Wayanad Bypoll: 14,70,000 வாக்காளர்கள், 1,354 வாக்கு மையங்கள், விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு!
கேரள மாநிலம், வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்துச் செல்கின்றனர். ராகுல் காந்தி வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெறும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
பிரியங்கா காந்தி போட்டியிடும் முதல் தேர்தல் இதுவாகும். கேரள மாநிலத்தின் ஆளும் கட்சியான இடது ஜனநாயக முன்னணி சார்பில் சத்யன் மொகேரி களத்தில் இருக்கிறார். பா.ஜ.க தரப்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகிறார். இதுதவிர சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் களத்தில் உள்ளனர்.
கேரள மாநிலத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் 14,71,742 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 1,354 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்துச் செல்கின்றனர்.
வயநாடு நிலச்சரிவு பேரிடரில் உயிர் பிழைத்து, தற்போது பல பகுதிகளில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் வாக்களிக்க மேப்பாடி பகுதியில் சிறப்பு வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இலவசமாக வாகன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 23 -ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.