TVK: "தொண்டர்களை தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா?" - விஜய் கட்சிக்கு நீதிமன்றம் கேள்வி!
தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்யும் கூட்டங்களுக்கு நிறைவேற்ற சாத்தியமில்லாத, நியாயமற்ற நிபந்தனைகளை தமிழக காவல்துறை விதிப்பதாக அந்தக் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தொடுத்த வழக்கில், அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் பொதுவான வழிமுறைகளை உருவாக்க வேண்டுமென்றும், பொதுச் சொத்துகள் சேதமானால் இழப்பீடு பெற முன்பணமாக குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்யப்பட வேண்டுமென்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தவெக போட்ட வழக்கு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 13ம் தேதி பரப்புரையைத் தொடங்கினார். டிசம்பர் 20ம் தேதி வரை சனி, ஞாயிறு கிழமைகளில் தமிழகம் முழுவதும் பயணம் செய்து பரப்புரை செய்கிறார்.
தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை தரப்பில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
பின்னர், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் DGP-யிடம் பரப்புரை நடத்த அனுமதியளிக்குமாறு மனு அளித்ததைத் தொடர்ந்து, கடந்த 13ஆம் தேதி திருச்சியில் பரப்புரையில் ஈடுபடுவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதியளித்திருந்தது காவல்துறை.
இதனைச் சுட்டிக்காட்டி, விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்க வேண்டும் என த.வெ.க. துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று (செப் 18) நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
த.வெ.க சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, மற்ற கட்சிகளுக்கு விதிக்கப்படாத, நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் தவெக-வுக்கு விதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
எந்த வழியாக சென்னைக்குத் திரும்ப வேண்டும், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக் கூடாது, எத்தனை கார்கள் வரவேண்டும் என பல்வேறு விஷயங்களில் காவல்துறை நிபந்தனை விதிப்பதாக வாதாடினார்.
விஜய்க்கு கேள்வி
இந்த வழக்கு விசாரணையின்போது, "தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயரமான இடங்களில் ஏறி நின்று ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது? தொண்டர்களை தலைவர்களாகிய நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா?" என கேள்வி எழுப்பியுள்ளது உயர் நீதிமன்றம்.
அத்துடன் அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில், பொதுவான விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. திருச்சியில் தவெக தொண்டர்கள் ஏற்படுத்திய சேதத்துக்கு இழப்பீடு விதிக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்கவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 24ம் தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளது.