Army Chief: ``அமெரிக்க அதிபருக்கு கூட தெரியாது" - மாணவர்களிடம் மனம் திறந்து உரைய...
"S.I.R. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்" - தவெக தலைவர் விஜய் விளக்கம்
சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் S.I.R. விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திமுக அரசு, விஜய்யின் தவெக உள்பட 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தவெக, அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்திருக்கின்றன.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் தவெக தலைவர் விஜய், "தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, அரசு சார்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே அதில் கலந்துகொண்டு, மக்கள் உரிமைகளுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாட்டினைத் தெரிவித்தோம். ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான தி.மு.க.வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான நோக்கத்தையும் பின்னணியையும் மக்கள் அறியாமல் இல்லை.
தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க.வின் இத்தகைய முன்னெடுப்பின் நோக்கம், தி.மு.க. அரசு மீது வரிசை கட்டி வரும் ஊழல் புகார்களில் இருந்து மக்களைத் திசை திருப்பும் கபட நாடக அரசியலே ஆகும்.
சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக ஏற்கெனவே தமிழ்நாட்டில் முதல் குரலாக ஓங்கி ஒலித்தது, தமிழக வெற்றிக் கழகத்தின் குரல்தான். இதை நாடும் நாட்டு மக்களும் நன்றாகவே அறிவர். நாம் முதன்முதலாகக் குரல் எழுப்பிய அந்த நேரத்தில் தி.மு.க. தூங்கிக்கொண்டிருந்ததா? ஒன்றிய பா.ஜ.க.வுடன் மறைமுக உறவுக்காரராக இருந்ததால் மறதி மயக்கத்தில் இருந்ததா?
ஏதோ இப்போது மட்டும் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக முதன்முதலாக விழித்துக்கொண்டது போலவும், தான் மட்டுமே ஜனநாயக உரிமையின் ஒற்றைப் பாதுகாவலன் போலவும் கபட நாடக வேடத்தைப் பூண்டுள்ளது, அப்பட்டமான ஏமாற்று வேலை. இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றுவதைப் போல எல்லோரையும் ஏமாற்றி விடலாம் என்று தி.மு.க. நினைக்கிறதா?
இந்தக் கேள்விகள் மக்கள் மனத்திலும் எழுந்துள்ளன. எனவே, தி.மு.க.வின் கபட நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
— TVK Vijay (@TVKVijayHQ) November 2, 2025
ஜனநாயகத்திற்காகவும் மக்கள் உரிமைகளுக்காகவும் காத்திரமாகக் குரல் கொடுப்பதில் தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் முதல் இயக்கமாக இருக்கிறது. இதைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர். ஜனநாயக மற்றும் மக்கள் உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டால், அது ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும், சமரசமின்றி எதிர்ப்பதில் த.வெ.க. எப்போதும் போல் தீர்க்கமாக இருக்கும்.
ஆகவே, சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படும். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, வட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் என அனைவரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை விழிப்போடு கண்காணிப்பர்.
மக்கள் நலன், ஜனநாயகம் மற்றும் உரிமைகள் சார்ந்த அனைத்திலும் மக்களுடன் மக்களாக, மக்கள் பக்கம் மட்டுமே தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்." என்று விளக்கமளித்திருக்கிறார் விஜய்.















