செய்திகள் :

Relationship: கேஸ்லைட்டிங் செய்யும் வாழ்க்கைத்துணை; தீர்வு சொல்லும் நிபுணர்

post image

தன் குற்றத்தை மற்றொருவர்மீது சுமத்தி, 'நம்ம மேலதான் தப்போ?' என்று அவரையே நம்ப வைத்துவிடுவார்கள் சிலர். இப்படிப்பட்டவர்கள் வீடு, அலுவலகம், நட்பு வட்டம் என எல்லா இடத்திலும் இருப்பார்கள். 

வீட்டை எடுத்துக்கொண்டால், 'நீ எனக்கு கோபமூட்டியதால்தான் நான் உன்னை திட்டிவிட்டேன் என்றோ, அடித்துவிட்டேன் என்றோ சொல்லிவிடுவார்கள். பெரும்பாலும், இது கணவரிடமிருந்தே வரும். தன் குற்றத்தை ஒத்துக்கொள்ளாத மாதிரியும் ஆச்சு; அதை தூக்கி மனைவியின் மீது போட்ட மாதிரியும் ஆச்சு. 

Relationship
Relationship

அலுவலகத்தை எடுத்துக்கொண்டால், 'நீங்கள் ரிமைண்டர் மெசேஜ் போடாததால்தான் நான் அந்த வேலையை செய்யவில்லை' என்பார்கள். தன் மறதியை மறைத்ததுபோலவும் ஆச்சு; அந்தப்பழியைத் தூக்கி அடுத்தவர் மீது போட்ட மாதிரியும் ஆச்சு.

நட்பு வட்டத்திலும் கிட்டத்தட்ட மேலே சொன்ன மாதிரிதான் நிகழும். இவர்கள் செய்வதை உளவியல் உலகம் 'கேஸ்லைட்டிங்' (Gaslighting) என்கிறது. இந்தச் சிக்கலால் வரும் பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்து, சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் நப்பின்னையிடம் பேசினோம்.

சந்தேக குணம் அதிகம் உடையவர்கள், தாழ்வுமனப்பான்மை உடையவர்கள், தான்தான் உயர்ந்தவன் என்ற மனப்பான்மையுடன் இருப்பவர்கள், தனக்குத்தான் அதிக முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், யாராக இருந்தாலும் தன் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள், அடிக்கடி கோபமடைபவர்கள், கோபத்தில் தன்நிலை மறப்பவர்கள், அடிக்கடி வன்முறையில் ஈடுபடுபவர்கள், சிறுவயதில் பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் அன்பு சரியாகக் கிடைக்காமல் போனவர்கள், தம்பதியில் ஒருவர்மீது அதிகம் சந்தேகம் கொள்ளும் மற்றொருவர், சிறுவயதில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள்.

Relationship
Relationship

பல உறவுமுறைக்குள் இந்தப் பிரச்னை இருந்தாலும், கணவன் - மனைவிக்குள் உருவாகும் 'கேஸ்லைட்டிங்' பிரச்னை மட்டும்தான் அதிக அளவில் பொதுவெளிக்கு வந்திருக்கிறது.

காரணம், விவாகரத்துச் சிக்கலுக்கு `கேஸ்லைட்டிங்'கும் முக்கிய காரணமாக இருப்பதாலும், அதுகுறித்த செய்திகள் நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், சமரசத் தீர்வு மையம், உளவியல் ஆலோசனை மையம், குடும்பம் மற்றும் நட்பு வட்டாரம் எனப் பல இடங்களிலும் இந்தச் சிக்கல் குறித்து அதிகம் பேசப்படுகிறது. பலரும் சமூக வலைதளங்களில் இந்தச் சிக்கல் குறித்து கருத்துகளைப் பதிவிடுவதும், இதுகுறித்து இணையத்தில் தீர்வு தேடுவதாலும் 'கேஸ்லைட்டிங்' கவனம் பெறுகிறது.

கேஸ்லைட்டிங் பிரச்னைக்கு காரணமானவர்கள் பலரும், தங்களின் தவற்றை உணர எந்த முயற்சியும் எடுக்கவே மாட்டார்கள்.'தான் செய்ததுதான் சரி' என்று தன் தவற்றுக்கு நியாயம் மட்டுமே கற்பித்துக்கொண்டிருப்பார்கள்.

