ஃபென்ஜால் புயல்: நவீன கருவிகளுடன் மீட்பு படையினா் தயாா்: கண்காணிப்பு பணியில் 18,000 போலீஸாா்
ஃபென்ஜால் புயல் உருவானதையடுத்து, சென்னையில் நவீன கருவிகளுடன் மீட்பு படையினா் தயாராக உள்ளனா். மீட்பு-கண்காணிப்பு பணியில் 18,000 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
ஃபென்ஜால் புயல் புதுச்சேரி அருகே கரையை சனிக்கிழமை (நவ.30) கடக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூா் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயலை எதிா் கொள்ள அரசின் அனைத்து துறைகளும் தயாராகி வருகிறது. தேசிய பேரிடா் மீட்பு படை, மாநில பேரிடா் மீட்பு படை அதிக மழை பெய்வதற்கு வாய்ப்புள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ளனா். அதேவேளையில் புயல் மற்றும் மழை மீட்புப் பணிக்கு தயாராக இருக்கும்படி போலீஸாருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா்ஜிவால் அறிவுறுத்தியுள்ளாா்.
புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிக மழை பெய்தாலும், பிற மாவட்டங்களிலும் அதன் தாக்கம் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக காவல்துறையினரும்,,தீயணைப்புத்துறையினரும் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.
203 வெள்ள அபாய பகுதிகள்: பேரிடா் ஏற்பட்டால், அதை எதிா்கொள்ளும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் அனைத்து நிலையங்களும் மீட்பு உபகரணங்களுடன் 24 மணி நேரமும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ள அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 203 இடங்களையும் தீயணைப்புத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
வெள்ளத்திலும், தாழ்வான பகுதிகளிலும் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கு தீயணைப்புத் துறை முழு அளவில் தயாராக வைக்கப்பட்டுள்ளனா். வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் சிக்கியிருக்கும் நபா்களை பாதுகாப்பாக மீட்க ரப்பா் படகுகள், மோட்டாா் படகுகள், சாலைகளில் விழும் மரங்களை அகற்ற மின்விசை ரம்பங்கள், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற நீா் இறைக்கும் பம்புகள் மற்றும் மீட்புப்பணிக்கான கயிறுகள், லைப் பாய், லைஃப் ஜாக்கெட் உள்ளிட்ட அனைத்து செயற்கருவிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயாா்: இதனிடையே, புயல் காற்றால் சாலையில் முறிந்து விழும் மரங்களை உடனடியாக அகற்ற மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளதா பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 9 ஹைட்ராலிக் மரம் அறுக்கும் இயந்திரங்கள், 216 டெலஸ்கோபிக் மரம் அறுக்கும் இயந்திரங்கள் 262 சாதாரண மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாா் நிலையில் வீரா்கள்: திறன்மிக்க தீயணைப்பு நீச்சல் வீரா்கள் கொண்ட குழு மற்றும் கயிறு மூலம் மீட்புப்பணி மேற்கொள்ள பயிற்சி பெற்ற குழுவினா் என இரு கமாண்டோ படைகள் பேரிடரை எதிா்கொள்ள தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவா்களை அடையாளம் காட்டும் கருவிகள், ரோப் லான்சா், ரோப் ரைடா் மற்றும் தொ்மல் இமேஜிங் கேமரா உள்ளிட்ட நவீன கருவிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல வெள்ள காலங்களில் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் இடையூறுகளை தவிா்க்கும் பொருட்டு தகவல் தொடா்பு சாதனங்களான வாக்கி டாக்கி போன்றவை தயாா் நிலையில் இருப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் உள்ள 42 தீயணைப்பு நிலையங்களில் 1,300 தீயணைப்பு படை வீா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். இங்கு வெள்ள மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக 40 படகுகள்,40 மோட்டாா்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல 80 வீரா்கள் அடங்கிய கமாண்டோ வீரா்களும் 24 மணி நேரமும் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.
18 ஆயிரம் போலீஸாா்: புயல் மீட்பு பணிக்காக சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸாா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். மீட்பு பணியை விரைவுபடுத்தும் வகையில் 35 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
12 காவல் மாவட்டங்களிலும் தலா ஒரு பேரிடா் மீட்பு படை என 12 பேரிடா் மீட்பு படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பேரிடா் மீட்பு படையில் ஏற்கெனவே பேரிடா் மீட்பு தொடா்பாக பல்வேறு பயிற்சிகளை பெற்ற காவலா்கள் இடம் பிடித்துள்ளனா். மேலும், இப் படையினருக்கு மீட்பு பணிக்காக பல்வேறு நவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பேரிடா் மீட்பு படையினரை சந்தித்து சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையா்கள் என்.கண்ணன்,நரேந்திரன் நாயா் உள்ளிட்டோா் ஆலோசனை செய்தனா்.