மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு: தீவிரவாதி பலி
South Korea: ராணுவ ஆட்சியை அறிவித்த தென் கொரியா அதிபர் பதவி நீக்கம்..!
கிட்டதட்ட 10 நாள்களுக்கு முன்பு, தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல், "எதிர்க்கட்சிகள் வட கொரியாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது மற்றும் அரசை அதன் கடமையை செய்யவிடாமல் தடுக்கிறது. இதனால், தென் கொரியாவில் ராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்படுகிறது" என்று தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்திருந்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்ப, அடுத்த நாளே அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றார். இருந்தும், அவர் மீது இருந்த அதிருப்தி பெருகிக்கொண்டே வந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை, "என் முடிவால் அதிர்ச்சி அடைந்த மக்களுக்கு என்னுடைய உண்மையான மன்னிப்புகள்" என்று பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார் இயோல்.
இன்று கூடிய தென் கொரியா நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக இயோலுக்கு எதிரான பதவி நீக்க மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா வாக்கெடுப்பில் மொத்த தென் கொரியா நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.
தென் கொரியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 300. இந்த மசோதாவிற்கு 200 வாக்குகள் இருந்தால் போதுமானது. ஆனால், இன்று கூடிய கூட்டத்தில் இந்த மசோதாவிற்கு 203 வாக்குகள் கிடைத்துள்ளது. இதனால், யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவின் வாக்கெடுப்பில் இயோலின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டத்தை புறக்கணித்ததால், அப்போது பதவி நீக்கத்தில் இருந்து இயோல் தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.