருக்கு டவுனுக்கு போகணும்னா இந்த ஜீப்பதான் எதிர்பார்த்துக்கிட்டு இருப்பாங்க. அதுவும் இல்லனா நடராஜா சர்வீஸ்தான். நாங்க ஸ்கூல் படிக்கும்போது காலையில அந்த 7 மணி பஸ்ஸ பிடிக்க 6.30 கெல்லாம் கிளம்பிடுவோம். சாயங்காலம் ஸ்கூல் முடிச்சிட்டு அந்த 7.30 பஸ்ல வந்து இறங்கி அப்டியே ஒரு 8 மணி போலதான் வீட்டுக்கு வந்துசேருவோம். அதுலயே பாதி டயர்டு ஆகிடும். சரி தீபாவளி கதைக்கு வருவோம்.

ஜீப் பயணம்

தீபாவளிக்கு பெருநகரங்கள்ல இருக்க மக்கள் பெரும்பாலும் பலகாரத்தை எல்லாம் கடையில வாங்கிப் படைக்குறாங்க. ஆனா எஸ்டேட்டுல இருக்குற ஒவ்வொருத்தருமே வீட்டுலையே பலகாரம் எல்லாம் செய்வாங்க. கடையில இருந்து எதுவும் வாங்க மாட்டாங்க. எங்க அம்மாலாம் கிட்டத்தட்ட தீபாவளிக்கு முன்னாடி நாள் 8, 9 மணிக்குத் தொடங்கி நடுராத்திரி 2 மணி வரைக்கும் செய்வாங்க. குறிப்பாக அதிரசமும், பாசிபயிர் உருண்டையும்தான் ரொம்ப பேமஸ். எல்லார் எஸ்டேட் வீட்டு தீபாவளி பலகாரங்களிலும் இது ரெண்டும் கட்டாயம் இருக்கும்.

வெளியூருக்கு கட்டிக் கொடுத்த அக்காங்க, வேலை பார்க்க போன அண்ணாங்க , காலேஜ் படிக்க போனவுங்கன்னு எல்லோரும் தீபாவளி அன்னைக்கு எங்க இருந்தாலும் எஸ்டேட்டுக்கு வந்துருவாங்க. அதனால ஊரே களைகட்டும். வழக்கம்போல தீபாவளி அன்னைக்கு தலைக்கு எண்ணெய் வைச்சு குளிக்க சொல்லுவாங்க. கறி எல்லாம் எஸ்டேட்லயே கிடைக்காது. அதுனால காலையில சீக்கிரமா எழுந்திருச்சு டவுனுக்குபோய் வாங்கிட்டு வருவாங்க. எல்லார் வீட்டுலயும் அன்னைக்கு தடபுடலா அசைவ சமையல் நடந்துகிட்டு இருக்கும். சமையல் வேலைய முடிச்சிட்டு படையல் போட்டு கும்பிடுவாங்க. நான் இங்க பார்த்த வரைக்கும் சாமிக்கு படையல் போட்டு கும்பிடுறாங்க. ஆனா எஸ்டேட்டுல இறந்தவுங்களுக்குத்தான் படையல் போட்டு சாமி கும்பிடுவாங்க.

எப்பவும் காலையில 5 மணிக்கெல்லாம் எழுந்திருச்சு வேலைய முடிச்சிட்டு 7 மணிக்கெல்லாம் வேலைக்கு கிளம்பி போயி சாயங்காலம் 5 - 6 மணிக்கு வருகிற எஸ்டேட் மக்கள் தீபாவளி அன்னைக்கு சாமியெல்லாம் கும்பிட்டு, சாப்பிட்டு எல்லோரும் ஒன்னா உட்கார்ந்து ரொம்ப ரிலாக்ஸா பேசிட்டு இருப்பாங்க. எங்க சுற்று வட்டாரத்துல தியேட்டர்லாம் எதுவும் கிடையாது. தீபாவளி அன்னைக்கு ஒரு படம் ரிலீஸ் ஆகுதுன்னா பசங்க மட்டும் மேட்டுப்பாளையம் போயி படம் பார்த்துக்கிட்டு வருவாங்க. பொண்ணுங்களுக்கு அந்த வாய்ப்பெல்லாம் கிடையாது. இப்ப இருக்குற மாதிரி மொபைலோட பயன்பாடு எல்லாம் அப்போ இல்ல.

அதனால அன்னைக்கு சன் டிவி, விஜய் டிவில போடுற புதுப் படங்கள பாக்குறதுதான் எங்களுடைய பொழுதுபோக்காக இருக்கும். பகல்ல இருந்தே பட்டாசு எல்லாம் வெடிப்பாங்க. ஆனா ஒரு 6 மணிக்கு மேல எல்லாரும் ஒன்னா சேர்ந்து பட்டாசு வெடிச்சு தீபாவளியை சிறப்பா கொண்டாடி முடிச்சிருவாங்க. அடுத்த நாள் அம்மா, அப்பாங்களுக்கு எல்லாம் லீவா இருக்கும். ஆனா எங்களுக்கு மட்டும் ஸ்கூல். ஒரு பொறாமையோடையும், வருத்தத்தோடையும் ஸ்கூலுக்கு கிளம்பி போயிருவோம். அந்த தீபாவளி நாட்கள மறக்கவே முடியாது.

அந்த எஸ்டேட்ல நாங்க இருந்தப்போ சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட ஏங்கி இருக்கோம். அங்க இருந்து கஷ்டப்பட்டு படிச்சதுனால மட்டும்தான் நானும் எங்க அண்ணனும் அந்த திறந்தவெளி கூண்டுல இருந்து வர முடிஞ்சது. எங்க அப்பா அம்மாவுக்கு தீபாவளிகள் இப்ப ஒரு விடுதலையா தெரியல. அது ஒரு கொண்டாட்டமா மாறிடுச்சு. அதனாலதான் இந்த தீபாவளி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஆனாலும் ஒரு ஓரத்துல அந்த எஸ்டேட்டோட தேயிலை வாசனை இன்னும் ஒட்டிதான் இருக்கு. இன்னும் அங்க எங்களை மாதிரி நிறைய பேர் இருக்காங்க. அவங்களோட தீபாவளியும் கொண்டாட்டமா மாறணும்.

``அந்த நாளும், மகிழ்ச்சியும்... அப்படியே இருந்திருக்கலாம்'' - குடும்ப தலைவியின் பகிர்வு| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

`எனக்கு அப்பாவும் இல்லை, இப்போது அம்மாவும்...' - 4 நாள்கள் வீட்டுக்குள் சடலமாக கிடந்த தாய், மகன்!

தஞ்சாவூர், முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி (59). இவரது மகன் ராகுல் (29), இவர் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, சொந்தமாக தொழில் செய்து வந்தார். 17 வருடங்களுக்கு முன்பு ஈஸ்வரியின் கணவர் இறந்து விட்டா... மேலும் பார்க்க

லாஃப்ரா யாழினி ஐபிஎஸ் –அத்தியாயம் 1 | தொடர்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க