Weekly Horoscope: வார ராசி பலன் 7.12.25 முதல் 13.12.25 | Indha Vaara Rasi Palan ...
SIR: 5.6 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம்; கோவை மாவட்ட நிலவரம்
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கிய பணிகள் டிசம்பர் 11-ம் தேதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வாக்காளர்களிடம் பூர்த்தி செய்து பெறப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் உடனடியாக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் சனிக்கிழமை (6.12.2025) வரை 5,06,394 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், இறப்பு தொடர்பாக 1,13, 861 பேரும், கண்டறிய முடியாதவை, இடமாற்றம், இரட்டைப் பதிவு தொடர்பாக 3,92,533 பேரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக தொண்டாமுத்தூர் தொகுதியில் 70,439 பெயர்களும், அதற்கு அடுத்தபடியாக கோவை வடக்கு தொகுதியில் 66,525 பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.
இதேபோல கவுண்டம்பாளையம் தொகுதியில் 64,072 பெயர்கள், கிணத்துக்கடவு தொகுதியில் 58,545 பெயர்கள், சிங்காநல்லூர் தொகுதியில் 54,354 பெயர்கள், கோவை தெற்கு தொகுதியில் 46,894 பெயர்கள், சூலூர் தொகுதியில் 43,465 பெயர்கள், மேட்டுப்பாளையம் தொகுதியில் 41,079 பெயர்கள், பொள்ளாச்சி தொகுதியில் 31,720 வாக்காளர்கள், வால்பாறை தொகுதியில் 29,691 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.“ என்று கூறியுள்ளனர்.

படிவங்களை செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 11-ம் தேதிக்குள் கோவையில் மேலும் 1 லட்சம் பெயர்கள் நீக்கப்படவுள்ளன. இதன் மூலம் கோவையில் 6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
















