செய்திகள் :

ITR Filing: ஆன்லைனில் செய்வது எப்படி, செய்யக்கூடாத தவறுகள், அபராதங்கள், வரிச் சலுகை... - முழு தகவல்

post image

வருமான வரிக் கணக்குத் தாக்கல் சீசன் வந்துவிட்டது.

எப்படி செய்ய வேண்டும்? என்னென்ன செய்ய வேண்டும்? தவறாகிவிட்டால் என்ன செய்வது?... - இப்படி ஏகப்பட்ட குழப்பங்களும், சந்தேகங்களும் உங்களது மூளையில் ஓடிகொண்டிருக்கும்.

இவைகளுக்கான பதில் தான் இந்தக் கட்டுரை!

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது எப்படி எனத் தொடங்கி என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்பது வரை A டு Z தகவல்களை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம் வாங்க...

வருமான வரி கணக்குத் தாக்கல்
வருமான வரி கணக்குத் தாக்கல்

நீங்களே ஆன்லைனில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது எப்படி?

> www.incometax.gov.in என்கிற வருமான வரி இணையதளத்திற்குள் செல்லவும்.

> முகப்பு பக்கத்தில் இருக்கும், 'Log in'-ஐ கிளிக் செய்து, உங்களது பான் எண் அல்லது ஏதேனும் ஒரு அரசு ஐ.டி நம்பரை உள்ளீடு செய்யவும். முதன்முறையாக, இந்த இணையதளத்திற்குள் வருபவர்கள் 'Register'-ஐ தட்டி, புதிதாக பதிவு செய்துகொள்ளலாம்.

> இப்போது ஓப்பன் ஆகும் பக்கத்தில், 'Assesment Year'-ல் '2025 - 2026'-ஐ க்ளிக் செய்யவும்.

> அடுத்ததாக, 'Select Mode of Filing'-ல் 'Online'-ஐ தட்டவும்.

> 'Start New Filing' என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.

> தனிநபர் (Individual), இந்து கூட்டுக் குடும்பம் (HUF), பிற (Others) என்று மூன்று ஆப்ஷன்கள் காட்டும். அதில், நீங்கள் தனிநபர் எனில் ‘Individual' என்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.

> இங்கே, உங்களது வருமான வரிப் படிவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் சம்பளதாரர்கள் எனில், 'ITR 1'-யும், மியூச்சுவல் ஃபண்ட் வருமானம், பங்கு வருமானம், வெளிநாட்டு வருமானம், விவசாய வருமானம் போன்ற வருமானம் உள்ளவர்கள் 'ITR 2'-யும் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து, 'Proceed'.

> இப்போது, 'Let's Get Started’-ஐ தட்டுங்கள்.

> அடுத்ததாக, நீங்கள் எதற்காக வருமான வரி தாக்கல் செய்கிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

> அடுத்த பக்கத்தில், அங்கே கொடுக்கப்பட்டுள்ள தனிநபர் விவரங்கள் சரியா என்பதை செக் செய்துகொள்ளவும். எதாவது மாற்றங்கள் இருந்தால், அதை இங்கேயே செய்துகொள்ளுங்கள். அடுத்து, 'Confirm'.

INCOME TAX | வருமான வரி தாக்கல்
INCOME TAX | வருமான வரி தாக்கல்

> இரண்டாவதாக இருக்கும் உங்களது மொத்த வருமானம் குறித்த விவரங்களை சரிபார்க்கவும்.

> மூன்றாவதாக இருக்கும் 'Total Deductions'-ஐ செக் செய்யவும்.

> 'Tax Paid' ஆப்ஷனில் நீங்கள் செலுத்திய TDS, TCS போன்ற விவரங்களை சரிபார்க்கவும்.

> 'Verify your tax liability details'-ல் வருமானக் கணக்கீடு மற்றும் வரிக் கணக்கீட்டை செக் செய்யவும்.

> இப்போது 'Proceed to Verification'-ஐ க்ளிக் செய்யுங்கள்.

> இப்போது ஓப்பன் ஆகும் பக்கத்தில், நீங்கள் செலுத்த வேண்டிய வரி விவரங்கள் வரும்.

> 'Preview and Submit the Return' க்ளிக் செய்யுங்கள்.

> இந்தப் பக்கத்தில் அனைத்துத் தகவல்களையும் சரிபாருங்கள்.

> இங்கே வருமான வரிப் படிவத்தை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

> 'Proceed to Validation'-ஐ க்ளிக் செய்யுங்கள்.

> 'Validation Successful' என வந்தப் பின் 'Proceed to Verification'-ஐ க்ளிக் செய்யுங்கள்.

