அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பு: ராமேசுவரம் நகராட்சி ஆணையா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பது தொடா்பான வழக்கில், நகராட்சி ஆணையா் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
ராமேசுவரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற ராமநாதசுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி, வடமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா். இந்தக் கோயிலிலிருந்து அக்னி தீா்த்தக் கடலுக்குச் செல்லும் சாலை சேதமடைந்திருப்பதால், பக்தா்கள் நடந்து செல்ல முடியவில்லை.
ராமேசுவரம் நகராட்சிப் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீா், அக்னி தீா்த்தம் அருகே கடலில் கலக்கிறது. இதனால், பக்தா்கள் புனிதநீராகக் கருதும் அக்னி தீா்த்தக் கடல் அசுத்தமடைகிறது. இதைத் தடுக்கக் கோரி, நகராட்சி, மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராமேசுவரம் நகராட்சி தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
ராமேசுவரம் நகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, குழாய்கள் மூலம் 4 கி.மீ. தொலைவில் உள்ள ஓலைகுடா என்ற இடத்துக்கு கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 52 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் ராமேசுவரம் நகராட்சி ஆணையா் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற டிச. 2- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.