செய்திகள் :

அதிகரிக்கும் கடத்தல்; குறைந்து வரும் பாதுகாப்பு நிதி - குழந்தைக் கடத்தலும் கொடூர பின்னணியும்!

post image

''பொதுவாக, மக்களிடம் குழந்தைகள் காணாமல் போகிறார்கள் அல்லது மாயமாகினர் என்ற வார்த்தை தான் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், அவர்கள் காணாமல் போகவில்லை, பெரும்பாலும் கடத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை. ஒரு குழந்தை கடத்தப்பட்டது என்பது ஒரு குடும்பத்தின் நிம்மதியை வேருடன் பறிக்கிற ஒரு சம்பவம். குழந்தைகளைக் கடத்துவதன் மூலம் வயிறு வளர்ப்பவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும். அது நடவாது எனும்போது அரசாங்கமும் காவல்துறையும்தான் இந்த விஷயத்தில் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், ஆள் கடத்தலுக்கு எதிரான சட்டம் இந்தியாவில் கடந்த பத்து வருடங்களாக நிறைவேற்றப்படாமலே இருக்கிறது. உலகத்தில் போதைப்பொருள்கள் கடத்தலுக்கு அடுத்தபடியாக மனித கடத்தல் வணிகமே அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். குழந்தை கடத்தல் என்பது மிகக் கொடூரமான வன்முறை என்ற புரிதலே நம்மிடம் இல்லை'' என்றபடி, வேதனையுடன் பேச ஆரம்பிக்கிறார் குழந்தைகள் நலச்செயற்பாட்டாளரான தேவநேயன்.

கடத்தல்

குழந்தைகள் ஏன் கடத்தப்படுகிறார்கள்..?

''பிறந்த குழந்தை தொடங்கி 18 வயது வரை பல்வேறு விதமாக குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். குழந்தை காணாமல் போன 24 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், அதனை கடத்தப்பட்ட வழக்காக மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தது. குழந்தை கடத்தல் என்றாலே, அது பாலியல் தொழிலுக்காக என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறோம். இன்னும் எண்ணற்றக் காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு நரபலி கொடுப்பதற்காகக்கூட குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சட்ட விரோதமான தத்தெடுப்புக்காக கடத்தப்பட்டனர் என்கிற பதிவு உள்ளது. ராசிபுரம் பகுதியில் மலைவாழ் குழந்தைகளைக் கடத்தி தத்தெடுப்புக்காக விற்பனை செய்திருக்கிறார்கள்.

கண்களைக்கட்டி கடத்த மாட்டார்கள்!

குழந்தைகளைக் கடத்துவது என்பது படங்களில் காட்டப்படுவதுபோல கண்களைக்கட்டி, கைகளைக் கட்டியெல்லாம் கடத்த மாட்டார்கள். சிறிய குழந்தைகள் என்றால், பெற்றோர்களின் கண்காணிப்பு இல்லாத நேரத்தில் கடத்தி விடுவார்கள்.

வளரிளம் வயதில் இருக்கும் குழந்தைகள் என்றால், திருமணம் என்ற பெயரில் ஆசை வார்த்தைகள் கூறி, கடத்திச்சென்று வீட்டு வேலைகள் செய்வதற்காக விற்று விடுவார்கள். இதேபோல, 'வேலை' என்ற பெயரில் வளரிளம் பருவ குழந்தைகளை அழைத்துச்சென்று, கொத்தடிமை வேலை செய்ய விற்று விடுவார்கள். வறுமை காரணமாக பெரும்பாலும் பெற்றோரின் சம்மத்துடன் இது நடப்பதால், கடத்தல்போலவே தெரியாது.

அடுத்து பாலியல் தொழில். இதற்காக பெண் குழந்தைகளை மட்டுமல்ல, ஆண் குழந்தைகளையும் கடத்துகிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு சினிமா மோகத்தோடு வரும் குழந்தைகளை மும்பை போன்ற நகரங்களுக்கு பாலியல் தொழில் செய்ய கடத்தி சென்றுவிடுகிறார்கள். அல்லது கடத்தி விற்று விடுகிறார்கள்.

