'இந்த பொண்ணுங்க அவ்வளவு உழைச்சிருக்காங்க!' - உருகும் இந்திய அணியின் பயிற்சியாளர்...
Scam: டிஜிட்டல் கைது, சைபர் அடிமை, பார்ட்-டைம் ஜாப், கடன் செயலி; எத்தனை மோசடி, எப்படி தப்பிக்கலாம்?
இணையதள சேவைகள் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமை காரணமாக பல வழிகளில் இணைய மோசடிகள் நடைபெற்றுவருகின்றன.
இதைத் தடுக்கும் வகையில் அரசு மற்றும் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் வரை சுமார் 530 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் ரூ.5.30 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் ரூ.2.30 கோடி வரை மீட்கப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் பணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பலர் விரைவாக புகார் அளிக்காததால், அவர்களின் பணத்தை மீட்பதில் பெரும் சிக்கல்கள் நீடிக்கின்றன.
எனவே, இந்த மோசடிகள் குறித்து, அதிலிருந்து எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்படுவது என்பதைக் குறித்து விரிவாகப் பேச திருநெல்வேலி மாவட்டக் காவல் ஆணையர் (Deputy Commissioner of Police – Headquarters) ச.விஜயகுமாரை தொடர்புகொண்டோம்.
காவல் ஆணையர் விஜயகுமார் கூறியதாவது:
“பல வகையான மோசடிகளில் மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள். அதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது டிஜிட்டல் கைது (Digital Arrest).”
அதிகாரியைப் போல நடித்து, போதைப்பொருளைக் கடத்தியதாக ஒருவரை தொலைபேசியில் அழைத்து மிரட்டுவார்கள். அவரிடமிருந்து வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுக்கொண்டு லட்சம், கோடி எனத் திருடுவார்கள்.
இந்த மோசடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளே ஆளாகியுள்ளனர். இந்த மோசடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க மக்கள் ஒன்றை மட்டும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் -இந்தியாவில் டிஜிட்டல் கைது (Digital Arrest) என்பது கிடையவே கிடையாது.

அடுத்து, பங்குச் சந்தை மோசடிகள்: AI காலகட்டத்தில் மக்களின் பேராசை மனோபாவத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் வழியாக போலி பங்குச் சந்தை செயலிகளை அறிமுகப்படுத்துவார்கள்.
குறைந்த முதலீட்டில் நிறைய லாபம் தரும் வகையிலான ஸ்கிரீன்ஷாட்களை விளம்பரத்திற்குப் பயன்படுத்துவார்கள். அதிக லாபம் ஈட்டியதாகக் கூறி மக்களை நம்பவைத்து, முதலீடு செய்ய வைத்து மோசடிக்கு உள்ளாக்குவார்கள்.
இவ்வகை மோசடியில் சாதாரண மக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பொதுவாக நம்மிடம் ஒரு பழமொழி உண்டு.
‘பேராசை பெருநஷ்டம்’ என்பதே அது. இதை மனதில் நிறுத்த வேண்டும். உழைத்து ஈட்டும் செல்வமே நிலையானது என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.
பிறகு பகுதிநேர வேலை மோசடிகள் (Part-time job scams). இவ்வகை மோசடிகளால் பெரிதும் பாதிக்கப்படுவது மாணவர்களே. நல்ல ஊதியம் தரும் வகையில் சலுகைகளை அறிவிப்பார்கள்.
வேலைக்கு விண்ணப்பிப்பவர்களிடம் முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடாக கேட்பார்கள். அதைப் பெற்று, ஒரு நம்பிக்கையை உருவாக்கி, சிறிய தொகையை திருப்பி அனுப்புவார்கள்.

