செறியூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் வழங்க ஈரான் சம்மதம்: இரு நாடுகளிடையே ...
Karuppu: "என்னை மிரட்டி என் நகையை திருடிய கதையைதான் 'கருப்பு' படத்தில்..." - ஆர்.ஜே. பாலாஜி
சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருக்கும் திரையரங்குகளுக்குத் தியேட்டர் விசிட் சென்று வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி. இந்நிலையில், நேற்று திண்டுக்கல் சென்றவர் அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் இனி நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, "எனக்கு நானே ஒரு கதாபாத்திரத்தை எழுதிக்கொள்ளவில்லை என்றால் எனக்காக வேறு யார் எழுதுவார்கள்?
நானே ஒரு படம் இயக்கிவிட்டு, அதில் என்னைத் தவிர வேறு யாரையாவது நடிக்க வைத்தால் எனக்கான வாய்ப்பை யார் தருவது? அப்படி எனக்காகவே பார்த்துப் பார்த்து எழுதிய கதாபாத்திரம்தான் 'பேபி கண்ணன்'.
இருந்தாலும், வேறு யாராவது எனக்காகக் கதைகள் எழுதினால், தாராளமாக நடிப்பேன். இந்தத் திரைப்படம் முடிந்த பிறகு நான் கதாநாயகனாக நடிக்கும் சில படங்கள் வரிசையில் உள்ளன.
எனவே, 'பேபி கண்ணன்' போன்ற சுவாரஸ்யமான, தனித்துவமான கதாபாத்திரங்களை யாராவது உருவாக்கினால், அதில் நான் கண்டிப்பாக நடிப்பேன்" என்றவர், 'கருப்பு' படத்தின் கதை உருவான விதம் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
"நான் ஒருமுறை பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு வழக்கம் நடைமுறையில் உள்ளது.
நம் வாழ்க்கையில் தீராத பெரிய பிரச்சினையோ அல்லது தீராத பகையோ இருந்தால், மனதார வேண்டிக்கொண்டு அம்மனுக்கு மிளகாய் அரைத்துத் தடவினால், சாமி உடனடியாக நியாயம் வழங்கும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. நான் எதேச்சையாக அந்தக் கோவிலுக்குச் சென்றபோது இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டேன்.

அதன் பிறகு, இந்தப் படத்தின் கதையை எழுதத் தொடங்கியபோது எனக்கு நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. ஒருமுறை நான் பேஸின் பிரிட்ஜ் சிக்னலில் இறங்கும்போது, மர்ம நபர்கள் சிலர் என் கழுத்திலும் வயிற்றிலும் கத்தியை வைத்து மிரட்டி, என் நகையை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்.
இதுகுறித்து நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். நீண்ட வருடங்களுக்குப் பிறகு நகையைக் கண்டுபிடித்தபோதிலும், என்னால் நீதிமன்றத்திற்கு அலைந்து அதை உடனடியாகத் திரும்பப் பெற முடியவில்லை. அதற்குப் பெரும் அலைச்சலைச் சந்திக்க வேண்டியிருந்தது.
அப்போதெல்லாம் நான் சினிமாவுக்குள் வருவேன் என்றே எனக்குத் தெரியாது. ஆனால், சினிமாவிற்கு வந்து 'எல்கேஜி' போன்ற படங்களை எடுக்கத் தொடங்கிய பிறகு, இந்தச் சம்பவத்தை ஏன் ஒரு திரைப்படமாக மாற்றக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது.
இருப்பினும், அந்தப் புள்ளியை மட்டும் வைத்துப் பார்க்கும்போது கதைக்கான ஐடியா மிகச் சிறியதாகவே இருந்தது. அதை எப்படிப் பெரிய அளவில் கொண்டு செல்வது என்று தெரியவில்லை.

அப்போதுதான் திடீரென ஒரு யோசனை மின்னியது. மாசாணியம்மன் கோவிலில் மிளகாய் அரைக்கும் அந்த நம்பிக்கையும் என் மனதிற்குள் வந்தது. அந்தச் சம்பவத்தை இணைத்து ஒரு கதையை உருவாக்கினால் என்ன என்று தோன்றியது.
அப்படித்தான் 'கருப்பு' படத்தின் அடிப்படைக் கரு உருவானது. எல்லாவற்றிற்கும் கடவுள்தான் காரணம். அவர்தான் இந்த யோசனையை என் மனதில் தோற்றுவித்தார். இன்று இந்த அளவிற்குப் பிரமாண்டமான வெற்றியாக மாற்றியதும் அவர்தான்." எனக் கூறியிருக்கிறார்.




















