செய்திகள் :

Nitish Kumar: நிதிஷ் எனும் அரசியல் மாயாஜாலக்காரன் - 20 வருடங்களாக அரியணையை விட்டு கொடுக்காதவரின் கதை

post image

அரசியலில் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய சொற்றொடர் `ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை'. அதேபோலத்தான், பீகாரில் ஆட்சிக்கு வரும் கூட்டணிகள் மாறலாம், ஆனால் முதல்வர் ஒருத்தர்தான். கடந்த 20 ஆண்டுகளாக அங்கு இதுதான் நிலைமை. 2005 முதல் நிதிஷ் குமார் மட்டும் அங்கு முதல்வராக இருக்கிறார்.

நிதிஷ் குமார் இன்று வலசாரி கட்சியான பா.ஜ.க-வுடன் மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணியில் இருந்தாலும், அடிப்படையில் அவரின் அரசியல் பயணமானது, 1970 களில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராகத் தீவிரமாகக் களமாடிய மக்களின் தலைவர் என்றழைக்கப்படும் ஜே.பி எனும் ஜெயபிரகாஷ் நாராயண் தொடங்கிய ஜனதா கட்சியில் (Janata Party) தொடங்கியது.

அந்த ஜனதா காட்சியில்தான், பீகாரில் இரண்டு முறை முதல்வராக இருந்த பீகாரின் ஜனநாயகன், சோசலிஸ்ட் என்றழைக்கப்படும் கர்ப்பூரி தாக்கூருடன் அரசியல் தொடர்பும் ஏற்பட்டது.

லாலு - நிதிஷ்
லாலு - நிதிஷ்

பின்னர் அக்கட்சியிலேயே, 1985 முதல்முறையாக பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார்.

அப்போது, ஜனதா கட்சி சார்பில் பீகார் சட்டமன்றத்துக்குள் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக நுழைந்திருந்தார் லாலு பிரசாத் யாதவ்.

1988-ல் ஜனதா கட்சி, லோக் தளம், ஜன மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து வி.பி. சிங் உருவாக்கிய ஜனதா தளம் (Janata Dal), 1990 பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 122 வென்று இடங்களை வென்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. லாலு பிரசாத் யாதவ் முதல்வரானார்.

மறுமுனையில், 1989 மக்களவைத் தேர்தலில் ஜனதா தளம் கட்சியின் எம்.பி ஆகி வி.பி சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சரானார் நிதிஷ்.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

அதன்பின்னர் 1994-ல் நிதிஷ் அக்கட்சியிலிருந்து லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக 14 எம்.பி-க்களுடன் சோசலிஸ்ட் ஜார்ஜ் ஃபெர்னாண்டாஸ் பின்னால் அணிவகுத்து, ஜனதா தளம் (ஜார்ஜ்) என்ற குழுவை உருவாக்கினார்.

பின்னர் ஜார்ஜ் ஃபெர்னாண்டாஸும், நிதிஷ் குமாரும் இணைந்து அக்குழுவை சமதா கட்சியாக (Samata Party) மாற்றினர்.

அக்கட்சி 1995 பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கி வெறும் 7 இடங்களில் வென்றது. அந்தத் தேர்தலில் ஜனதா தளம் ஆட்சியைத் தக்கவைத்து லாலு பிரசாத் யாதவ் மீண்டும் முதல்வரானார்.

லாலுவின் அரசியல் வாழ்வை முடித்த ஊழலும்... பா.ஜ.க-வுடன் சேர்ந்து மத்திய அமைச்சரான நிதிஷும்!

1997-ல் கால்நடைத் தீவன ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கைதாகும் சூழலில் லாலு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்ற புதிய கட்சியை உருவாக்கி, சட்டமன்றத்தில் அக்கட்சி ஆதரவைத் திரட்டி பதவியை ராஜினாமா செய்த கையோடு தனது மனைவி ராப்ரி தேவியை சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கி முதல்வராக்கினார்.

அதன்பின்னர், லாலு கைதானதும் தேர்தலில் போட்டியிட அவர் தடைக்குள்ளானதும் தனி கதை.

வாஜ்பாய் - நிதிஷ் குமார்
வாஜ்பாய் - நிதிஷ் குமார்

மறுபக்கம், 1996, 1998 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் சமதா கட்சி கூட்டணியமைத்தது. 1998-ல் ரயில்வே துறை அமைச்சராகவும் ஆனார் நிதிஷ்.

1999-ல் சமதா கட்சி ஐக்கிய ஐக்கிய ஜனதா தளத்துடன் (Janata Dal (United) ) இணைந்து மக்களைவைத தேர்தலில் போட்டியிட்டது.

