SIR: ``இதைத் தவிர வேறு வழியில்லை'' - அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானம் என்...
Shah Rukh Khan: அம்மாவுக்கு மருந்து வாங்க காசில்லாத வறுமை; 'பாலிவுட் சாம்ராஜ்ய நாயகன்' உருவான கதை
எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையில் உச்சம் தொட்டவர்களின் பின்னணி கதை பெரும் பாடமாக இருக்கும். குறிப்பாக திரையுலகில் மாபெரும் இடத்தைப் பிடித்த ரஜினி முதல் விஜய் சேதுபதி வரை பலரும் பெரும் துயரத்தைக் கடந்துதான் வந்திருக்கிறார்கள்.
அப்படியான பெரும் போராட்ட வரலாறு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கும் இருக்கிறது. நடிகர் ஷாருக்கான் தேசிய விருது பெற்றபோது அவரை வாழ்த்தியவர்களில் முதன்மையானவர் நடிகர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் வெற்றிகண்ட விவேக் வஸ்வானி.

இவர் சமீபத்தில் ரேடியோ நாஷாவுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் ஷாருக் கானின் திரைப்பயணத்தை உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.
அவரின் பேட்டியில், ``ஷாருக் சீரியலில் நடிக்கத் தொடங்கிய ஆரம்பத்தில் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிட சென்றிருந்தேன். முதல் 20 நிமிடங்கள், அவர் அமைதியாகச் சாப்பிட்டார்.
கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக அவர் சாப்பிடவில்லை என்பது பின்புதான் தெரிந்தது. சாப்பிட்டு முடித்த பிறகு, அவர் என்னைப் பார்த்து, 'உனக்குத் தெரியுமா, விவேக்? என் அம்மா இறந்து கொண்டிருக்கிறார்' என்றார்.
நான் திகைத்துப்போனேன், எப்படி பதிலளிப்பது என்று தெரியவில்லை. பின்னர் ஷாருக் அம்மாவின் நோய், திருமண வயதில் சகோதரி, திருமணத்துக்காக காத்திருக்கும் காதலி கௌரி குறித்தெல்லாம் எப்போதும் இல்லாத அளவு மனம்திறந்து பேசினார்.
'வேறொரு இடத்தில் தூங்கச்சொல்ல எனக்கு மனம் வரவில்லை," என அவர் சொன்னபோது, நான் அவரை என் இடத்தில் தங்க வைத்துக்கொண்டேன்.
அந்த காலக்கட்டத்தில்தான் என் நண்பர் ராமனை ஷாருக் கானுக்கு அறிமுகப்படுத்தினேன். தாஜில் உணவு சாப்பிட வாய்ப்பு கிடைக்கும் என்று ஷாருக் கான் உற்சாகமாக இருந்தார். அவருக்கு தந்தூரி சிக்கன், காபி வேண்டும் எனக் கேட்டார்.
அந்தச் சந்திப்பில் ராமனும் ஷாருக்கும் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். அதன் பிறகு, ஷாருக் என்னுடன் என் வீட்டிற்குத் திரும்பி வந்து, என் ஆடைகளை அணிந்துகொண்டு மூன்று நாட்கள் தங்கினார்.
கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு வரை அவர் என்னுடன் இருந்தார். பின்னர், ஜாக்கி ஷெராஃப் மற்றும் ஜீனத் அமன் வசித்து வந்த லா பெப்பே பில்டிங்கில் ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டோம்.
நானும் ஷாருக்கும் சென்றுவிட்டு, அவரின் சொந்த ஊரான டெல்லிக்கு அனுப்பி வைத்தேன். ஷாருக் டெல்லிக்குச் சென்றதும், அவரது தாயாரின் உடல்நிலை மோசமடைந்தது.
"அவர் எனக்கு போன் செய்து மருந்துகள் தேவை" என்றார். நான் என் தந்தையிடம் பணம் கடன் வாங்கி, அந்த மருந்துகளை வாங்கி, ராமன் மூலம் அனுப்பினேன்.
பின்னர், நான் டெல்லிக்குச் சென்று கௌரியை ஷாருக்கின் தாயாரை சந்தித்தேன். அப்போது அவரால் பேசமுடியவில்லை. அந்த நேரத்தில், தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா ஒரு பட வாய்ப்புடன் ஷாருக்கை அணுகினார்.
ஆனால் அவரின் காதலி கௌரிக்கு மற்ற நடிகைகளைக் கட்டிப்பிடிப்பது பிடிக்காது எனக் கூறி ஷாருக் படங்களில் நடிக்க விரும்பவில்லை என மறுத்துவிட்டார்.
தொலைக்காட்சியில் அப்படியான காட்சிகள் இருக்காது என்பதால் அதுவே போதும் என நம்பினார். அதனால் நான் அவரை வற்புறுத்தவில்லை.
ஆனாலும், விக்ரம் மல்ஹோத்ரா மூன்று நாள் படப்பிடிப்புக்காக சிம்லாவுக்கு வருமாறு வற்புறுத்தினார். நான் ஷாருக்குடன் சிம்லா சென்றேன்.
அந்த படம் 'மாயா மேம்சாப்'. இது அவரது தொலைக்காட்சி வேலை போன்ற ஒரு கலைப் படம் என்பதால் நடித்தார். அந்தப் படப்பிடிப்புக்கு முடிந்த சில நாட்களுக்குப் பிறகு, அவரின் தாயார் காலமானார்.
இறுதிச் சடங்கு முடிந்த பத்து நாட்களுக்குப் பிறகு, "என் வீட்டு மணி அடித்தது. அப்போது அதிகாலை 4 மணி. நான் கதவைத் திறந்தபோது, ஷாருக் பெரிய பைகளுடன் நின்று கொண்டிருந்தார்.
அவர் உள்ளே வரவில்லை. அப்போதுதான் அவர் என்னிடம் முதல்முறையாக, `என்னை வைத்து ஒரு படம் எடுப்பீர்களா?' எனக் கேட்டார்.

அவர் படங்களில் நடிக்க விரும்பவில்லை எனக் கூறியதை நினைவூட்டினேன். ஆனால் ஷாருக், 'இப்போது நடிக்கிறேன். என்னை ஒரு சூப்பர் ஸ்டாராகப் பார்ப்பது என் அம்மாவின் கனவு.
அந்தக் கனவை நிறைவேற்ற, நான் ஒரு நடிகராக வேண்டும். அதற்கான உழைப்பை என்னால் கொடுக்க முடியும். அதற்கான வாய்ப்பாக உங்களிடம் என்னை வைத்துப் படம் எடுக்கச்சொல்ல மட்டுமே முடியும்' என்றார்.
அப்போது நாங்கள் பிரசிடென்ட் ஹோட்டலில் காபி ஆர்டர் செய்தோம், அங்குதான் ராஜு பான் கயா ஜென்டில்மேன் படம் பிறந்தது.
நாங்கள் விவாதித்த முதல் படம் அதுதான் என்றாலும், ஷாருக் கானின் உண்மையான அறிமுகம் ரிஷி கபூரின் தீவானாவுடன் முன்னதாகவே வெளியானது. அதைத் தொடர்ந்து 1992-ல் நசீருதீன் ஷாவுடன் சமத்கர் திரைப்படமும் வெளியானது.
அந்த ஆண்டின் பிற்பகுதியில், ராஜு பான் கயா ஜென்டில்மேன் வெளியாகி, அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. பாலிவுட்டின் புதிய முகமாக ஷாருக்கானின் முதல் படம் உண்மையிலேயே இந்தப் படம்தான்" என்றார்.

