> இங்கே 'e-Verify now'-ஐ தட்டுங்கள்.

> மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ பதிவிட்டுக் கொள்ளுங்கள்.

> அடுத்து, 'Submit'.

> இப்போது உங்களது வருமான வரித் தாக்கல் பிராசஸ் சக்சஸ். இங்கேயே உங்களது ரெசிப்டை டவுன்லோட் செய்யலாம் அல்லது உங்கள் மெயிலுக்கும் இந்த ரெசிப்ட் வரும்.

வருமான வரிக் கணக்கு தாக்கல்
வருமான வரிக் கணக்கு தாக்கல்

நானே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துகொள்வது நல்லதா?

சம்பளத்தைத் தவிர, பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகள் மற்றும் பிற வருமானங்கள் இல்லாதபட்சத்தில், நீங்களே தாராளமாக உங்களுடைய வருமான வரிக் கணக்குத் தாக்கலை செய்துகொள்ளலாம்.

இதெல்லாம் இருப்பவர்கள் ஆடிட்டர்கள், இ - ஃபைலிங் இணையதளங்கள், வருமான வரி நிபுணர்கள் ஆகிய ஆப்ஷன்களைப் பயன்படுத்தலாம்.

எப்போது கடைசி தேதி?

வழக்கமாக, ஜூலை 31-ம் தேதி தான் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதியாக இருக்கும்.

ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, இந்த ஆண்டு எளிமையான புதிய ஐ.டி.ஆர் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும், ஐ.டி.ஆர் போர்ட்டல் அப்டேட் செய்யப்பட்டதும் தான் முக்கிய காரணம்.

கடைசி தேதிக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால்...?

செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்கள், பிரிவு 139 (8A)-ன் கீழ், அடுத்த 48 மாதங்களுக்குள் அப்டேட்டட் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியும்.

48 மாதங்களுக்கு வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியுமானாலும், கூடுதலாக 60 - 70 சதவிகித வரி கட்ட வேண்டியதாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

தாமத வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்கு அபராதம் உண்டா?

நிச்சயம், உண்டு. ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் இருப்பவர்கள் ரூ.5,000-மும், ரூ.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பவர்கள், ரூ.1,000-மும் அபராதம் கட்ட வேண்டும்.

ஒருவேளை, வருமான வரி நிலுவை இருந்தால், பிரிவு 234A-ன் கீழ், தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கு வருமான வரி நிலுவைக்கு 1 சதவிகிதம் வட்டி கட்ட வேண்டும்.

வருமான வரி தாக்கல்
வருமான வரி தாக்கல்

வருமான வரிக் கணக்குத் தாக்கலில் தவறு செய்துவிட்டேனே... என்ன செய்வது?

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் போது, எதாவது தவறு செய்திவிட்டீர்கள். ஆனால், வருமான வரிக் கணக்குத் தாக்கல் கடைசி தேதி முடிந்த பிறகு தான், இது உங்களுக்கு தெரிய வருகிறது.

கவலையே பட வேண்டாம். அந்தத் தவறுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் திருத்திக்கொள்ள முடியும். இதற்கு திருத்தப்பட்ட வருமான வரித் தாக்கல் (Revised ITR) என்று பெயர்.

ஒருவேளை, அப்போதும் தவற விட்டுவிட்டால்...?

வருமான வரிக் கணக்குத் தாக்கலின் போது ஏற்பட்ட தவறுகளை, டிசம்பர் 31-ம் தேதிக்கு மேலும் திருத்தலாம். இதற்கு 'புதுப்பிக்கப்பட்ட வருமான வரித் தாக்கல் (ITR-Updated)' என்று கூறுவர்.

ஆனால், இதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது, வருமான வரிக் கணக்குத் தாக்கலில் ஏதாவது ரீஃபண்ட், உங்களுக்கு கிடைப்பதாக இருந்தால், அது கிடைக்காது.

இதையுமே, அடுத்த ஆண்டு, ஏப்ரல் 1-ம் தேதிக்குள் செய்து முடித்துவிட வேண்டும்.

'Verify' முக்கியம் பிகிலு!

தாமத வருமான வரி தாக்கல், திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல், புதுப்பிக்கப்பட்ட வருமான வரி தாக்கல் என எந்த வகை வருமான வரி தாக்கல் செய்தாலும், 30 நாட்களுக்குள் அதை வெரிஃபை (Verify) செய்யவது மிக அவசியம்.

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கு முன்பு...

நீங்கள் சம்பளதாரராக இருந்தால்... வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யப் போகிறீர்கள் என்றால், உங்கள் கையில் நிறுவனம் வழங்கிய படிவம் 16-ஐ வைத்துக்கொள்ள வேண்டும்.

