Gukesh: 6 வயதில் வேடிக்கை பார்த்தவன்; இன்று உலக சாம்பியன் - குகேஷ் சாதித்த கதை
2013 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அது. சென்னையில் வைத்துதான் போட்டி நடக்கிறது. விஸ்வநாதன் ஆனந்த்துக்கு எதிராக மேக்னஸ் கார்ல்சன் மோதினார். பரபரப்பாக சென்ற அந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 5 முறை உலக சாம்பியனான ஆனந்தை வீழ்த்தி கார்ல்சன் வெல்கிறார். செஸ் உலகில் கார்ல்சனின் சகாப்தம் இங்கிருந்துதான் தொடங்கியது.
இந்தப் போட்டியை தன் தந்தையுடன் சென்று குகேஷ் நேரில் பார்த்தபோது அவருக்கு 6 வயதுதான். கூட்டத்தில் ஆனந்தையும் கார்ல்சனையும் பார்க்க முடியாமல் இரண்டு பெருவிரல்களை மட்டும் ஊனி எக்கி நின்றுபார்த்த அந்த குகேஷ்தான் இப்போது உலக சாம்பியன் ஆகி நிற்கிறார்.
18 வயதில் ஒரு வீரர் உலக சாம்பியன் ஆவது அத்தனை எளிதான விஷயமல்ல. 130 ஆண்டுகளுக்கு மேலாக நீளும் உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் இவ்வளவு இளம் வயதில் எந்த வீரரும் சாம்பியன் ஆனதில்லை. இதற்கு முன் ரஷ்யாவின் கேரி கேஸ்பரோவ் அனதோலி கார்போவை வீழ்த்தி 22 வயதில் சாம்பியனாகியிருக்கிறார். அந்த சாதனையை குகேஷ் இப்போது முறியடித்திருக்கிறார். ஒரு உலக சாம்பியன்ஷிப்பை வெல்வதென்பது உண்மையிலேயே இமயமலையில் ஏறுவதைப் போன்றதுதான்.
ஏனெனில், இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிப்பெற முதலில் கேண்டிடேட்ஸ் சுற்றுக்குத் தகுதிப்பெற்று அதில் வெல்ல வேண்டும். கேண்டிடேட்ஸ் சுற்றில் உலகின் தலைசிறந்த 8 வீரர்கள் ஆடுவார்கள். உலகக்கோப்பையை வென்றவர்கள், FIDE Circuit போட்டிகளில் வென்றவர்கள், தரவரிசையின் அடிப்படையில் என பல கூறுகளின் அடிப்படையில்தான் இந்த கேண்டிடேட்ஸில் ஆடும் 8 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். குகேஷ் கேண்டிடேட்ஸில் ஆடிய போது அவரோடு பேபியானோ கருவானா, ஹிக்காரு நாக்கமுரா, இயான் நெப்போம்னியாச்சி என தலைசிறந்த வீரர்கள் போட்டி போட்டனர்.
இன்னொரு தமிழக வீரரான பிரக்ஞானந்தாவும் அந்த கேண்டிடேட்ஸில் கலந்துகொண்டிருந்தார். அந்த வீரர்கள் அத்தனை பேரையும் விட சிறப்பாக ஆடி முதலிடத்தை பிடித்துதான் குகேஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தார்.
அப்போதிருந்தே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மீது ஆர்வம் கூடிவிட்டது. மேக்னஸ் கார்ல்சன் இனி உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆடுவதில்லை என முடிவெடுத்த பிறகு கடந்த ஆண்டு இயான் நெப்போம்னியாச்சிக்கும் டிங் லிரனுக்கும் இடையே சாம்பியன்ஷிப் போட்டி நடந்திருந்தது. டை ப்ரேக்கர் வரை சென்ற அந்தப் போட்டியில் டிங் லிரன் சிறப்பாக ஆடி வென்று புதிய சாம்பியனானார்.