கடத்தி வரப்பட்ட குழந்தைகளை பிரபலமான கோயில்களில் யாசகம் எடுக்க வைப்பது, அங்கு சிறு சிறு பொருள்களை வியாபாரம் செய்ய வைப்பதுபோன்ற அவலங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், உண்மையான பெற்றோர்களாக இருக்க மாட்டார்கள்.

தேவநேயன்

ஒன்றிய அரசும் காரணம்!

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஐந்து நாள்களுக்கு மேல் ஒரு குழந்தை பள்ளிக்கு வரவில்லை என்றால், அதை தெரியப்படுத்த வேண்டும் என்ற ஒரு அறிவிப்பு உள்ளது. அதனை பள்ளி நிர்வாகங்களும் சரிவர கடைபிடிப்பதில்லை. 2000-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் 'பெண் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக அமைப்புகள் அமைக்க வேண்டும்' என்ற ஆணையைப் பிறப்பித்தது. அடுத்து 2001-ம் ஆண்டு தமிழகத்தில் வெளியான அறிவிப்பு, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துத் தலைவரும் இந்த முயற்சியை எடுக்க வேண்டும் என்று அறிவித்தது. ஆனால், அது நடைமுறையிலேயே இல்லை. பிறகு, 2012-ம் ஆண்டில் 'கிராம அளவில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான குழு' என்று அது பெயர் மாற்றப்பட்டது. கிராம அளவில் முன்னெடுப்பதே குழந்தைக்கடத்தலுக்கு சிறந்தத் தீர்வாக அமையும். ஆனால், நிதி ஒதுக்கீடு பற்றாக்குறை காரணமாக இந்தக் குழுவும் செயல்படவில்லை. கடந்த பத்து வருடங்களாக ஒன்றிய அரசு குழந்தைகள் பாதுகாப்புக்கான நிதியை குறைத்துக் கொண்டே வருகிறது. குழந்தைகளுக்கு எதிராக நடக்கின்ற வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன... என்ன செய்வது" என வேதனையுடன் கேள்வி எழுப்புகிறார் தேவநேயன்.

யாசகமும் பாலியல் அத்துமீறலும்...

மற்றொரு குழந்தைகள் நல ஆர்வலரான கன்யா பேசுகையில், ''தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022 ஆண்டறிக்கையின்படி, அந்த ஆண்டில் காணாமல்போன குழந்தைகளின் எண்ணிக்கை 83,350. அவர்களில் ஆண் குழந்தைகள் 20,380, பெண் குழந்தைகள் 62,946. குழந்தைகள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்புவது ஒருபுறம் இருக்க, உள்நாட்டுக்குள்ளேயே குழந்தைகளை கடத்தி பல்வேறு தொழில்கள் செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். குறிப்பாக, குழந்தைகளை வைத்து யாசகம் எடுக்கிற தொழில் இந்தியாவில் அதிகம் நடைபெற்று வருகிறது. தென் மாநிலங்களில் கடத்தப்படும் குழந்தைகள் வட மாநிலத்திற்கும், வடமாநிலத்தில் இருந்து கடத்தப்படும் குழந்தைகள் தென் மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அயல்நாட்டு சுற்றுலாப்பயணிகளில், 50 சதவிகிதம் பேர் ஆன்மிகக் காரணங்களுக்காக வந்தாலும், மீதமுள்ளோர் குழந்தைகள் மீது பாலியல் அத்துமீறல் செய்யும் நோக்கத்துடனும் வருகிறார்கள்.

கன்யா

போலியான பெற்றோர்கள்!