வருமான வரி
வருமான வரி

இதில், மொத்தச் சம்பளம், தொழில் வரி (Professional Tax) வீட்டு வாடகைப் படி (House Rent Allowance - HRA), விடுமுறை பயணப் படி (LTA - Leave Travel Allowance) போன்ற விலக்குகள், TDS உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.

அதனால், அவற்றை செக் செய்ய எளிதாக இருக்கும்.

கூடவே, வரிச் சலுகை மூலதனங்களுக்கான ஆதாரங்களையும் வைத்துக்கொள்ளுங்கள்.

வருமான வரி தாக்கலில் செய்யக்கூடாத தவறுகள்...

வருமான வரி தாக்கலில் உண்மையைத் தவிர, பொய்களைச் சொல்லக் கூடாது.

ஒருவேளை நீங்கள் எதாவது பொய் சொல்லி, வருமான வரி அதை கண்டுபிடித்தால், உங்களைத் தேடி வருமான வரி நோட்டீஸும், அபராதமும் ஒன்று.

'Deduction' வேண்டுமென்பதற்காக, தேவையில்லாத பொய்களைச் சொல்லி, சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

இதற்கு அபராதம் உண்டு!

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது மிக மிக கவனம் தேவை. ஐ.டி.ஆர் படிவத்தை மாற்றி தாக்கல் செய்வது, தவறான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது போன்றவற்றிற்கு அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும், உங்களுக்கு வர வேண்டிய ரீஃபண்ட் தொகை உங்களுக்கு வந்து சேர, தாமதம் ஆகலாம். அதனால், வேண்டிய ஆவணங்களைத் தயார் செய்த பிறகு, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய அமர்வது நல்லது.

26AS மற்றும் ஆண்டு தகவல் அறிக்கை

26AS அறிக்கையில் குறிப்பிட்ட நிதியாண்டில் வரி செலுத்துபவரின் TDS, TCS பிடித்த விவரங்கள் மற்றும் அதிக மதிப்பில் வாங்கிய சொத்துகள் மற்றும் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பற்றிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

வருமான வரி
வருமான வரி

ஆண்டு தகவல் அறிக்கையில் ஒருவர் மேற்கொண்ட 57 விதமான பணப் பரிவர்த்தனைகள் மற்றும் செலவுகள் பற்றிய விரிவான விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

அதனால், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கு முன்பு, இதை எடுத்து வைத்துகொள்வது நல்லது.

இதை வருமான வரி இணையதளத்திற்கு சென்று Log in > e-File > View Form 26AS, View Annual Information Statement டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது, நீங்கள் செய்திருக்கும் முதலீடுகளைப் பார்த்து, முதலீடு செய்ய பெரிதாக உதவும்.

வரி ஏய்ப்பு செய்தால்...?

வருமானத்தை குறைவாக காட்டுவது (Concealing Income) மற்றும் வரி ஏய்ப்பு செய்வதற்கு (Tax Evaded) வருமான வரித் துறையால் அபராதம் விதிக்கப்படும்.

இந்த அபராதம் வரி ஏய்ப்பு செய்யும் தொகையின் 100 - 300 சதவிகிதத்திற்குள் இருக்கும். ரூ.25 லட்சத்திற்கு மேலான தொகையை வரி ஏய்ப்பு செய்தால், சிறைத் தண்டனைக் கூட கிடைக்கலாம்.

18 வயது கீழ் உள்ளவர்களும் வருமான வரி செலுத்த வேண்டுமா?

உடல் திறன், ஆற்றல் அல்லது அறிவு மூலம் ஈட்டும் வருமானத்திற்கு, படிநிலைகளுக்கு ஏற்ப, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்து, வரி கட்ட வேண்டும்.

இதில் சினிமா போன்ற விஷயங்களின் மூலம் ஈட்டும் வருமானம், விளையாட்டு, போட்டிகள் மூலம் பெறும் பரிசுகள் குறிப்பிடப்படுகிறது.

வருமான வரி
வருமான வரி

வருமான வரிச் சலுகை பெற வேண்டுமா?

காப்பீடு, கடன் போன்றவற்றிற்கு வரிச் சலுகைகள் உண்டு. இந்த ஆண்டிலிருந்து இந்தச் சலுகையைப் பெற கூடுதல் ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டியதாக இருக்கும்.

உதாரணத்திற்கு, ஆயுள் காப்பீட்டில் வரிச் சலுகை பெற காப்பீட்டு நிறுவனத்தின் பெயர், பாலிசி நம்பர் மற்றும் பிரீமியம் கட்டிய தேதிகளைத் தெரிவிக்கவேண்டும்.

