மக்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும்: சிரியாவின் இடைக்கால பிரதமர் அழைப்பு!
UP: நடிகையின் மகன் மர்ம மரணம்; போராட்டம் செய்த கிராம மக்கள்... நடந்தது என்ன?
இந்தி டிவி தொடர்களில் நடித்து வருபவர் சப்னா சிங். இவரது 14 வயது மகன் உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில், மாமா வீட்டில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வந்தான். அம்மாணவனின் மாமா ஓம் பிரகாஷ் கடந்த 7-ம் தேதி அவனை காணவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், அந்த மாணவனின் உடல் சடலமாக அருகில் உள்ள கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை மீட்டு போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆரம்பத்தில் இறந்து கிடந்த மாணவன் யார் என்று அடையாளம் தெரியாமல் இருந்தது. விசாரணையில், கொலை செய்யப்பட்ட மாணவன் அடையாளம் காணப்பட்டான். உடல் கிடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அச்சிறுவனின் உடலை இரண்டு பேர் இழுத்துச்சென்றது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வந்தனர். மகன் கொலை செய்யப்பட்டது குறித்து கேள்விப்பட்டதும் சப்னா சிங் மும்பையில் இருந்து தனது சொந்த ஊருக்கு விரைந்துச் சென்றார்.
அவர் தனது மகனின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனே கைது செய்யவேண்டும் என்று ஊர்மக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார்.
கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சப்னா சிங் மகனின் உடலை இழுத்துச்சென்ற அனுஜ் மற்றும் சன்னி ஆகிய இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூன்று பேரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். அதோடு, போதைப்பொருளும் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதில் போதை அளவுக்கு அதிகமானதால் நடிகையின் மகன் மயங்கி விழுந்துவிட்டான். உடனே அவனை இழுத்துக்கொண்டு வந்து காட்டில் போட்டுவிட்டுச்சென்றதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
இறந்து போன சிறுவனின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று கிராம மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக புதிதாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
சப்னா சிங் வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவில், "தனது மகனின் கால்கள் உடைக்கப்பட்டு இருந்தது. கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது, துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளான்" என்று குறிப்பிட்டுள்ளார். சப்னா சிங் தனது இறந்து போன மகனின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.