ஃபஹத் ஃபாசில் மட்டும்தான் நடிகரா? வெளியானது மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் டீசர்!
Trending Review: டெக்னோ த்ரில்லர் கதைக்களம், நிறைவான நடிப்பு; ஆனாலும் சிக்கல்கள் வரிசை கட்டுவது ஏன்?
சென்னையைச் சேர்ந்த அர்ஜுனும் (கலையரசன்), மீராவும் (ப்ரியாலயா) யூட்யூப் டிரெண்டிங் தம்பதியாக வலம் வருகிறார்கள். லைக்ஸ், ரீல்ஸ், ஸ்டோரி எனச் சமூக வலைத்தளங்களும் அவற்றைச் சார்ந்த வாழ்வுமாக தங்களின் ஒவ்வொரு நாளையும் கடத்துகிறார்கள்.
அதன் வருவாயை நம்பி, கந்து வட்டி கடனையும், வங்கிக் கடனையும் வாங்கி, பெரிய வீட்டை வாங்கி குடியேறுகிறார்கள். இந்நிலையில், திடீரென அவர்களின் யூட்யூப் சானல் டெலிட் ஆக, வருமானமில்லாமல் முடங்குகிறது தம்பதியின் வாழ்க்கை.

இ.எம்.ஐ பிரச்னை, வட்டிப் பிரச்னை போன்றவைக் கழுத்தை நெறிக்கும் தருணத்தில், ஒரு பிரைவேட் நம்பரிலிருந்து இருவருக்கும் அழைப்பு வருகிறது.
அந்த அழைப்பில், அவர்களின் வீட்டிற்குள்ளேயே சிசிடிவிகளின் கண்காணிப்பில் நடக்கும் ஒரு ரியாலிட்டி ஷோவில் விளையாட இருவரையும் அழைக்கிறார் முகமூடி அணிந்த மர்ம மனிதர். அதில் முழுதாக வெற்றி பெற்றால் இரண்டு கோடி ரூபாய் பரிசு தருவதாகவும் உறுதியளிக்கிறார்.
பணப் பிரச்னையிலிருக்கும் தம்பதியினர் இதற்குச் சம்மதித்து, விளையாடத் தொடங்குகின்றனர். அந்த விளையாட்டில் நடக்கும் அதிரடித் திருப்பங்களால், இருவரின் வாழ்க்கையும் என்னவாகிறது என்பதே அறிமுக இயக்குநர் சிவராஜ். என் இயக்கியிருக்கும் 'டிரெண்டிங்'.
ரொமான்ஸ், பதற்றம், வஞ்சம், ஆக்ரோஷம், ஆற்றாமை என கேமின் எல்லா எமோஷன் ஸ்டேஜ்களுக்கும் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் கலையரசன்.

இவரின் சக போட்டியாளராக ப்ரியாலயாவும் எல்லா எமோஷன் டாஸ்கிலும் பாஸ் ஆகிறார். ஆனாலும், வழிந்து திணித்தது போன்ற மிகை நடிப்பு இருவரிடமும் ஆங்காங்கே எட்டிப் பார்ப்பது நெருடல்.
பிரேம்குமார் கொடுத்த வேலையைச் செய்ய, பெசன்ட் ரவி, வித்யா போர்ஜியா ஆகியோர் வந்து செல்கிறார்கள்.
ஒரே வீடுதான் கதைக்களம் என்றாலும், ரிப்பீட் அடிக்காத ப்ரேம்களால் எமோஷன்களைக் கடத்தியதோடு, முடிந்தளவிற்குச் சுவாரஸ்யத்தையும் கூட்டுகிறது பிரவின் பாலுவின் ஒளிப்பதிவு.
பரபரப்பையும், எமோஷனையும் முதற்பாதியில் கச்சிதமாகச் சீர்தூக்கும் நாகூரான் ராமச்சந்திரனின் படத்தொகுப்பு, இரண்டாம் பாதியில் பெரும்பாலான காட்சிகளைத் தேவைக்கு மீறி நீட்டி முழக்கவிட்டிருக்கிறது.
ஆர்ப்பாட்டமில்லாத சாம்.சி-எஸ்ஸின் பின்னணி இசை, விறுவிறு காட்சிகளைச் செறிவாக்குவதோடு, எமோஷன் மோடில் ஒரு கதாபாத்திரமாகவும் உலாவி கவனிக்க வைக்கிறது.

கதைக்களம், கதாபாத்திரங்கள், அவர்களின் பிரச்னை எனச் சிறிது நேரத்திலேயே கடகடவெனக் கதைக்குள் நகர்கிறது திரைக்கதை. வீட்டிற்குள் உருவாக்கப்படும் சின்ன செட் அப், தம்பதிக்குக் கொடுக்கப்படும் முதற்கட்ட டாஸ்குகள் போன்றவைச் சுவாரஸ்யத்தைத் தருகின்றன.
இரண்டாம் கட்டமாக அதிரடிகளோடு கொடுக்கப்படும் டாஸ்குகள், தம்பதிக்கு இடையிலான உறவுச் சிக்கலையும் எமோஷனாக மோதவிட்டு, கதையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துகின்றன.
ஒவ்வொரு டாஸ்க்கிலும் அவர்களின் உறவிற்குள் நிகழும் மாற்றங்கள், நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டு, திரைக்கதை ஆழமாகத் தொடங்குகிறது.
ஆனால், டாஸ்க், ட்விஸ்ட், எமோஷன்ஸ் என அடுக்கிக் கொண்டே போவது, இடைவேளைக்குப் பிறகு அயர்ச்சியைத் தந்துவிடுகிறது. மேலும், மேம்போக்கான காட்சியமைப்புகளும், லாஜிக் இல்லாத திருப்பங்களும் இரண்டாம் பாதியில் வரிசைக்கட்டத் தொடங்குகின்றன.
எமோஷனலாக கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நியாயம் செய்யும் காட்சிகளோ வசனங்களோ இல்லாததால், தேவையான அழுத்தத்தை அவை தரவில்லை.
அதனால், இறுதிக்காட்சியில் அதீத செயற்கைத்தனம் துருத்திக் கொண்டு நிற்கிறது.
இப்படியான டெக்னோ த்ரில்லர் படத்துக்கு வசனங்களும் பலவீனமாக எழுதப்பட்டிருப்பது ஏமாற்றமே!

அந்த மர்ம மனிதர் யார், இந்த விளையாட்டின் பின்னால் உள்ள பெட்டிங் உலகம் என்ன, யூட்டியூப் வருமானத்தை நம்பி இவ்வளவு பெரிய வீட்டை வாங்குவார்களா போன்ற கேள்விகளுக்கு இறுதிவரை பதில் சொல்லாதது பெரிய மைனஸ்.
மனிதர்களின் குணங்களிலும், உறவுகளிலும், சமூகத்திலும் சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களை ஆங்காங்கே பேசுகிறது படம். ஆனால், சில இடங்களில் அதுவே ஓவர்டோஸாகப் போய்விட, பிற்போக்குத்தனங்களையும் அள்ளித் தெளிக்கிறது படம்!
கதைக்கருவும், முதற்பாதியும் லைக்ஸ்களை வாங்கினாலும், சறுக்கலான இரண்டாம் பாதியைச் சரிக்கட்டியிருந்தால், இப்படமும் பெயருக்கு ஏற்றபடி நம் மனத்திலும் 'டிரெண்டிங்' ஆகியிருக்கும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...