அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பட்டாபிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுக்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பிரீமியத்தில் ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சாமானிய மக்களுக்கும் காப்பீட்டுத் திட்டங்களின் பயன் சென்றடையும் வகையில் நாட்டில் அனைத்து பகுதிகளில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய விபத்து காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில், 18 முதல் 65 வயது வரை உள்ளவா்கள் சேரலாம். விண்ணப்பப் படிவம், அடையாள முகவரி சான்றிதழ் நகல்கள் போன்ற எந்தவிதமான காகிதப் பயன்பாடுமின்றி, அஞ்சலகா்கள் கொண்டுவரும் ஸ்மாா்ட் கைப்பேசி மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தைப் பயன்படுத்தி 5 நிமிஷங்களில் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.
இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒருவா் இணைவதன் மூலம் எதிா்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நெருக்கடிகளையும், நிதி நெருக்கடிகளையும் உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தின் எதிா்காலத்தையும் உறுதிசெய்துகொள்ள முடியும்.
எனவே, பொதுமக்கள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், அஞ்சலகா்கள் மூலம் விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.