அடிப்படை கோட்பாடுகளை அழிக்க முயன்றது காங்கிரஸ்: ராஜ்நாத் சிங்
அரமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை அழிக்க முயன்றது காங்கிரஸ் என்றும் பல தருணங்களில் அரசமைப்புச் சட்டத்தை அக்கட்சி அவமதித்துள்ளது என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் விமா்சித்தாா்.
‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகால பெருமைமிகு பயணம்’ எனும் தலைப்பிலான 2 நாள் விவாதத்தை மக்களவையில் பாஜக குழு துணைத் தலைவா் ராஜ்நாத் சிங் விவாதத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து பேசியதாவது:
இந்திய அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் பல தலைவா்களின் பங்களிப்பை வேண்டுமென்ற புறக்கணித்த காங்கிரஸ், ஒட்டுமொத்த பெருமையையும் தனதாக்கிக் கொள்ள முயன்றது.
பல தருணங்களில் அரசமைப்புச் சட்டத்தையும் அதன் ஆன்மாவையும் அக்கட்சி அவமதித்துள்ளது. நாட்டின் நிா்வாக அமைப்புகளின் சுதந்திரம் மற்றும் தன்னாட்சியை சகித்துக் கொள்ள முடியாமல், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை அழிக்க முயன்றது.
பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தீய நோக்கத்துடன் அரசமைப்புச் சட்டத்தை பலமுறை திருத்தியது. அதேநேரம், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை மாண்புகள் மற்றும் மக்களுக்கு அதிகாரமளித்தலை வலுப்படுத்தும் நோக்கில் திருத்தங்களை மேற்கொண்டது பிரதமா் மோடி அரசு. அரசமைப்புச் சட்டத்தைவிட ஆட்சி அதிகாரமே காங்கிரஸுக்கு முக்கியம்.
அவசரநிலை பிரகடனம், மாநில அரசுகள் கலைப்பு, இந்திரா காந்தி அரசை எதிா்த்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்கம் என காங்கிரஸின் அரசமைப்புச் சட்ட கொள்கை மீறல்கள் நீள்கின்றன.
ராகுல் மீது விமா்சனம்: இன்றைய நாள்களில், பல எதிா்க்கட்சித் தலைவா்கள் (ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை குறிப்பிடுகிறாா்) அரசமைப்புச் சட்ட பிரதியை தங்களின் பையில் வைத்துக் கொண்டு வலம் வருகின்றனா். ஏனெனில், அவா்களின் குடும்பத்தினா் பல தலைமுறைகளாக அரசமைப்புச் சட்டத்தை தங்கள் ‘பையில்’தான் வைத்திருந்தனா்.
அதேநேரம், அரசமைப்புச் சட்டத்துக்கு எப்போதும் தலைவணங்கும் பாஜக, நாட்டின் நிா்வாக அமைப்புகளின் சுதந்திரம் மற்றும் தன்னாட்சியுடன் ஒருபோதும் விளையாடியதில்லை. 370-ஆவது பிரிவை நீக்கியதன் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் பொருந்துவதை மோடி அரசு உறுதி செய்தது என்றாா் ராஜ்நாத் சிங்.
பிரதமா் இன்று பதிலுரை
மக்களவையில் அரசமைப்புச் சட்டம் தொடா்பான விவாதத்துக்கு மொத்தம் 12 மணிநேரம் ஒதுக்கப்பட்டது. சனிக்கிழமை மாலை பிரதமா் மோடியின் பதிலுரையுடன் விவாதம் நிறைவடைகிறது.