ஆனால், அந்த சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு டிங் லிரனின் பார்ம் ரொம்பவே மோசமானது. க்ளாசிக்கல் வகை போட்டிகளில் நிறைய தோல்விகளை சந்தித்தார். தோல்விகளை தாண்டி லிரன் அவரே தன் மீது ஒருவித 'Underdog' இமேஜை பூசிக்கொள்ள முயன்றார். 'நான் மனரீதியாக சோர்வாக இருக்கிறேன். நான் வலிமையாக இல்லை. குகேஷூக்கு எதிராக என்னால் முன்பு போல ஆட முடியுமா என தெரியவில்லை.' என்று அவரே தன்னைப் பற்றி அவ்வளவு குறைவான சுயமதிப்பீட்டோடு பேசிக்கொண்டிருந்தார். உலக சாம்பியன்ஷிப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு நடந்த செஸ் ஒலிம்பியாடில் குகேஷூக்கு எதிராக ஆடுவதையும் தவிர்த்திருந்தார்.
இதையெல்லாம் வைத்து இந்த சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாகவே ஒரு 'Perception' உருவாக தொடங்கிவிட்டது. அதாவது, இந்த சாம்பியன்ஷிப்பை குகேஷ்தான் வெல்லப்போகிறார் என பலரும் கணித்தனர். கேரி கேஸ்பரோவ், மேக்னஸ் கார்ல்சன் போன்ற ஜாம்பவான்களே குகேஷ்தான் பேவரைட் என கணித்தனர்.
ஆனால், டிங் லிரன் செய்திருந்தது ஒருவித ஸ்ட்ராட்டஜி. ஒருவித மைண்ட் கேம் என்று கூட சொல்லலாம். பதுங்கி பாயும் யுக்தி. தன் மீதான எதிர்பார்ப்புகள் அத்தனையையும் ஜீரோ ஆக்கிவிட்டு அத்தனையையும் குகேஷ் தலையின் மீது ஏற்றி வைக்கும் வியூகம். இதை குகேஷ் போட்டிக்கு முன்பே கணித்திருந்தார். 'டிங் லிரன் அப்படியெல்லாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அவரின் திறன் என்ன அவர் எப்படியெல்லாம் ஆடக் கூடியவர் என்று எனக்குத் தெரியும்.' எனக் கூறிவிட்டுதான் இந்த சாம்பியன்ஷிப் போட்டிக்குள்ளேயே வந்தார்.
குகேஷின் இந்த மனநிலைக்கு பின்னால் பேடி அப்டன் இருந்தார் என்பதையும் மறுக்க முடியாது. பேடி அப்டன் விளையாட்டுலகில் 'Mental Health' சார்ந்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடியவர். 2011 இல் உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியப் பங்காற்றியிருந்தார். பி.வி.சிந்துவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். சமீபத்தில் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியுடனும் இணைந்து பணியாற்றியிருந்தார். வெற்றி, தோல்விகளை எப்படி கையாள வேண்டும். அழுத்தமான சூழல்களில் ஒரு வீரர் எப்படி நிதானமாக செயல்பட வேண்டும் என்பது போன்ற மனநலன் சார்ந்த விஷயங்களை கற்றுக்கொடுப்பவர். அந்த பேடி அப்டனிடம் செஸ் உலக சாம்பியன்ஷிப்புக்காக குகேஷ் பயிற்சிக்கு சென்றார். டிங் லிரன் உருவாக்கிய 'Underdog' இமேஜை மனதில் வைத்துதான் குகேஷை பேடி ட்ரெய்ன் செய்தார். ஒருவேளை லிரன் முழுபலத்துடன் இயல்பான மனநிலையோடு வந்தால் எவ்வளவு தீர்க்கமாக ஆடுவார் என்பதை கணித்து அதற்கேற்ற வகையில்தான் குகேஷை பேடி மனரீதியாக தயார்ப்படுத்தினார்.
