அடுத்தகட்டம் நோக்கி நகரும் ரஷ்யா - உக்ரைன் போர்... விளைவுகள் எப்படி இருக்கும்?
ஆயிரம் நாள்களைக் கடந்தும் முடிவடையாமல் சென்றுகொண்டிருக்கிறது ரஷ்யா- உக்ரைன் போர். முன்பை விட மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் இந்த போரில், ரஷ்யா முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை உக்ரைன் மீது பிரயோகித்திருக்கிறது. இதை, உக்ரைனின் முன்னாள் ராணுவத் தளபதி `மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது' என வர்ணித்திருக்கிறார்.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின் , கடந்த 2022, பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன்மீது போர்த்தொடுக்க தனது நாட்டு ராணுவத்துக்கு அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து, வான்வழித் தாக்குதல்கள், தரைவழித் தாக்குதல்கள் நடத்தியபடி உக்ரைன் எல்லைக்குள் நுழைந்தது ரஷ்ய ராணுவம். அடுத்தடுத்து உக்ரைனின் பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டே வந்தே ரஷ்யப் படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது. அந்தநிலையில்தான், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளின் ஆயுத உதவிகளுடன் மாபெரும் ரஷ்யப் படைகளை எதிர்த்து மல்லுக்கட்டி வருகிறது உக்ரைன். இருப்பினும், ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் நிலைகுலைந்து வருகிறது.
குறிப்பாக, ரஷ்யா- உக்ரைன் போரில், இதுவரையில் 1,20,000 ராணுவ வீரர்களை இழந்திருக்கிறது ரஷ்யா. அதேபோல, உக்ரைன் சுமார் 80,000 படை வீரர்களை பறிகொடுத்திருக்கிறது. ஐ.நா அறிக்கையின்படி, ரஷ்யா-உக்ரைன் போரின் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட சுமார் 14,000-க்கும் அதிகமானோர் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். மேலும், 1,496 கல்வி நிறுவனங்கள், 662 சுகாதார நிலையங்கள், மின்சார நிலையங்களும் சேதமடைந்திருக்கின்றன. லட்சக்கணக்கான மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், ``நான் போர்களை தொடங்கப் போவதில்லை; நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர்களை நிறுத்தப்போகிறேன்" என்றுகூறியது போர் நிறுத்தத்துக்கான நம்பிக்கை அறிகுறியாகத் தென்பட்டது. ஆனால், அதன்பின்னும் தீவிரமாக போர் நடவடிக்கைகள் நடைபெற்றுவருவது உலக மக்களை கவலை கொள்ளச் செய்திருக்கிறது.
அதாவது, போர் நிறுத்தம் வரும் என உலக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, `உக்ரைன் இந்தப் போரில் அமெரிக்கா கொடுத்திருக்கும் நீண்ட தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்தினால், நாங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்' என்று அதிரடியாக அறிவித்தது. மேலும், அதற்காக தனது அணு ஆயுதக் கொள்கையிலும் புதிய சட்ட திருத்தத்தையும் மேற்கொண்டது ரஷ்யா. இது உக்ரைன் மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அதிரச் செய்தது.
இந்த நிலையில், தற்போது ICBM (Intercontinental Ballistic Missile) எனும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை உக்ரைன் மீது ஏவியிருக்கிறது ரஷ்யா. ஆயிரம் நாள்கள் போர் வரலாற்றில் முதல் முறையாக ரஷ்யா இந்த வகை ஆயுதத்தை பயன்படுத்தியிருப்பதால் போர் இன்னும் தீவிரமாக வலுவடைந்திருக்கிறது.
இந்த நிலையில், உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதியும் தற்போதைய பிரிட்டனுக்கான உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி (Valery Zaluzhny), ``2024-ம் ஆண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது" எனத் தெரிவித்திருப்பது உலக அரங்கில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இதுகுறித்து உக்ரைனில் நடந்த விருது வழங்கும் விழாவில் பேசிய வலேரி ஜலுஷ்னி, ``2024-ம் ஆண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. ரஷ்யாவுக்காக 10,000 வட கொரிய ராணுவத்தினர் உக்ரைனுக்கு எதிராகப் போரிட குர்ஸ்க் பகுதியில் நிலை நிறுத்தப் பட்டிருக்கின்றனர். அதேபோல, ஈரானின் நவீன ட்ரோன்கள் மற்றும் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது.
இவற்றையெல்லாம் உக்ரைன் அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் தாக்குப்பிடித்து வருகிறது. ஆனாலும், போரில் உக்ரைன் தனித்து நின்று வெல்லுமா என்று நம்பிக்கையாகக் கூறமுடியாது. உக்ரைனின் பொதுமக்களை எவ்வித கூச்சமும் இல்லாமல் கொன்று குவித்து வருகிறார்கள். உக்ரைன் நாட்டின் ஆதரவாளர்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் போர் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படுவது கூட இன்னும் சாத்தியம்தான். ஆனால் சில காரணங்களால், எங்கள் ஆதரவாளர்கள் இதைப் புரிந்து கொள்ள விரும்பவில்லை. உக்ரைனுக்கு ஏற்கனவே பல எதிரிகள் இருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்!" என்றிருக்கிறார்.
போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் பெருமளவு ஏற்படக்கூடும் என அச்சம் தெரிவிக்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.
இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து எலான் மஸ்க் X - பக்கத்தில் தனது கருத்தையும் புகைப்பட வீடியோவும் பகிர்ந்து, வருத்தம் தெரிவித்துள்ளார்.