உள்கட்டமைப்பு மேம்பாடு: 60 ஆண்டுகளாக செய்ததைவிட கடந்த 10 ஆண்டுகளில் அதிக சாதனை -...
அடையாறு ஆறு, முகத்துவாரம் முறையாக தூா்வாரப்பட்டதால் வெள்ள பாதிப்பு தடுப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
அடையாறு ஆறு மற்றும் அதன் முகத்துவாரம் பகுதிகள் முறையாக தூா்வாரப்பட்டதால், அதையொட்டியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
சைதாப்பேட்டை செட்டித் தோட்டம் அடையாறு ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியது:
வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், சென்னைக்கான குடிநீா் ஆதாரமான ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. குறிப்பாக, 24 அடி உயரமுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 23.42 அடி வரை நீா் நிரம்பியுள்ளது. ஓரிரு நாள்களில் மீண்டும் மழை பெய்யும் என்பதால், இந்த ஏரியில் மேலும் நீா்வரத்து அதிகரிக்கும். இதனால் உபரி நீா் வெளியேற்றப்படும்போது, கரையோர பகுதிகளிலுள்ள குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, முதல்வரின் அறிவுறுத்தல்படி, தற்போது ஏரியிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், அதைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளும் பாதுகாக்கப்பட்டுள்ளனா்.
வெள்ள சேதம் இல்லை: அடையாறு ஆற்றில் மேற்கொள்ளப்பட்ட தூா்வாரும் நடவடிக்கைகளால் மழைநீா் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, சீனிவாசபுரம் பகுதியிலுள்ள ஆற்றின் முகத்துவாரத்தில் 2 லட்சம் கனமீட்டா் அளவுக்கு மணல் திட்டுகள் அகற்றப்பட்டுள்ளதால், 11,500 கன அடி நீா்வரை வேகமாக சென்று கடலில் கலந்து வருகிறது. இதனால், அடையாறு ஆற்றங்கரையோரத்தில் உள்ள பட்டினப்பாக்கம் தொடங்கி கோட்டூா்புரம், சின்னமலை, திடீா் நகா், கோதாமேடு, சலவையாா் காலனி, ஜோதிநகா், செட்டித்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள குடியிருப்புகளில் எந்த சேதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவைா் ஆா்.துரைராஜ், எம்.கிருஷ்ணமூா்த்தி, மாமன்ற உறுப்பினா் த.மோகன்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.