Bihar Results: 243-க்கு கட்சிகள் எடுத்த மார்க் எவ்வளவு? 2020-க்கும் 2025-க்கும் ...
Modi: "காங்கிரஸ்-முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக (MMC) மாறிவிட்டது" - மோடி
பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படாத சூழலில் NDA 200+ தொகுதிகளைக் கைப்பற்றுமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.
இந்த மிகப் பெரிய வெற்றியைத் கொண்டாடும் விதமாக டெல்லியில் உள்ள பாஜக அலுவகலத்தில் நடந்த கூட்டத்தில் தனது துண்டை தூக்கி சுழற்றி உற்சாகத்தை வெளிப்படுத்தினார் மோடி.
முஸ்லீம் மற்றும் யாதவ் - MY சூத்திரம் அழிக்கப்பட்டது
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவைத் தொடர்ந்து உரையாற்றிய மோடி, "ஜெய் சாத்தி மையா (வட இந்திய கடவுளை வாழ்த்தும் முழக்கம்) இது ஒரு மிகப்பெரிய வெற்றி, மகத்தான நம்பிக்கை, பீகார் மக்கள் தங்கள் தரத்தை முழுமையாக உயர்த்தியுள்ளனர்..." எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார்.
தொடர்ந்து, "...நாங்கள் மக்களின் ஊழியர்கள். எங்கள் கடின உழைப்பால் மக்களை மகிழ்வித்து வருகிறோம், மக்களின் இதயங்களை கொள்ளையடித்து வருகிறோம். அதனால்தான் முழு பீகாரும் 'பிர் ஏக் பார் என்டிஏ சர்க்கார்' (மீண்டும் ஒருமுறை NDA அரசு) என்று கூறியுள்ளது..." எனப் பேசினார்.
எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசியவர், "பீகார் தேர்தல்களில் நான் ஜங்கிள் ராஜ் மற்றும் கட்டா சர்க்கார் (லல்லு பிரசாத் யாதவ்வின் ஆட்சியை விமர்சிக்கும் சொற்கள்) பற்றிப் பேசியபோது, ஆர்ஜேடி கட்சி எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அது காங்கிரஸ் மக்களை காயப்படுத்தியது. இன்று, கட்டா சர்க்கார் ஒருபோதும் பீகாருக்குத் திரும்பாது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்... பீகார் மக்கள் விக்ஸித் பீகாருக்கு (வளர்ச்சியடைந்த பீகார்) வாக்களித்துள்ளனர்..." என்றார்.
தொடர்ந்து, "பீகாரில் உள்ள சில கட்சிகள் MY (முஸ்லீம் மற்றும் யாதவ்) என்ற சமாதான சூத்திரத்தை உருவாக்கியிருந்தன. ஆனால் இன்றைய வெற்றி ஒரு புதிய நேர்மறையான MY சூத்திரத்தை வழங்கியுள்ளது, அதுதான் மகிளா (பெண்கள்) மற்றும் யூத் (இளைஞர்கள்). இன்று, பீகார் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும், இதில் ஒவ்வொரு மதத்தையும் ஒவ்வொரு சாதியையும் சேர்ந்த இளைஞர்களும் அடங்குவர். அவர்களின் ஆசை, அவர்களின் அபிலாஷை மற்றும் அவர்களின் கனவுகள் காட்டு ராஜ் மக்களின் (எதிர்க்கட்சிகளைக் குறிப்பிடுகிறார்) பழைய வகுப்புவாத MY சூத்திரத்தை முற்றிலுமாக அழித்துவிட்டன..." என்றார்.
"தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது" - Modi
பிற மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்றது குறித்து, "ஜம்மு காஷ்மீரில் உள்ள நக்ரோட்டா மற்றும் ஒடிசாவில் உள்ள நுவாபாடா மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தலில் பாஜகவின் வெற்றியை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இன்றைய வெற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைத்தது மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி. இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கிடைத்த வெற்றி இது.
இந்தத் தேர்தல் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வாக்குப்பதிவு அதிகரித்து வருவது, தாழ்த்தப்பட்ட மற்றும் சுரண்டப்படும் மக்கள் வாக்களிப்பது அதிகரித்துள்ளது தேர்தல் ஆணையத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்." எனப் பேசினார்.
மேலும் அவர், "ஒரு காலத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட அதே பீகார் இது. நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணிக்கு முடிவடையும். ஆனால் இந்த தேர்தலில், பீகாரில் உள்ள மக்கள் பயமின்றி, உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாக்களித்துள்ளனர்.
காட்டு ராஜ்ஜியத்தின் போது பீகாரில் என்ன நடந்தது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். வாக்குச் சாவடிகளில் வன்முறை வெளிப்படையாக நடந்தது. வாக்குப் பெட்டிகள் சூறையாடப்பட்டன. இன்று, அதே பீகார் வாக்குப்பதிவில் சாதனை காண்கிறது. அனைவரின் வாக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தங்கள் விருப்பப்படி வாக்களித்துள்ளனர்..."
