Gukesh: குகேஷிடம் லிரன் வேண்டுமென்றே தோற்றாரா? - குற்றம்சாட்டும் ரஷ்ய செஸ் கூட்டமைப்பு
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர் டிங் லிரனை இந்திய வீரர் குகேஷ் தோற்கடித்திருந்தார். இதன் மூலம் செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே இளம் வயது சாம்பியன் எனும் பெருமையையும் குகேஷ் பெற்றார். இந்நிலையில், குகேஷிடம் சீன வீரர் லிரன் வேண்டுமென்றே தோற்றதைப் போல் உள்ளதாக ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
14 சுற்றுகளைக் கொண்டதாக உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்திருந்தது. இதில் 13 சுற்றுகளின் முடிவில் குகேஷூம் லிரனும் தலா 6.5 புள்ளிகளோடு சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த 14 வது சுற்று ஒரு கட்டம் வரைக்கும் டிராவை நோக்கி செல்வதைப்போன்றே தோன்றியது. ஆனால், 55 வது நகர்த்தலாக லிரன் தன்னுடைய யானையை f2 க்கு நகர்த்தினார். இந்த நகர்வு குகேஷூக்கு சாதகமாக முடிந்தது. அடுத்த மூன்று நகர்வுகளிலேயே குகேஷ் வெற்றிப் பெற்று சாம்பியனாகிவிட்டார்.
லிரன் செய்த அந்த 55 வது நகர்வை முன்வைத்துதான் ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் தலைவர் பிலதோவ் இப்போது குற்றம்சாட்டியிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அதன்படி அவர் கூறியிருப்பதாவது, "14 வது சுற்றின் முடிவுகள் செஸ் ஆர்வலர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பலத்த சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. அப்படியொரு வலுவான நிலையிலிருந்து ஒரு முதல் தர வீரரால் கூட லிரன் செய்ததைப் போன்ற தவறைச் செய்யமுடியாது. லிரலின் தோல்வி நிறைய கேள்விகளை எழுப்புகிறது. லிரனின் அந்த 55 வது நகர்வு பற்றி FIDE அமைப்பு விரிவாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்." எனக் கூறுயிருக்கிறார்.
இதுசம்பந்தமான உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்