அதன் பிறகு, அவர்கள் செய்கிற வேலைக்கு அதிக தொகை தருவதாகக் கூறி ஏமாற்றி, மோசடி செய்வார்கள். தற்போது கிராமப்புறம் மட்டுமல்ல, நகர்ப்புறத்திலும் இந்த மோசடி அதிகரித்து வருகிறது. “சிறிய முதலீடு தானே” என்று நினைத்து முதலில் பணம் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
சமீபத்தில் அரசுத் திட்டங்கள் மற்றும் உதவித்தொகை தொடர்பான மோசடிகளும் அதிகரித்து விட்டன. அரசுத் திட்டத்திற்கு நீங்கள் தகுதியானவர் என்று கூறி மக்களை நம்பவைக்கிறார்கள்.
குறிப்பிட்ட திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் எனக் கூறி நம்பவைத்து பணம் பறிக்கிறார்கள். மோசடிக்காரர்களுக்கு இதில் தேவைப்படுவது நமது வங்கிக் கணக்கு மற்றும் வங்கி தொடர்பான தகவல்களே.
மேலும், ஏதாவது ஒரு இணைப்பை (link) அனுப்பி அதற்குள் செல்லுமாறு தூண்டுவர். குறிப்பாக மாணவர்கள் இதில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அரசின் உதவித்தொகைகள் போன்றவற்றுக்கு மாணவர்கள் தகுதியானவர்கள் எனக் கூறி நம்பவைத்து பணம் பறிக்கும் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அடுத்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பரிவர்த்தனை செயலி மோசடிகள் (transport scams) பற்றியது. பொதுவாக சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதற்குண்டான அபராதங்கள் விதிக்கப்படும்.
அதே போலியாக, அதே வகையைப் பின்பற்றி அபராதம் விதிக்கப்பட்டதாக கூறி வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
பின்னர், அவர்கள் அந்த நபரின் வங்கிக் கணக்கை செயலிழக்கச் செய்யப்போவதாக மிரட்டி, பணம் பறிக்கும் மோசடிகளும் நடக்கின்றன.
அடுத்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கடன் மோசடி. போலியான கடன்தரும் செயலிகளின் மூலம் அதிக வட்டியைக் கேட்டு, வட்டியை இருக்காமல் தொடர்ச்சியாக வசூலித்து, அலைபேசியில் இருந்து புகைப்படங்களைத் திருடி மார்ஃபிங் செய்து, மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
இத்தகைய தவறுகள் நிகழ்ந்தால் பயப்படாமல் உடனே சைபர் காவல் துறையை அணுக வேண்டும். அதற்காக 1930 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.
மாணவிகளை குறிவைக்கும் பாலியல் தொல்லை (sex torture) மோசடி: இம்மோசடிக்காரர்கள் சமூக ஊடகங்களில் இருந்து மாணவிகளின் புகைப்படங்களைத் திருடி, அவற்றை மார்ஃபிங் செய்து மிரட்டி பணம் பறிப்பார்கள்.

இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றனர். இதுபோன்ற சூழலில் உடனடியாக பெண்கள் காவல்துறையை அணுகினால், குற்றவாளிகளை உரிய முறையில் தண்டிக்க முடியும்.
மேலும், சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள தவறான புகைப்படங்களை உடனே சைபர் கிரைம் பிரிவு மூலம் பிளாக் செய்ய முடியும். எனவே, பெண்கள் தைரியமாக முன்வந்து தங்களது பிரச்சனைகளை தெரிவித்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.
அடுத்து சைபர் அடிமைப்படுத்தல் (Cyber Slavery) மோசடி. இந்த வகை மோசடியில், ஒருவர் உங்களுக்கு வெளிநாட்டில் வேலை அல்லது பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி, உங்களின் ஆவணங்களைப் பெற்றுக்கொள்வார்கள்.
பின்னர், உங்களிடம் சிறிதளவு தொகையைப் பெற்றுக்கொண்டு வெளிநாட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். அங்கு, அந்த நாட்டில் உள்ள மோசடி கும்பல் அவர்களை அடிமையைப் போல வேலை செய்யவைக்கும்.
இவ்வாறு பலரை சிக்கவைத்துள்ளனர். இந்த மோசடியில் வெளிநாட்டிற்கு சென்றவர்கள், முறையான அடிப்படை வசதிகளின்றி, 16 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வைக்கப்படுகின்றனர்.
இன்னும் பல மோசடிகள் இருக்கிறது என்றாலும் இப்போது சொன்ன அனைத்தும் அதிகம் நடைபெறுகிறது. எனவே மேலே குறிப்பிட்டுள்ள மோசடிகள் அனைத்திலிருந்தும் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு 1930 என்கிற எண்ணில் புகார் அளிக்கலாம்.
"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்"துன்பம் பற்றிக் கொள்வதற்கு முன்பாகவே தன்னை தற்காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை வைக்கோல் போர் போல அழிந்துவிடும்.
எனவே எந்த ஒரு தீமை நடப்பதற்கும் முன்பாக அவற்றிலிருந்து நாம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது." என விவரமாகப் பேசி முடித்தார்.
















