Fengal Cyclone: உருவானது ஃபெங்கல் புயல்... 7 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்; சென்னைக்கு என்ன?
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று கடந்த சில மணிநேரங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதுகுறித்து பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலசந்திரன், ``இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் காரைக்காலுக்கும் மகாபலிபுரத்துக்கும் நடுவே புதுவைக்கு அருகே கரையைக் கடக்கும்.
இதன்காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலான மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்." என்று தெரிவித்திருந்தார். முக்கியமாக, இந்தப் புயல் கரையைக் கடக்கின்ற நேரத்தில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று பாலசந்திரன் எச்சரித்தார்.
மேலும், இன்று செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் ரெட் அலர்ட்டும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்றிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்தப் புயலுக்கு `ஃபெங்கல்' எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்க, நாளை (நவம்பர் 30) 7 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் மற்றும் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய அறிக்கையில், ``சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்." என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...