குகேஷூம் பேடி அப்டனும் எதிர்பார்த்ததை போல முதல் சுற்றிலேயே தன் சுயரூபத்தை லிரன் வெளிக்காட்டினார். கணிப்புகளை மீறி சிறப்பாக ஆடி முதல் சுற்றையே லிரன் வென்றார். சொல்லப்போனால், தோல்வியுடன்தான் உலக சாம்பியன் பட்டத்தை நோக்கிய பயணத்தையே குகேஷ் தொடங்கினார்.
ஆனால், குகேஷின் முதல் சுற்று தோல்வியுமே அவ்வளவு பெரிதாக விமர்சிக்கப்படவில்லை. ஏனெனில், லிரன் சாம்பியன்ஷிப்பில் ஆடிய அனுபவமிக்கவர். மேலும் அவர் மீதான எதிர்பார்ப்புகள் குறைவு. அதேநேரத்தில் குகேஷூக்கு இது முதல் சாம்பியன்ஷிப். மேலும், குகேஷ் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளும் இருந்தது. 2013 இல் கார்ல்சனும் இதே நிலையில்தான் இருந்தார். ஆனந்துக்கு எதிராக ஆடியபோது கார்ல்சனுக்கு அது முதல் சாம்பியன்ஷிப் போட்டி.
'எப்போதுமே முதல் சாம்பியன்ஷிப்பில் ஆடுபவர்களுக்கு ஆரம்பத்தில் ஒருவித தடுமாற்றம் இருக்கும். கார்ல்சன் சென்னையில் ஆடிய போதும் அப்படித்தான் இருந்தார். முதல் மூன்று சுற்றுகளில் அசௌகரியமாகவே உணர்ந்தார். சில சமயங்களில் காய்களை நகர்த்தும் போது கைத்தவறி கீழே போட்டுவிடுவார். அந்தளவுக்கு பதற்றத்தோடு இருந்தார்.' என மேக்னஸ் கார்ல்சனின் தந்தை ஹென்றிக் கார்ல்சன் ஒரு முறை பேசியிருக்கிறார்.
அந்தத் தொடக்க தடுமாற்றங்களுக்குப் பிறகு குகேஷ் மீண்டெழுந்துவிட்டார். மூன்றாவது சுற்றை வென்றார். அடுத்தடுத்து 7 சுற்றுகளும் டிரா ஆனது. பெரும்பாலான சுற்றுகளில் குகேஷ் எளிதாக டிராவுக்கு ஒத்துக்கொள்ளவும் இல்லை. வெற்றிக்காக போராடினார். 11 வது சுற்றை வென்று முன்னிலையும் பெற்றார். அப்போதும் லிரன் விடவில்லை. 12 வது சுற்றை வெல்வேன் என சவால்விட்டு சொன்னதைப் போலவே அந்தச் சுற்றை வென்று போட்டியை மீண்டும் சமன் செய்தார். 13 வது சுற்று டிரா. 14 வது மற்றும் இறுதிச்சுற்றும் டிராவை நோக்கி செல்வதைப் போன்றே இருந்தது. 4 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த அந்த ஆட்டத்தில் End Game இல் சிறப்பாக செயல்பட்டு குகேஷ் வெல்லவே சாம்பியனாகிவிட்டார்.
'2013 இல் கார்ல்சனிடம் ஆனந்த் சாம்பியன் பட்டத்தை இழந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் இந்தப் பட்டத்தை மீண்டும் இந்தியாவுக்கே வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதுதான் என்னுடைய கனவாகவே இருந்தது.' என குகேஷ் உலக சாம்பியனான பிறகு பேசியிருந்தார். எப்பேற்பட்ட கனவு இது. 6 வயதில் ஒரு சிறுவன் தனக்குள் நிறுத்திக் கொண்ட கனவும் தீர்க்கமும் இன்று உலக அரங்கில் இந்தியாவின் புகழை உச்சியில் அமர்த்தியிருக்கிறது. ஒரு தலைமுறைக்கான பெரும் ஊக்கத்தை குகேஷ் கொடுத்திருக்கிறார்.
வாழ்த்துகள் 'உலக சாம்பியன்' குகேஷ்!