தன் கோபத்துக்கு காரணமான நபர்தான் தன் தவற்றை உணர்ந்து, தனக்கு உடன்பட்டுச் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த எண்ணம் வேரூன்றிய நபரை, தொடர்ந்து கவுன்சலிங் கொடுப்பதால் மட்டுமே சகஜநிலைக்குக் கொண்டுவர முடியும். ஆனால், குற்றம் செய்பவர் அந்தத் தீர்வை அவ்வளவு எளிதில் நாட ஆர்வம் காட்ட மாட்டார்; தன் தவற்றையும் உணர மாட்டார்.

Relationship
Relationship

'நான் சொல்றதைக் கேட்டு நீ நடந்துக்கிட்டா, உனக்கு கவுன்சலிங் தேவைப்படாதே...' என்று பாதிக்கப்பட்டவர் மருத்துவரீதியாகத் தெளிவு பெறுவதற்கும் குற்றம் செய்யும் அந்த நபர் முட்டுக்கட்டை போடலாம். பாதிக்கப்பட்டவர் மட்டும் கவுன்சலிங் வரும்பட்சத்தில், 'நீங்கள் சரியாக இருக்கும்வரை, நீங்கள் எதற்காகவும் குற்றவுணர்வுக்கு ஆளாக வேண்டாம்' என்று, சொல்வோம். இது ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்குமே தவிர, பாதிக்கப்படும் அந்த நபருக்கான நிரந்தர தீர்வாக அமையாது. இந்தச் சிக்கலில் சம்பந்தப்பட்டவர்கள் இருவருமே கவுன்சலிங் வருவதுடன், தவறு செய்தவர் தன் நிலையையும் தவற்றையும் முழுமையாக உணரும்போதுதான் தீர்வு கிடைக்கும்.

பெற்றோர் வளர்ப்பு முறையும், வளர்ந்த சூழலும் சரியாக இல்லாதபட்சத்தில்தான் 'கேஸ்லைட்டிங்' செய்வதற்கான குணாதிசயம் ஒருவருக்குள் தலைதூக்கும். படிப்பில் இரண்டாம் இடம் பிடித்த குழந்தையிடம், 'நீ ஏன் முதல் மார்க் வாங்கல' என்று சிறுவயதிலேயே தாழ்வுமனப்பான்மையை விதைக்கும் பெற்றோர் ஒருரகம்.

தன் பிள்ளையின் நடத்தையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது, பிள்ளை செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்துவது போன்று அதீத சுதந்திரம் கொடுத்து பிள்ளை பொறுப்பற்றுச் செயல்பட காரணமாக இருக்கும் பெற்றோர் இன்னொரு ரகம்.

இது இரண்டுமே தவறுதான்! தவறு, சரி... இதைப் பகுத்தறிந்து செயல்படுவதற்கான நல்ல வழிகாட்டுதல்களை வழங்கி, நடுநிலையுடன் குழந்தையை வளர்ப்பதுதான் பெற்றோருக்கான தலையாய கடமை.

பாராட்டு, சுதந்திரம், கண்டிப்பு... இவையெல்லாம் குழந்தைக்கு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு இருக்க வேண்டும். பிறரின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது; யாராக இருந்தாலும் மற்றவர்களையும் சமமாக நடத்த வேண்டும்; மற்றவர்கள் மதிக்கும் நிலைக்கு நம் நடத்தை இருக்க வேண்டும் என்ற தெளிவுடன் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும் பண்பு இருந்தால், 'கேஸ்லைட்டிங்' பிரச்னைக்கு நம் வாழ்வில் இடமே இருக்காது" என்று முடித்தார் உளவியல் நிபுணர் நப்பின்னை.

Office Romance-ல் இந்தியா 2வது இடமா... ஆய்வு சொல்வதென்ன?

நவீன காலத்தில் அலுவலகத்தில் ஆண்களும் பெண்களும் பழகி காதல் கொள்வது இயல்பானதாக மாறியிருக்கிறது. ஆனால் இது இந்தியர்கள் மத்தியில் மிகவும் பரவலானதாக மாறியிருக்கிறது. புத்திசாலித்தனமான உறவுகள் பற்றிய ஆஷ்லே ... மேலும் பார்க்க