அக்கூட்டணி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பா.ஜ.க-வுடன் கைகோர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பங்கெடுத்தது. அந்தக் கூட்டணி அரசிலும் நிதிஷ் குமார் மத்திய அமைச்சரானார் நிதிஷ்.

2000-ம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தல் மூலம் மீண்டும் மாநில அரசியல் பக்கம் திரும்பினார் நிதிஷ் குமார். அந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 324 இடங்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக 124 இடங்களில் வென்றது.

மறுபக்கம் சமதா கட்சி, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 151 இடங்களில் வென்றது.

தேர்தல் முடிவுகளுக்குப் ராஷ்ட்ரிய ஜனதா கூட்டணியாக 159 எம்.எல்.ஏ-க்களைப் பெற்றது.

இருப்பினும் இரு கூட்டணிகளுக்கும் ஆட்சியமைக்கத் தேவையான 163 என்ற மெஜாரிட்டி இல்லை.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

இருப்பினும், மத்தியில் அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்ததால் நிதிஷ் குமார் முதல்முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார்.

இருப்பினும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அதற்கு முன்பாகவே 7 நாள்களில் தனது முதல்வர் பதவியை நிதிஷ் ராஜினாமா செய்தார்.

பின்னர், மேலும் சில கட்சிகளையும், சுயேச்சை எம்.எல்.ஏ-களையும் சேர்த்து ஆட்சியமைத்து முதல்வரானார் ராப்ரி தேவி.

அதே ஆண்டு நவம்பரில் பீகாரிலிருந்து 18 மாவட்டங்களுடன் தனி மாநிலமானது ஜார்கண்ட். அதன்பின்னர், பீகார் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 243 ஆனது. அந்த ஆட்சிக்காலம் முடியும் வரை ராப்ரி தேவியே முதல்வராக இருந்தார்.

மறுபக்கம், 2000 முதல் 2004 வரை வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தார் நிதிஷ். இதற்கிடையில், 2003-ல் சமதா கட்சியை அதிகாரப்பூர்வமாக ஐக்கிய ஜனதா தளத்துடன் (JDU) இணைக்கப்பட்டது.

2005-ம் ஆண்டு பிப்ரவரி சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் நவம்பர் வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பின்னர் நவம்பரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு + பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 138 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.

தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு ஆட்சியிலிருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு அத்தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

அப்போது மக்களவை எம்.பி-யாக இருந்த காரணத்தால் அந்தத் தேர்தலில் போட்டியிடாத நிதிஷ், சட்டமன்ற மேலவை உறுப்பினராகி இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.

அந்த ஆட்சிக்காலம் முழுவதும் முதல்வராகவே நீடித்தார். அந்தத் தேர்தலுக்குப் பின்னர் முழுமையாக மாநில அரசியலில் இறங்கினார் நிதிஷ்.

உச்சம் தொட்ட ஐக்கிய ஜனதா தளம் `டு' பா.ஜ.க-வுடன் முறிந்த 17 வருட உறவு!

2010 பீகார் சட்டமன்றத் தேர்தல் ஐக்கிய ஜனதா தளத்துக்கு முக்கியமான தேர்தல்.

பா.ஜ.க-வுடன் (102 இடங்களில் போட்டி) கூட்டணியமைத்துப் போட்டியிட்டிருந்தாலும் தனியாக தான் போட்டியிட்ட 141 இடங்களில் 115 இடங்களை வென்றது ஜே.டி.யு.

பா.ஜ.க-வின் 91 இடங்களையும் சேர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை அமைத்து மூன்றாவது முறையாக முதல்வரானார் நிதிஷ்.

அத்தேர்தலில் ஆர்.ஜே.டி 22 இடங்களிலும், தனித்துக் களம் கண்ட காங்கிரஸ் ஒற்றை இலக்கத்தில் வெறும் 4 இடங்களையும் மட்டுமே வென்றன.

நிதிஷ் குமாருடன் மோடி
நிதிஷ் குமாருடன் மோடி

நிதிஷுக்கு எல்லாம் சரியாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில்தான் 2014 லோக் சபா தேர்தலுக்கு மோடியை பிரதமர் வேட்பாளராக்கும் வேலைகள் நடக்கவே, பா.ஜ.க-வுடனான 17 வருட உறவை முறித்தார் நிதிஷ்.

2014 லோக் சபா தேர்தலில் பீகாரில் தனி கூட்டணியமைத்து போட்டியிட்ட ஜே.டி.யு வெறும் 2 இடங்களை மட்டுமே வென்று படுதோல்வியைச் சந்தித்தது.

மறுபக்கம், பீகாரில் பா.ஜ.க கூட்டணி 31 இடங்களை வென்றதோடு மத்தியிலும் ஆட்சியமைத்தது.

