'இந்த பொண்ணுங்க அவ்வளவு உழைச்சிருக்காங்க!' - உருகும் இந்திய அணியின் பயிற்சியாளர்...
Ind vs SA : அதிரடி காட்டிய ஷெபாலி, ரிச்சா; 300 யை நெருங்கிய இந்தியா! - கோப்பையை வெல்லுமா?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி முடித்திருக்கிறது. சிறப்பாக ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 298 ரன்களை சேர்த்திருக்கிறது.

நவி மும்பையில் மழை பெய்ததால் போட்டி இரண்டு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாராதான் டாஸை வென்றிருந்தார். முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்திருந்தார். இது பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச். அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இமாலய இலக்கை எட்டி சாதனை படைத்திருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்து லாரா முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்திருக்கலாம்.
இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஷெபாலியும் ஸ்மிருதியும் ஓப்பனிங். இருவருமே மிகச்சிறப்பாக ஆடினர். மழை பெய்தும் பௌலர்களுக்கு பிட்ச் பெரிதாக உதவவில்லை. ஆரம்பத்திலிருந்தே இருவரும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அடித்து அடித்து ரன்ரேட்டை 6 க்கு மேலேயே வைத்திருந்தனர். ஷெபாலி சௌகரியமாக அடித்து ஆடியதால் ஸ்மிருதி அழுத்தமில்லாமல் இலகுவாக ஆடினார்.

முதல் 10 ஓவர்களில் 64 ரன்களை சேர்த்திருந்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 104 ரன்களை எடுத்தனர். இடது கை ஸ்பின்னர்களுக்கு இந்திய அணியின் பேட்டர்கள் கொஞ்சம் திணறுகின்றனர். இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதிய கடைசிப் போட்டியிலும் நிறைய விக்கெட்டுகளை இடதுகை ஸ்பின்னருக்கு விட்டிருப்பர். இந்தப் போட்டியிலும் முதல் விக்கெட்டாக ஸ்மிருதியின் விக்கெட்டை இடது கை ஸ்பின்னரான ட்ரையான் தான் எடுத்தார். ஸ்மிருதி 45 ரன்களில் வெளியேறினார். ஷெபாலி தொடர்ந்து அதிரடியாக ஆடினார். பெரிய சிக்சர்களையெல்லாம் அடித்தார்.
சதத்தை நோக்கி செல்வார் என எதிர்பார்க்கையில் 87 ரன்களில் காகாவின் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதன்பிறகு இந்தியாவுக்கு பெரிய பார்ட்னர்ஷிப்கள் வரவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. ஜெமிமா 24 ரன்களில் காகாவின் பந்திலும் ஹர்மன் 20 ரன்களில் லாபாவின் பந்திலும் அவுட் ஆகினர். ஆனால், இந்திய அணி பெரியளவில் தடுமாறவில்லை. தீப்தி சர்மா கடைசியில் நின்று அரைசதம் அடிக்க ரிச்சா கோஷ் அதிரடியாக 34 ரன்களை சேர்க்க, இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களை எடுத்தது.

நவி மும்பை பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச். இந்த பிட்ச்சில் 298 ரன்கள் கொஞ்சம் குறைவான ஸ்கோர் என்பது மிதாலி ராஜின் வாதம். என்ன நடக்கப்போகிறது? இந்தியா வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.













