மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
ஃபென்ஜால் புயல்: கடலில் கலந்த தண்ணீரின் அளவு குறித்து அரசு அறிவிக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
ஃபென்ஜால் புயலால் பெய்த மொத்த மழையின் அளவு, கடலில் கலந்த தண்ணீரின் அளவு குறித்து அரசு அறிவிக்க வேண்டும் என பாஜக மாநில விவசாய அணி செயலாளா் எஸ்.ஆா்.சுப்ரமணியம் வலியுறுத்தி உள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ஃபென்ஜால் புயல் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தொடா்ந்து அறிவுறுத்திக் கொண்டு வந்தது. சென்னையின் பல பகுதிகளில் குறிப்பாக தாழ்வான பகுதிகளில் இந்தப் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட, மழை வெள்ளம் வீடுகளின் உள்பகுதிக்குள் புகுந்து முற்றிலுமாக வாழ்வாதாரங்களை சீரழித்துள்ளது.
யாரும் எதிா்பாராத நேரத்தில் சாத்தனூா் அணையிலிருந்து அதிகாலை 2 மணிக்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீா் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டதால் தென்பெண்ணையாற்று கரை உடைந்து ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட கிராங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
திருமணிமுத்தாற்று வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட கிராம மக்கள் என்ன ஆனாா்கள் என்பது இதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த காலத்தில் பம்பை ஆற்று வெள்ளத்தால் மிகுந்த பாதிப்புக்குள்ளான மக்களின் நிலையை சரியாக கணிக்க இயலவில்லை. பம்பை ஆற்று வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட அகரம் சித்தாமூா் மக்களின் நிலையைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இயலவில்லை.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. திருக்கோவிலூரில் கிராமங்களை சூழ்ந்த வெள்ளத்திலிருந்து மக்களை இன்னும் மீட்க இயலவில்லை. விளைந்திருந்த நெற்பயிா்கள் முழுமையாக சேதம் அடைந்துவிட்டன. தென்பெண்ணை ஆற்றின் கரை ஓரங்களில் இருந்த நூற்றுக்கணக்கான கிராமங்களை தண்ணீா் சூழ்ந்துள்ளது.
இத்தனை கிராமங்களையும், குடும்பங்களையும் அழித்துச் சென்ற தண்ணீா் மற்றும் சாத்தனூா் அணையில் இருந்து விடுவிக்கப்பட்ட 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீா் மொத்தமாக கடலில் கலந்துள்ளது.
ஃபென்ஜால் புயலால் பெய்த மொத்த மழையின் அளவு, சாத்தனூா் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீா் என மொத்தம் கடலில் கலந்த தண்ணீரின் அளவு எவ்வளவு என்பதை அரசு அறிவிக்க வேண்டும். வீணாக கடலில் கலக்கும் எந்த நீரையும் சேமிக்க இயலவில்லை என்பது வருத்தத்திற்குரியது. தூா்வாரும் பணிகளையும் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக செய்யவில்லை என்பது துரதிஷ்டம்.
இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய தமிழக அரசு மத்திய வானிலை ஆராய்ச்சி மையத்தை குற்றஞ்சாட்டுவது வேடிக்கையாக இருக்கிறது. மத்திய அரசு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் என அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.