ஜே.டி.யு-வின் இத்தகைய தோல்விக்குப் பொறுப்பேற்று நிதிஷ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

2015 வரை அக்கட்சியிலிருந்து ஜிதன் ராம் மஞ்சி முதல்வராகப் பொறுப்பேற்றார்.

2015 சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் முதல்முறையாக, ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸுடன் சேர்ந்து மகாபந்தன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார்.

அக்கூட்டணி 178 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. மேலும், அந்தக் கூட்டணியில் அதிகமாக 80 இடங்களை ஆர்.ஜே.டி வென்றிருந்தாலும், 71 இடங்களை வென்ற ஜே.டி.யு சார்பில் நிதிஷ் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.

ஆனாலும், அந்தக் கூட்டணி நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

2017-ல் லாலு பிரசாத் யாதவ் மீது ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் வாங்கிய குற்றச்சாட்டு தீவிரமடையவே நிதிஷ் அந்தக் கூட்டணியை முறித்துக்கொண்டு மீண்டும் பா.ஜ.க-வுடன் கைகோர்த்து மீண்டும் முதல்வரானார்.

அந்தக் கூட்டணியோடே 2020 தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் 115 இடங்களில் போட்டியிட்ட ஜே.டி.யு, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 43 இடங்களில் மட்டுமே வென்றது. அதே கூட்டணியில் பா.ஜ.க 74 இடங்களில் வென்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்தது. ஆனாலும் முதல்வர் பதவி நிதிஷுக்கே மீண்டும் சென்றது.

ஆனால், அதே தேர்தலில் ஆர்.ஜே.டி தனிப்பெரும் கட்சியாக 75 இடங்களை வென்றது. தேஜஸ்வி மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தார்.

இந்தச் சூழலில், 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கியது. நிதிஷுக்குள் மீண்டும் பிரதமர் ஆசை எட்டிப்பார்த்தது. பா.ஜ.க-வை கழற்றிவிட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆர்.ஜே.டி, காங்கிரஸோடு சேர்ந்து கூட்டணியமைத்து மீண்டும் முதல்வரானார். அதோடு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தார்.

நிதிஷ் குமார், மோடி

இந்தியா கூட்டணி தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் என்று காத்திருந்த நிதிஷ், தனக்கு அது கிடைக்காது என்று தெரிந்ததும் அங்கிருந்து விலகி, ``செத்தாலும் இனி அவர்களுடன் உறவு கிடையாது" என்று யாரைச் சொன்னாரோ அந்தப் பா.ஜ.க-வுடன் கூட்டணியமைத்து 9-வது முறையாக பீகார் முதல்வர் ஆனார்.

மக்களவைத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சியாக 12 இடங்களில் வென்றது ஜே.டி.யு. தனிப்பெரும்பான்மை இழந்த பா.ஜ.க ஆட்சி அமைக்க நிதிஷ் முக்கிய நபராக உருவெடுத்தார்.

இப்போது பா.ஜ.க-வுக்கு நிதிஷ் முக்கியம் என்பது போல, நிதிஷுக்கு பா.ஜ.க முக்கியம் என்ற நிலைக்கும் இன்றைய பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்துள்ளது.!

பீகார்: ``2020-ல் நடந்த தவறு மீண்டும் நடந்தால்'' - தேர்தல் அதிகாரிகளை சாடிய தேஜஸ்வி யாதவ்

பீகார் தேர்தலில் மகாபந்தன் கூட்டணி தோல்வியடையும் என கருத்துக் கணிப்புகள் கணிப்புகள் கூறியபோது கடுமையாக மறுத்துவந்தார். வாக்கு எண்ணிக்கையில் இன்று (நவ. 14) காலை முதலே என்.டி.ஏ கூட்டணி முன்னிலை வகித்து ... மேலும் பார்க்க

தமிழ் புத்தாண்டு: `கலைஞர் கருணாநிதியின் அரசாணையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லையா?'

அண்மையில் வெளியான 2026-ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்களின் பட்டியலிலும், (அதாவது திமுகவின் நடப்பு ஆட்சிக் காலம் முடிவடைய இருக்கிற சூழலில், கடைசி ஆண்டிற்கான விடுமுறை தினப் பட்டியல்) `தை’ முதல் ந... மேலும் பார்க்க

பணவீக்கத்தைக் குறைத்த ஜி.எஸ்.டி 2.0... மக்களின் சேமிப்பை அதிகரிக்கப் பயன்படட்டும்!

கடந்த வாரத்தில் வெளியான பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரங்கள், நல் ஓலையாகவே வந்திருக்கிறது. பணவீக்கம் குறைவில் ஒரு வரலாற்று தருணம் சாத்தியப்பட்டுள்ளது!கொரோனா காலத்துக்குப் பிறகு வேலையிழப்பு, வருமானக் குற... மேலும் பார்க்க