ஹெச்.ஐ.வி வைரஸ்; சிகிச்சை எடுத்தால் 100 வயது வாழலாம் - தைரியம் கொடுக்கும் நிபுணர...
UP: SIR பணிகளால் அழுத்தம்; உயிரை மாய்த்துக்கொண்ட BLO - நடந்தது என்ன?
உத்தரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த 46 வயது BLO வேலைப்பழு காரணமாக தனது வீட்டில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தொடர்பான வேலைப் பளுவால் ஏற்பட்ட அழுத்தமே தற்கொலைக்கான காரணம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா, சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் வேளையில் கடந்த சில வாரங்களாக, அதிகப்படியான வேலைப்பளு மற்றும் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக பல பூத் லெவல் ஆபீசர்கள் (BLO) தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவது, அரசியல் தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
More than 30 BLOs have committed suicide due to the extreme mental stress of SIR work. This is the video of BLO Sarvesh Singh in which he was crying before taking his life.@ECISVEEP and Gyanesh Kumar have not even acknowledged these deaths, let alone offered a word of… pic.twitter.com/u0eBDzcwX3
— Dr. Shama Mohamed (@drshamamohd) December 1, 2025
காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ஷாமா முகமது நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட BLO-க்கள் SIR பணிகளால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அழுதபடி வீடியோ வெளியிட்ட ஆசிரியர்
உத்தரப் பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட சர்வேஷ் சிங், ஒரு பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த அக்டோபர் 7-ஆம் தேதிதான் இவருக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) பணி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான இவரது முதல் பணி இதுதான்.
BLO என்பவர், பொதுமக்களுக்குத் தேர்தல் தொடர்பான படிவங்களை நிரப்பவும், விவரங்களை உரிய தரவுத்தளங்களில் பதிவேற்றவும் உதவும் முதல்நிலைத் தொடர்பு அதிகாரி ஆவார்.
தற்கொலை செய்வதற்கு முன் சிங் பதிவு செய்ததாகக் கூறப்படும் ஒரு வீடியோவில், அவர் கடுமையாக உழைத்த போதிலும், தன்னால் பணியை முடிக்க முடியவில்லை என்று கூறி, துக்கத்தில் உடைந்து அழுவதைக் காண முடிகிறது. அந்த வீடியோவில், அவர் தனது தாயிடமும், சகோதரியிடமும் மன்னிப்பு கேட்பதுடன், தனது இளம் மகள்களைக் கவனித்துக் கொள்ளுமாறு கண்ணீருடன் கெஞ்சுகிறார்.
அதில், கட்டுக்கடங்காமல் அழுதபடி, "அம்மா, என் மகள்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள். என்னால் பணியை முடிக்க முடியவில்லை. நான் ஒரு கடுமையான முடிவை எடுக்கப் போகிறேன்" என்று அவர் கூறியது பார்ப்பவர்களை நடுங்க வைத்துள்ளது.
மேலும், தனது இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை என்றும், தனது குடும்பத்தினரை யாரும் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
"நான் ஆழ்ந்த துயரத்தில் இருக்கிறேன். கடந்த 20 நாட்களாக என்னால் தூங்கவே முடியவில்லை. எனக்கு நான்கு இளம் மகள்கள் உள்ளனர். மற்றவர்களால் வேலையை முடிக்க முடிகிறது, ஆனால் என்னால் முடியவில்லை" என்று வீடியோவில் அவர் விம்மி அழுதுள்ளார்.
தமது சகோதரியை குறிப்பிட்டு பேசிய அவர், "நான் இந்த உலகை விட்டு வெகு தூரம் செல்கிறேன். என்னை மன்னித்துவிடு. நான் இல்லாத நேரத்தில் என் குழந்தைகளைக் கவனித்துக்கொள்" என்று பேசியுள்ளார்.
இரண்டு பக்க தற்கொலை கடிதம்... காவல்துறையினர் சொல்வதென்ன?
அதிகாரிகள் கூறுவதன்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சர்வேஷ் சிங்கின் மனைவி பப்லி தேவி, அவர் வீட்டின் ஸ்டோர் ரூமில் தூக்கில் தொங்குவதைக் கண்டு, உடனடியாக உள்ளூர் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து, மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரிக்கு கையால் எழுதப்பட்ட, இரண்டு பக்கத் தற்கொலைக் குறிப்பு மீட்கப்பட்டுள்ளது.
அந்தக் குறிப்பில், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) தன்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று சிங் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
"நான் இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் SIR இலக்குகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. கவலையால் என்னால் இரவுகளைக் கடக்க முடியவில்லை. நான் பாடுபட்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன். எனக்கு நான்கு மகள்கள் உள்ளனர், அவர்களில் இரண்டு பேர் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்" என்று அந்தத் தற்கொலைக் குறிப்பில் எழுதப்பட்டிருக்கிறது.
தற்கொலைக் குறிப்பின் உள்ளடக்கத்தை உறுதிப்படுத்திய மூத்த காவல் அதிகாரி ஆஷிஷ் பிரதாப் சிங், "BLO பணியின் சுமையைத் தன்னால் சமாளிக்க முடியவில்லை என்று அந்தக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் நடந்துவரும் இந்தப் பரந்துபட்ட SIR பணி காரணமாக சிங் கடும் அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் சிங் இந்த மரணத்தை உறுதிப்படுத்தியதுடன், "முதற்கட்டத் தகவலின்படி அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது வேலையின் தரம் சிறப்பாக இருந்திருக்கிறது. அவருக்கு உதவ அங்கன்வாடி ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். நிர்வாக ரீதியாகவும் காவல்துறை ரீதியாகவும் விசாரணைகள் நடந்து வருகின்றன. குடும்பத்தினருக்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவோம்" என்று தெரிவித்துள்ளார்.
SIR காலக்கெடு நீட்டிப்பு!
இதற்கிடையில், இந்தியத் தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டித்துள்ளது.
இதனால், வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சரியாகச் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கூடுதல் நேரம் கிடைத்துள்ளது.
மேலும், சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) மற்றும் சாவடி நிலை முகவர்கள் (BLAs) ஆகியோருக்கும் விடுபட்டவர்கள், மாற்றப்பட்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் நகல் வாக்காளர்கள் ஆகியோரின் பட்டியலைச் சமர்ப்பிக்க கூடுதலாக ஏழு நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.