வீட்டு வாடகைப் படிக்கு வருமான வரி விலக்குப் பெற, பணிபுரியும் நிறுவனத்தின் பெயர், வாடகை ரசீது ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆண்டு மொத்த வாடகைத் தொகை ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால், வீட்டு உரிமையாளரின் பான் நம்பரைத் தெரிவிக்க வேண்டும்.

இப்படி ஒவ்வொரு சலுகைக்கும் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். போலி ஆவணங்கள் மற்றும் பொய் சொல்லி வருமான வரி சலுகைகளைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடுகள்.

வருமான வரி கணக்கு
வருமான வரி கணக்கு

வருமான வரி சலுகை வரம்பு உயர்வு எப்போது அமலுக்கு வரும்?

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், வருமான வரி சலுகை வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது தான். ஆனால், அது இப்போது அமலுக்கு வராது.

அடுத்த ஆண்டு, தாக்கல் செய்யப்படும் வருமான வரி தாக்கலில் தான், இந்த வருமான வரி சலுகையைப் பெற முடியும். அதாவது, இந்தச் சலுகை 2025 - 26 நிதியாண்டிலிருந்து தான் தொடக்கம்.

நீங்க NRI-ஆ? 45 வயதில் ரிட்டையர் ஆகணுமா?

நீங்க ஒரு வெளிநாடு வாழ் இந்தியரா? உங்க வயது 40-க்குள்ளயா? இன்னும் 10-15 வருடங்களிலேயே ரிட்டையர் ஆகி, நீங்க நினைச்ச மாதிரி சந்தோஷமா செட்டில் ஆகலாம்னுசொன்னா உங்களால நம்ப முடியுதா?பொதுவா வெளிநாடு வாழ் இந... மேலும் பார்க்க

தினமும் ரூ.50 சேமித்தால், 12 மாதங்களில் ரூ.18,000 உங்கள் கையில்! - நீங்கள் பணக்காரராக டிப்ஸ்கள்!

'சிறுதுளி பெருவெள்ளம்' - இந்தப் பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். எடுத்த உடனேயே லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் நம்மால் காசை சேர்த்துவிட முடியாது. ஆனால், சின்ன சின்ன சேமிப்புகள் மூலம் நிச்சயம் லட்சங்க... மேலும் பார்க்க

நீங்க பிசினஸ் ஓனரா? சிறு குறு வணிகர்களுக்கான முதலீட்டு வழிகாட்டல்! - விகடன் 'லாபம்' சிறப்பு வெபினார்

ஹாய்! எப்படி இருக்கீங்க!நீங்க ஒரு பிசினஸ் ஓனரா?சம்பாதிக்கும் லாபம் அனைத்தையும் உங்க பிசினஸ்-லேயே மீண்டும் முதலீடு பண்றீங்களா?உங்களுடைய சுய நிதி நிர்வாகத்தை கவனிக்க நேரமில்லையா?உங்களின் பிசினஸ் லாபத்தை... மேலும் பார்க்க

LIC: இந்தியாவின் முதன்மை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற திரு. ஆர்.துரைசாமி

லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியாவின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநராக திரு.ஆர்.துரைசாமி பொறுப்பேற்றிருக்கிறார்.LIC | எல்ஐசி இந்திய அரசின் நிதியமைச்சகத்தின் நிதிச்சேவைகள் ... மேலும் பார்க்க

சென்னை ஊரப்பாக்கம், கௌரிவாக்கத்தில் தங்கமயிலின் 63 & 64வது கிளை திறப்பு!

தங்கமயிலின் 63 & 64வது கிளை சென்னை கௌரிவாக்கம் (gowriwakkam) ஊரப்பாக்கத்தில் (urapakkam) 06.07.2025 அன்று திறக்கப்பட்டது. கிளைகளை நிர்வாக இயக்குனர் பலராம கோவிந்ததாஸ், நிர்வாக இணை இயக்குனர்கள் பா ர... மேலும் பார்க்க

வெளிநாடு வாழ் இந்தியர்கள், 50 வயசுக்குள்ள ரிட்டையர் ஆவது எப்படி? - 'லாபம்' வழங்கும் வெபினார்!

ஹாய்! எப்படி இருக்கீங்க!"நிறைய பணம் வைத்திருப்பது முக்கியமல்ல. நாம் நினைத்தபடி சுதந்திரமாக வாழ்வதே முக்கியம்!" - யுவர் மணி ஆர் யுவர் லைஃப் புத்தகத்தில் இருந்துவாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இதயத்தோ... மேலும் பார்க்க