பாமக: "அவமானபட்டிருக்கேன்; யாரையும் சும்மா விடமாட்டேன்" - அன்புமணி ராமதாஸ் ஆவேச...
``SIR-ஐ நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ உரிமையே இல்லை" - மக்களவையில் காங்கிரஸ் கடும் வாதம்
பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவசர அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்ட தேர்தல் ஆணையம் (EC), அதன் தொடர்ச்சியாக அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடமும், உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றன.
அதோடு, நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் SIR பற்றி விவாதம் நடத்தப்பட வேண்டும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் மக்களவையில் இன்று SIR விவாதம் நடைபெற்றது.

தேர்தல் ஆணையர் நியமனச் சட்டத்தில் திருத்தும் வேண்டும்!
விவாதத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி, ``முதலில் தேர்தல் சீர்திருத்தமாக, தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான 2023 சட்டத்தைத் திருத்த வேண்டும்.
இந்தத் தேர்வுக் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்கட்சித் தலைவர், கேபினட் அமைச்சர் இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.
இதில் என்னுடைய பரிந்துரை என்னவென்றால், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய இரண்டு பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். அத்தகைய குழு அமைக்கப்பட்டால், அது தேர்தல் ஆணையம் மீதான சந்தேகங்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இங்கு இருக்கும் பலர் தேர்தல் ஆணையத்தின் நடுநிலை குறித்து கேள்விகளை எழுப்ப வேண்டிய அவசியத்தில் இருக்கின்றனர்.
SIR நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை!
பிரிவு 327 ஆனது வாக்காளர் பட்டியல் மற்றும் எல்லை நிர்ணயத்திற்கான சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்துக்கு உரிமை அளித்திருக்கிறது. இன்று பல மாநிலங்களில் SIR நடக்கிறது.
ஆனால், SIR-ஐ நடத்த சட்டப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை. அரசியலமைப்பிலோ அல்லது சட்டத்திலோ SIR நடவடிக்கைக்கு எந்தவொரு ஏற்பாடும் இல்லை.
ஏதாவது தொகுதியின் வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறு இருந்தால், அதை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்து பகிரங்கப்படுத்த வேண்டிய காரணங்களுக்காக, அதைச் சரிசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உள்ளது.
அப்போதுதான் நீங்கள் SIR-ஐ நடத்த முடியும். தவிர முழு பீகார் அல்லது முழு கேரளாவுக்கும் SIR நடத்த முடியாது.

பல தவறுகள் ஒரு சரியை உருவாக்காது!
SIR நடத்த வேண்டுமென்றால் முதலில் எழுத்துப்பூர்வமாகப் பிரச்னைகளைப் பதிவு செய்த பிறகு, வாக்காளர் பட்டியலில் சிக்கல் உள்ள தொகுதிகளில் தனித்தனியாகச் நடத்துங்கள்.
எனவே, எழுத்துப்பூர்வ காரணங்கள் எங்கே என்று அரசாங்கத்திடம் கேட்கிறேன். இப்போது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் SIR நடவடிக்கையை நிறுத்துங்கள்.
SIR-ஐ தொடர்வதற்கான அனுமதி சட்டத்தில் இல்லை. அப்படியென்றால் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட SIR சட்டவிரோதமானவை என்று நீங்கள் கூறுவீர்கள். அதற்கு என்னுடைய பதில், பல தவறுகள் ஒரு சரியை உருவாக்காது.
இந்திய ஜனநாயகத்தில் இரண்டு பங்குதாரர்கள் உள்ளனர். ஒன்று வாக்களிக்கும் வாக்காளர்கள், மற்றொன்று அதில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள். 1988-89ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, வாக்களிக்கும் வயதை 21-லிருந்து 18 ஆகக் குறைத்ததன் மூலம் மிகப்பெரிய தேர்தல் சீர்திருத்தம் செய்தார்" என்று கூறினார்.















