நெருங்கும் புயல்; கொட்டித் தீர்க்கும் கனமழை; சென்னையைச் சூழும் வெள்ளநீர் - நிலவர...
Fengal: `போக்கு காட்டும் ஃபெஞ்சல்... கடந்து வந்த பாதை டு லேட்டஸ்ட் அப்டேட்'| Full Detail
'வருமா...வராதா' என்று ஆரம்பத்தில் இருந்து ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கும் ஃபெஞ்சல் புயலின் கடந்து வந்த பாதை இதோ...
டெல்டாவில் மழை...
இந்த வாரம் திங்கள்கிழமை, வானிலை ஆய்வு மையம் முதன்முதலாக ஃபெஞ்சல் புயல் குறித்து, "அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழ்நாடு மற்றும் இலங்கையை நோக்கி நகரும். இதனால், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம்" என்று அறிவித்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என பரபரப்பாகியது டெல்டா மாவட்டங்கள்.
அப்போது, அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 1,000 கி.மீ தூரத்தில் 30 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.
மேலும், சென்னை, எண்ணூர், நாகப்பட்டணம் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இரவு...
பின்னர், அன்று இரவு, "வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும். தற்போது 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து சென்னையிலிருந்து 940 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. வடகிழக்கு திசையில் நகர்ந்து இலங்கை தமிழ்நாடு கடல் பகுதியை நோக்கி வரும்" என்று மீண்டும் வானிலை மையம் அறிவித்தது.
அடுத்த நாளான நவம்பர் 26-ம் தேதி, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யம் சன்னதி பகுதியில் 50 கி.மீட்டரும், திருச்செந்தூரில் 80 கி.மீட்டரும் கடல் உள்வாங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
ஃபெஞ்சல்...
அப்போது காற்று அழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 27-ம் தேதி புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டது. அப்போது சவுதி அரேபியா பரிந்துரைத்த பெயரான 'ஃபெஞ்சல்' எனப் புயலுக்கு பெயரிடப்பட்டது.
புயலை முன்னிட்டு, நவம்பர் 27-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது மற்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கடப்பதற்கு முன்பே வலுவிழக்கும்...
நவம்பர் 27-ம் தேதி காற்று அழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்று முன்னர் கணித்திருந்த நிலையில், புயல் கடலை கடக்கும் முன்பே வலுவிழக்கும் என்றும், புயல் உருவாக 12 மணி நேரம் தாமதம் ஆகும் என்றும் வானிலை மையம் கூறியது. இதனால், 4 மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.
புயல் உருவாக்குவதில் கொஞ்சம் கொஞ்சமாக தாமதம் ஏற்பட்டு வியாழக்கிழமை காற்று அழுத்த தாழ்வு மண்டலம் எங்கேயும் நகராமல் ஒரே இடத்தில் நின்றது. இதற்கு முன்பும், இந்தக் காற்று அழுத்த தாழ்வு மையம் நகராமல் நின்றிருந்தது.
புயல் இல்லை
அதன் பின்னர், வியாழன் அன்று மதியம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மீண்டும் வலுவிழக்கும். ஆனால், வலுவான புயலாக மாறாது என்று வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.
தொடர்ந்து அந்தர் பல்டி அடித்து வந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம், இந்த கணிப்பையும் பொய்யாக்கியது. இதனையடுத்து, வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக மாறி புதுச்சேரி மற்றும் மாமல்லாபுரம் இடையில் வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை நாளை கடக்கும் என்று நேற்று காலை வானிலை மையம் தெரிவித்தது.
இதனால், புயல் கரையை கடக்கும் பகுதிகளில் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மாமல்லாபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று இன்று காலை புதிய அப்டேட் கொடுத்தது வானிலை மையம்.
அப்டேட்
இந்த நிலையில், தற்போது, புயல் நாளை கூட கரையை கடக்கலாம் என்று தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. ஆனால், இதை வானிலை மையம் இன்னும் உறுதி செய்யவில்லை.
புயல் மரக்காணத்திற்கு அருகே கரையை கடக்கலாம் என்பதும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 90 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதும் வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.