Nitin Gadkari: ``என் முகத்தை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன்" சாலை விபத்து குறித்து நிதின் கட்கரி வேதனை
`பல விஷயங்கள் மாற வேண்டும்..'
நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் சாலை விபத்துகள் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சாலை போக்குவத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ``இப்போது இருக்கும் சூழலில் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பதையே மறந்துவிடுங்கள். விபத்துகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன். சாலை விபத்துகுறித்து நடக்கும் சர்வதேச மாநாடுகளில் என் முகத்தை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன்.
ஆனால், நான் முதல்முறை அமைச்சராக பதவியேற்றபோது, சாலை விபத்துக்களை 50 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்பதுதான் என் குறிக்கோளாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என் குடும்பமும் ஒரு விபத்தை சந்தித்தோம். கடவுளின் கருணையால், அதில் உயிர்பிழைத்தோம். விபத்துப்பற்றி எனக்கு தனிப்பட்ட அனுபவம் இருக்கிறது என்பதால் சொல்கிறேன், இந்தியாவில் மனித நடத்தைகள் மேம்படுவதற்கு பல விஷயங்கள் மாற வேண்டும், சமூகம் மாற வேண்டும், சட்டத்தின் ஆட்சி மதிக்கப்பட வேண்டும்.
விபத்துகளுக்கான முக்கிய காரணம்...
சாலை ஓரங்களில் லாரிகளை நிறுத்தி வைப்பதே விபத்துகளுக்கான முக்கிய காரணம். பல லாரிகள் விதிகளைப் பின்பற்றுவதில்லை. ஒவ்வொரு பேருந்தின் ஜன்னல்கள் அருகே சுத்தியலை வைக்க வேண்டும். அப்போதுதான் விபத்தின்போது பயணிகள் வெளியே வார உதவியாக இருக்கும். இந்தியாவில் மட்டும் சாலை விபத்துகளால், 1.78 லட்சம் மக்கள் உயிரிழக்கிறார்கள்.
இதில், 18 - 34 வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் 60 சதவிகிதம். இந்தியாவில் அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் முதலிடம் உத்தரப்பிரதேசம் (23,000 உயிரிழப்பு), இரண்டாம் இடம் தமிழ்நாடு (18,000 உயிரிழப்பு). அடுத்தடுத்த இடங்களில், மகாராஷ்டிரா (15,000), மத்தியப் பிரதேசம் (13,000) இருக்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.