'இந்த பொண்ணுங்க அவ்வளவு உழைச்சிருக்காங்க!' - உருகும் இந்திய அணியின் பயிற்சியாளர்...
SIR: ``வாக்களார் பட்டியலை சரிபார்ப்பது அவசியம்தான்; ஆனால்'' - மநீம தலைவர் கமல் சொல்வதென்ன?
சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் S.I.R. விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திமுக அரசு, விஜய்யின் தவெக உள்பட 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தவெக, அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்திருக்கின்றன.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியிருக்கும் மநீம தலைவரும், எம்.பியுமான கமல், "வாக்களார் பட்டியலை சரிபார்ப்பது அவசியம்தான். ஆனால் 'S.I.R' எனும் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை ஏன் இவ்வளவு அவசரமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த அவரசத்தினால்தான் பிகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு வாக்களிக்கும் உரிமையை இழந்தார்கள்.
குறிப்பிட்ட 12 மாநிலங்களில் மட்டுமே இந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்தை செயல்படுத்த முயற்சிப்பதன் உள்நோக்கம் என்ன?
இதனால் இந்த தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை வரலாற்றில் இல்லாத அளவிற்குக் குறைந்துவிட்டது. கர்நாடகா, மகாராஷ்டிராவில் வாக்குத் திருட்டு தொடர்பாக எழுந்த நியமான சந்தேகங்கள் இதுவரை தீர்க்கப்படவில்லை. வாக்குச் சாவடிகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியிடுவதில் ஏன் தயக்கம்?

சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்ய அலுவலர்கள் ஒரு வீட்டிற்குச் சென்று, வீட்டில் யாரும் இல்லை என்பதையெல்லாம் காரணம் காட்டி, அவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது அபத்தமானது. இதுபோன்ற அபத்தமான காரணங்களைக் காட்டி தகுதியுடைய வாக்காளர்களை நீக்கிவிடக்கூடாது.
இந்த S.I.R -ல் இருக்கும் பல குறைகளைத் தீர்க்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் மீது எழும் அவநம்பிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது. நடுநிலைமையோடு செயல்படுகிறோம் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது.
அவசர கோலத்தில் இந்த 'S.I.R'யை செயல்படுத்தாமல், குறைகளை சரி செய்து நிதானமாக 2026 சட்டமன்ற தேர்தல் முடிந்தபிறகு செயல்படுத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் வேண்டுகோள்" என்று பேசியிருக்கிறார்.

