அவர்கள் பீகார் மக்களை மதிக்கவில்லை
தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியை தாக்கியவர், "பீகார் மக்கள் இந்தியாவின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளனர். ஆனால் பல தசாப்தங்களாக நாட்டை ஆண்டவர்கள் எப்போதும் பீகார் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்கினர், பீகாரை அவதூறு செய்தனர். அவர்கள் பீகாரின் புகழ்பெற்ற கடந்த காலத்தையோ, அதன் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தையோ, அதன் மக்களையோ மதிக்கவில்லை...

பீகார் இந்தியாவிற்கு ஜனநாயகத்தின் தாய் என்ற பெருமையை அளித்த பூமி... பொய்கள் தோற்கின்றன, மக்களின் நம்பிக்கை வெல்லும் என்பதை பீகார் மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளது. ஜாமீனில் வெளியே வருபவர்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பதை பீகார் தெளிவுபடுத்தியுள்ளது.
...கடந்த ஆண்டு, நாட்டு மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக NDA-க்கு தங்கள் ஆணையை வழங்கினர். இது நாட்டின் நம்பிக்கை மற்றும் நாட்டு மக்களின் ஆசீர்வாதத்தால் கிடைத்தது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களிலும் நாங்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றோம்... ஹரியானா, தொடர்ந்து மூன்றாவது முறையாக சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்தது. சத்ரபதி சிவாஜி மகாராஜ், பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் வீர் சாவர்க்கரின் புனித பூமியான மகாராஷ்டிராவில் நாங்கள் மகத்தான வெற்றியைப் பெற்றோம். மகாராஷ்டிரா எங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறச் செய்தது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றோம். இன்று, கிராமப்புறங்களில் பெரிய மக்கள்தொகை கொண்ட பீகாரில், நாங்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளோம்." என்றார்.
காங்கிரஸ் MMC-முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக மாறிவிட்டது
தொடர்ந்து, "முன்னதாக, பீகாரில் மறுவாக்குப்பதிவு நடைபெறாத தேர்தல் எதுவும் இல்லை. உதாரணமாக, 2005 க்கு முன்பு, நூற்றுக்கணக்கான இடங்களில் மறுவாக்குப்பதிவு நடந்தது. 1995 ஆம் ஆண்டில், 1500 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்தது. ஆனால் காட்டு ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தவுடன், நிலைமை மேம்படத் தொடங்கியது, மேலும் இந்தத் தேர்தலின் இரண்டு கட்டங்களிலும், எங்கும் மறுவாக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த முறை, வாக்குப்பதிவு அமைதியாக இருந்தது..." என்றார்.
காங்கிரஸுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர், "இன்று, காங்கிரஸ் MMC-முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக மாறிவிட்டது, இப்போது காங்கிரஸின் முழு நிகழ்ச்சி நிரலும் இதைச் சுற்றியே உள்ளது, எனவே, காங்கிரஸுக்குள்ளும், இந்த எதிர்மறை அரசியலால் சங்கடப்படும் ஒரு தனி பிரிவு உருவாகி வருகிறது... காங்கிரஸில் மற்றொரு பெரிய பிளவு ஏற்படக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன்...
காங்கிரஸ் தனது எதிர்மறை அரசியலில் அனைவரையும் மூழ்கடித்து வருவதை அதன் கூட்டணி கட்சிகள் கூட புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளன. அதனால்தான், பீகார் தேர்தலின் போது, காங்கிரசின் 'நாம்தார்' (குடும்ப பெயரால் அறியப்படுபவர் - ராகுல் காந்தியைக் குறிப்பிடுகிறார்.) பீகார் தேர்தலில் குளத்தில் குளிப்பதன் மூலம் தன்னையும் மற்றவர்களையும் மூழ்கடிக்கப் பழகி வருவதாகக் கூறினேன்...
இந்த மேடையிலிருந்தே காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை நான் எச்சரித்துள்ளேன். காங்கிரஸ் ஒரு சுமை என்று நான் சொன்னேன். காங்கிரஸ் என்பது அதன் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கியை விழுங்கி மீண்டும் ஆட்சிக்கு வர விரும்பும் ஒரு ஒட்டுண்ணி..." என்றார்.
2026 மேற்கு வங்க தேர்தல் பற்றி பேசியவர், "கங்கை பீகார் வழியாகப் பாய்ந்து வங்காளத்தை அடைகிறது. வங்காளத்தில் பாஜகவின் வெற்றிக்கு பீகார் வழி வகுத்துள்ளது. வங்காள சகோதர சகோதரிகளையும் நான் வாழ்த்துகிறேன். இப்போது, உங்களுடன் சேர்ந்து, மேற்கு வங்காளத்திலிருந்தும் காட்டு ராஜ்ஜியத்தை பாஜக வேரோடு பிடுங்கி எறியும்.
நான் மீண்டும் பீகாரின் ஒவ்வொரு வாக்காளருக்கும் நன்றி கூறுகிறேன்." எனப் பேசினார். பிரதமர் பேச்சை முடிக்கும்போது அவரது ஆதரவாளர்கள் வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜே முழக்கங்களை முழங்கினர்.














