கடலூர்: `கடன் கொடுத்தால் அப்படிக் கூப்பிடுவியா..?' - சீறிய இளம்பெண்... அடித்துக்...
Kana Kandenadi: "சீரியல்ல நடிக்கணும்னு ஐ.டி வேலையை விட்டுட்டேன்" - 'கனா கண்டேனடி' டீம் பேட்டி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'கனா கண்டேனடி' சீரியலின் முக்கிய கதாபாத்திரங்களான ஜாய்சன் மற்றும் சைத்ராவிடம் பேசினோம். 'கனா கண்டேனடி' சீரியலில் அறிமுகமாகியிருக்கும் ஜாய்சன் அவரது முதல் சீரியல் அனுபவத்தைப் பற்றிப் பேசினார்.
அப்போது பேசியவர், "ஐ.டி துறையிலிருந்து தற்போது சீரியல் துறைக்கு வந்துள்ளதால் நான் இதை முழுவதுமாக லேர்னிங்காகத்தான் பார்க்கிறேன். இதற்கு முன்னாடி சில யூடியூப் சேனல்களிலும் ஷார்ட் ஃபிலிம்களிலும் நடிச்சிருக்கேன்.
என்னோட யூடியூப் அனுபவத்திற்கு சீரியல் பயணம் முழுவதுமாக வேற மாதிரி இருக்கு. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் கத்துக்கிட்டு இருக்கேன். சீரியல்ல நடிக்கணும்னு ஐ.டி வேலையை விட்டுட்டு ரிஸ்க் எடுத்துத்தான் வந்திருக்கேன்.

எனக்கு இந்த துறை பிடிச்சிருக்கிறதால, பண்ற எல்லாத்தையும் பிடிச்சு பண்றேன். எனக்கு சீரியல்ல பிராம்ப்டிங் கொஞ்சம் சரியாக வரல. எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் டைரக்டர்கூட பேசி அதைச் சரியாகப் பேசிடுவேன்.
இந்தச் சீரியல் டீம் நான் நடிக்கணும்னு என்னை செலக்ட் பண்ணினது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆடிஷன் வரும்போது நான் எதுவும் பெருசா எதிர்பார்க்கல.
இதுக்கு முன்னாடி பல ஆடிஷன் அட்டென்ட் பண்ணியிருக்கேன். ஆனா எதுலயும் ரிப்ளை வந்ததில்ல. ஆனா, இந்தச் சீரியல் ஆடிஷன் பண்றப்போ நான் நல்லா நடிக்கிறேன்னு பாராட்டுனாங்க. அப்போதான் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இந்தச் சீரியல்ல, வனஜா மேம்கும் எனக்கும் ஒரு நல்ல பாண்டிங் இருக்கும்.
மேம்கூட பேசும்போது, முன்னாடி எல்லாம் எப்படி சீரியல் எடுத்தாங்க, அப்போ சீரியல் துறை எப்படி இருந்தது, இப்ப எப்படி எடுக்கிறாங்க என்கிற வித்தியாசம், பிராம்ப்டிங்னு சீரியல் பற்றி நிறைய விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்தாங்க. அதெல்லாம் கேட்கும்போது ரொம்ப ஆச்சரியமா இருக்கும்.
விக்னேஷ் சாருக்கும் எனக்கும் ரொம்ப குறைவான சீன்ஸ்தான் இருக்கும். கிடைக்கிற டைம்ல அவர்கிட்ட பேசினா அப்போ, எந்த மாதிரி ஸ்கிரிப்ட் செலக்ட் பண்ணனும், எந்த மாதிரி கதைகள் பண்ணலாம், எந்த விஷயங்கள் எல்லாம் நம்ம முக்கியமா கத்துக்கணும்னு சொல்லுவார்.
அவருடனான கல்யாண எபிசோடுக்கு ரொம்பவே எதிர்பார்ப்பு மக்கள் கிட்ட இருந்தது. அது பற்றி மக்களே நேரடியாக எங்ககிட்ட வந்து கேள்விகள் கேட்டாங்க. இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு. அந்தச் சீனை சைத்ரா லீக் பண்ணிட்டாங்க. அந்தக் காட்சியின் பிடிஎஸ் புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துல பகிர்ந்துட்டாங்க" என ஜாலியாகப் பேசியவரைத் தொடர்ந்து சைத்ரா பேசினார்.
காவ்யாவாக நடிக்கும் சைத்ரா பேசியபோது, "தமிழ் சீரியல்ல நடிக்கணும்னு ரொம்ப நாளா முயற்சி பண்ணிட்டு இருந்தேன். நான் தெலுங்குல நடிச்ச சீரியல் ஒருங்கிணைப்பாளராக இருந்தவங்கதான் தமிழ்ல என்னோட புரொஃபைல் கொடுத்திருந்தாங்க. அவங்கதான் என் புரொஃபைல் விகடன்ல தேர்வாயிருக்குன்னு சொன்னாங்க.

அதுக்கப்புறம்தான், இந்தச் சீரியலுக்கான பயணம் தொடங்குச்சு. 'கனா கண்டேனடி' சீரியல், கல்யாண எபிசோட்ல இருந்து நல்ல பரபரப்பாகப் போகத் தொடங்குச்சு. ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும்போதே அந்தக் கோயிலுக்கு வந்த நிறைய பேர் 'உத்தமன்கூட கல்யாணம் நடந்ததா இல்ல தீபக்குடன் கல்யாணம் நடந்ததான்னு' ரொம்ப ஆர்வமா கேட்டாங்க.
எனக்கும் விக்னேஷ் சாருக்குமான சீன்ஸ் எப்பவுமே ரொம்ப பயங்கரமானதாகத்தான் இருக்கும். ஆனா, நிஜ வாழ்க்கையில அவர் ரொம்ப அன்பானவர். நான் தெலுங்குல சீரியல் பண்ணப்போ எனக்கு ஷெட்யூல் ரொம்ப பிஸியா இருக்காது. ஒரு வாரம் ஷூட்டிங் இருந்தால் ஒரு வாரம் பிரேக் கொடுப்பாங்க. தமிழ்ல 15 நாள் தொடர்ந்து ஷூட்டிங் நடக்கும். இப்பல்லாம் 15 நாட்களுக்கு மேலேயும் ஷூட்டிங் நடக்குது. தொடர்ந்து ஷூட்டிங் இருப்பதால, நாம அந்தக் கேரக்டராவே மாறிடுவோம்," என்கிறார்.





















.jpeg)