பாமக: "அவமானபட்டிருக்கேன்; யாரையும் சும்மா விடமாட்டேன்" - அன்புமணி ராமதாஸ் ஆவேச...
TVK: `இந்தியாவில் ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமா புதுச்சேரி?’- விஜய் குற்றச்சாட்டு உண்மையா?
புதுச்சேரி துறைமுக மைதானத்தில் இன்று மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் பிரச்னைகள் குறித்துப் பேசினார். அப்போது, `இந்தியாவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான்’ என்று பேசியிருந்தார்.
அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், `புதுச்சேரி, காரைக்காலை விஜய் எப்போது சுற்றிப் பார்த்தார்? இலவச அரிசித் திட்டம் மாநில அரசின் மூலம் ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுகூடத் தெரியாமல் விஜய் பேசுவது அர்த்தமற்றது’ என்று விமர்சித்திருந்தார். இந்த விவகாரம்தாம்தான் தற்போது விவாதப் பொருளாக மாறியிருக்கும் நிலையில், அதன் பின்னணி குறித்து விசாரித்தோம்.

புதுச்சேரியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் கடைகளில் கோதுமை, மைதா, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகங்கள் நிறுத்தப்பட்டு, சிகப்பு அட்டைக்கு 20 கிலோ, மஞ்சள் நிற அட்டைக்கு 10 கிலோ என அரிசி மட்டுமே இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
கடந்த 2016-ம் ஆண்டு கவர்னராக இருந்த கிரண்பேடி, அரிசி கொள்முதலில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடப்பதாகக் கூறியதுடன், அரிசிக்கு பதிலாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும்படி உத்தரவிட்டார்.
அதன் காரணமாக புதுச்சேரியில் செயல்பட்டு வந்த ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால், ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் ரங்கசாமி.
நடவடிக்கை எடுக்கப்படவில்லை!
ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பிறகும் ரேஷன் கடைகளை திறப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதையடுத்து ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2024 முதல் இலவச அரிசி வழங்கும் பணி துவங்கப்பட்டது.
ஆனால் வாடகைக் கட்டடங்களில் செயல்பட்டு வந்த ரேஷன் கடைகளுக்கு ஆண்டுக்கணக்கில் வாடகை கொடுக்கப்படாததால், அவற்றின் உரிமையாளர்கள் பூட்டு போட்டுவிட்டார்கள்.
அதனால் அப்போது முதல் அரசுப் பள்ளிகள், ஊர் முக்கியஸ்தர்களின் வீடுகளில் வைத்து இலவச அரிசி மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் அதுவும் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரேஷன் கடைகள் செயல்பட்டதாலும், அந்தக் கடைகளும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாலும் திட்டம் ஆரம்பிக்கும்போது மட்டும் நகர்ப்புறத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்டன. அதன்பிறகு பயனாளர்களுக்குப் போன் செய்து வரவழைத்து விநியோகிக்கப்பட்டது.
தற்போது வரை பெரும்பாலான இடங்களில் நிரந்தர ரேஷன் கடைகள் இல்லாமல், அரசுப் பள்ளிகள் மூலம்தான் அரசி விநியோகிக்கப்படுகிறது. கடந்த தீபாவளியில் இருந்துதான் மாதம்தோறும் இலவச அரிசி மட்டும் வழங்கப்பட்டு வருகிறதே தவிர, அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
தீபாவளிக்கு மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோல கமிஷன் அடிப்படையில் சம்பளம் பெற்றுவரும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதும் கூடுதல் தகவல்.!















