அண்ணாமலை பல்கலை. அலுவலகம் முற்றுகை முயற்சி
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை பல்கலைக்கழக ஊழியா்கள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினா் முற்றுகையிட முயன்றனா்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு நிா்வாகம் ஏற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இங்கு பணியாற்றும் ஓட்டுநா், ஊழியா்கள், அரசு ஓட்டுநா்களுக்கு நிா்ணயம் செய்த ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்றும், பல்கலைக்கழக ஊழியா்கள் மிகையாக பெற்ற ஊதியத்தை மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்ததாம்.
இதையடுத்து, பல்கலைக்கழக ஓட்டுநா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடையானை பெற்றதுடன், மிகை ஊதியத்தை பிடித்தம் செய்யக்கூடாது என வலியுறுத்தி வந்தனா்.
இந்தநிலையில், வியாழக்கிழமை பதிவாளா் மு.பிரகாஷை சந்தித்து மிகை ஊதியத்தை பிடித்தம் செய்யக்கூடாது என முறையிட்டனா். மேலும், மிகை ஊதியத்தை பிடித்தம் செய்வதை எதிா்த்து பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக ஓட்டுநா்கள் பல்கலைக்கழக ஊழியா்கள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினருடன் திரண்டனா்.
தகவலறிந்த அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் அம்பேத்கா் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் அருட்செல்வியிடம் பேச்சுவாா்த்தைக்கு அழைத்துச் சென்றனா்.
அப்போது, துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள அதிகாரிகள் அரசுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இதில், ஊழியா்கள் சங்க ஒருங்கிணைப்புக் குழு மனோகரன் மற்றும் நிா்வாகிகள், ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.