TVK: `தீண்டாமை ஒழிப்பு டு போதையில்லா தமிழகம்’ - த.வெ.கவின் அரசியல் கொள்கைகள் இதுதான்!
தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது விஜய்யின் விக்கிரவாண்டி மாநாடான 'தமிழக வெற்றிக் கழகக் கொள்கை திருவிழா' என்ற பெயரில் நடைபெற்ற முதல் மாநாடு.
விஜய் 'தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)' கட்சியை அறிவித்ததிலிருந்து காமராஜர், பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு வந்தார். இவை விஜய்யின் அரசியல் கொள்கைகளை, அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகப் பெரிதும் பேசப்பட்டது. முதல் மாநாட்டிலும் காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், சேர, சோழ, பாண்டியர்கள், தமிழ் அன்னை உள்ளிட்டவர்களின் படங்கள் பெரிய கட் அவுட்டாக வைக்கப்பட்டது. இதுதவிர பூலித்தேவர், ஓண்டிவீரன், மருது சகோதரர்கள், அழகு முத்துக்கோன் உள்ளிட்ட பல விடுதலை போராட்ட வீரார்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன. இவையெல்லாம் விஜய்யின் அரசியல் கொள்கை குறித்த விவாதங்களைக் கிளப்பிவிட்டிருந்தது.
இம்மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார், அவரது கட்சியின் கொள்கைகள் என்னவென்பது எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இந்த நிலையில் மாலை மூன்று மணியளவில் மாநாடு தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து கட்சியின் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பேராசியர் முனைவர் சம்பத்குமார் 'த.வெ.க' கட்சியின் அரசியல் கொள்கைகளை வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டிருந்தாவது,
"கோட்பாடு:
மக்கள் யாவரும் பிறப்பால் சமமே. பாரபட்சமற்ற சமநிலை சமூகம் படைத்தல்.
குறிக்கோள்:
மதம், சாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், பொருளாதாரம் என்கின்ற தனி அடையாளங்களுக்குள் மனித சமூகத்தை சுருக்காது, தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் தனிமனித சமூக பொருளாதார அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தி எல்லோருக்கும் எல்லாமுமான சமநிலை சமூகம் உருவாக்குதல்.
மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்:
ஜனநாயகம்:
ஒரு நாட்டின் மக்களை அவர்கள் சார்ந்த இனம், மதம், மொழி, சாதி, பாலினம் என்று பிரித்து பாகுபடுத்தாமல் சம உரிமைகளை அவர்களுக்கு உத்தரவாதப்படுத்தி சாத்தியப்படுத்துவது.
ஆட்சி அதிகாரம்:
அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தி வெகுஜன மக்களின் அடிப்படை சுதந்திர உரிமைகளை பறிக்கும் மாநில ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நாங்கள் நிலைநாட்டுவது.
சமதர்ம சமூக நீதி:
இட ஒதுக்கீடு அல்ல, விகிதாச்சார இடப் பங்கீடே உண்மையான சமூக நீதிக்கு வழி வகுக்கும். ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சாதி முழுவதுமாக ஒழிக்கப்படும் காலகட்டம் வரை அனைத்து பிரிவினருக்கும், அனைத்து துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்குவது.
சமத்துவம்:
சாதி, மதம், இனம், நிறம், மொழி, பொருளாதாரம், வர்க்கம் மற்றும் பாலின சமத்துவத்துக்குரிய உரிமை. எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்கு சமமானவர்களே என்பது நம்முடைய சமத்துவம்.
மதசார்பின்மை:
மதசார்பற்ற, தனிப்பட்ட மத நம்பிக்கையில் தலையீடற்ற, அனைத்து மதத்தினரையும், மத நம்பிக்கையற்றவரையும் சமமாக பாவிக்கும் அரசு, ஆட்சி நிர்வாகம்தான் நம்முடைய மதசார்பின்மை கொள்கை.
மாநில தன்னாட்சி உரிமை:
மாநில தன்னாட்சி உரிமையை அந்தந்த மாநில மக்களின் தலையாய உரிமை. மாநில தன்னாட்சிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்பது என்பது தமிழக வெற்றி கழகத்தின் மாநில தன்னாட்சி உரிமையாகும்.
இரு மொழிக் கொள்கை:
தாய் மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழியாகிய ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கையை தமிழக வெற்றி கழகம் பின்பற்றுகிறது. தமிழே ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி. தமிழ் மொழி கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
அரசியல் தலையிடற்ற பணி:
உரிமைகளை நிலைநாட்டும் நிர்வாகம் அரசுத்துறை மற்றும் தனியார் துறை இன்று எந்த துறையிலும் லஞ்ச ஊழலற்ற நிர்வாகத்தை நாம் கொண்டு வருவோம். மத, இன, மொழி, வர்க்க பேதமற்ற வகையில் கல்வி சுகாதாரம் தூய காற்று தூய குடிநீர் என்பது எல்லோருக்கும் அடிப்படை உரிமை.
சுற்றுச்சூழல்:
இயற்கை வளங்கள் ஆகியவற்றை பாதுகாப்பது அரசின் தலையாக கடமை.
பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை:
மனித குலத்தின் உடல் மன நலனுக்கு கேடாகும் பிற்போக்கு சிந்தனைகளை நிராகரிப்பது.
தீண்டாமை ஒழிப்பு:
பழமைவாத பழக்க வழக்கங்களை நிராகரிப்பதே தீண்டாமை ஒழிப்பின் முதல் படியாகும்.
இயற்கை வள பாதுகாப்பு:
சூழ்நிலை மற்றும் காலநிலை நெருக்கடி எதிர்கொள்ளக்கூடிய இயற்கைக்கு ஊறு விளைவிக்காத பகுதி சார் மாநில வளர்ச்சி பரவலாக்கம்.
போதையில்லா தமிழகம்:
உற்பத்தித்திறன் உடல் மற்றும் உள்ள நலன் கிடக்கும் சமூக சீர்கேட்டுக்கு வழி வகுக்கும் போதை அறவே இல்லாத தமிழக படைத்தல் தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை கொள்கைகள் ஆகும்".