கடத்தப்படும் குழந்தைகளை போலியான பெற்றோர்களை வைத்து வளர்த்து, யாசகம் எடுக்கும், வேலைகள் செய்ய, கொத்தடிமைகளாக இருக்க என அனுப்பி வைக்கப்படுகின்றனர். குழந்தைக்கடத்தலில் ஒரு நபரின் கீழ், பல நூறு போலி பெற்றோர்களும் குழந்தைகளும் நகரங்களில் யாசகம் எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சிக்னல்களில் மயங்கிய நிலையில் உள்ள குழந்தைகளை, பெற்றோர் வைத்திருப்பது போன்ற காட்சிகளை நம்மால் இயல்பாக பார்க்க முடியும். கடத்தப்படும் குழந்தைகளை இப்படி மயக்க மருந்து கொடுத்துதான் யாசகம் எடுக்க பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகள் யாசகம் எடுத்தால் , அவர்களுக்கு காசு கொடுப்பதைத் தவிருங்கள். அப்போதுதான், அந்த ஒரு காரணத்திற்காக குழந்தைகள் கடத்தப்படுவது குறையும்.

கடத்தப்பட்ட குழந்தைகள் 100 சதவிகிதம் மீட்கப்படுவதை இலக்காக வைக்க வேண்டும். 'கோல்டன் ஹவர்' எனப்படும் ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளை, பிறகு கண்டுபிடிக்க முடியவில்லை. மிக மிக வேகமாக குழந்தைகள் கைமாற்றப்படுகின்றனர். கவனம்'' என்கிறார் கன்யா.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

UP: நடிகையின் மகன் மர்ம மரணம்; போராட்டம் செய்த கிராம மக்கள்... நடந்தது என்ன?

இந்தி டிவி தொடர்களில் நடித்து வருபவர் சப்னா சிங். இவரது 14 வயது மகன் உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில், மாமா வீட்டில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வந்தான். அம்மாணவனின் மாமா ஓம் பிரகாஷ் கடந்த 7-ம் தேதி அவன... மேலும் பார்க்க

`1 லி கெமிக்கலிலிருந்து 500 லி பால்' - 20 ஆண்டுகளாக ஏமாற்றிய தொழிலதிபர் கைது

பாலில் தண்ணீரைக் கலந்து விற்பது, பால் பவுடர் கலந்த நீரை சுத்தமான பால் என்று விற்பது போன்ற மோசடிகளுக்கு மத்தியில், உத்தரப்பிரதேசத்தில் ஒரு தொழிலதிபர் வெறும் கெமிக்கல் மூலம் செயற்கையாகப் பால் மற்றும் பா... மேலும் பார்க்க

கோவை: உக்கடம் மேம்பாலத்தில் பட்டம் விட்டு இளைஞருக்கு காயம் ஏற்படுத்திய விவகாரம்; 3 பேர் மீது வழக்கு!

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 7-ம் தேதி உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.கோவை ஆத்துப்பாலம் - உக்கடம் மேம்பாலம் அப்போது த... மேலும் பார்க்க

மீரட் கும்பல் கைவரிசை: நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்து, பாலிவுட் நடிகரை கடத்தி பணம் பறிப்பு!

மும்பையைச் சேர்ந்த காமெடி நடிகர் சுனில் பால் என்பவரை மீரட்டிற்கு காமெடி ஷோ நடத்த வருமாறு அழைத்து, அவரை அடைத்து வைத்து ரூ.7 லட்சத்தை மர்ம கும்பல் பறித்தது. அச்சம்பவம் நடந்து சில நாட்களே ஆகியிருக்கும் ந... மேலும் பார்க்க

ஆன்லைன் செயலியில் ரூ.2,000 கடன்; மிரட்டி துன்புறுத்திய கும்பல்; திருமணமான 47 நாளில் இளைஞர் தற்கொலை!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ஆன்லைன் கடன் செயலியில் ரூ.2,000 கடன் வாங்கிய 27 வயது இளைஞர், அந்தச் செயலியிலிருந்து வந்த துன்புறுத்தலால் திருமணமான 47 நாளில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சிய... மேலும் பார்க்க

Digital Arrest: 8 நாள் உணவு, தூக்கமின்றி தவித்த உதகை பெண்; ரூ.16 லட்சத்தைப் பறிகொடுத்தது எப்படி?‌

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த 26 வயதான பெண் ஒருவர், கோவை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் ஐ.டி‌ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக வீட்டிலிருந்த படியே பணியில் ஈடுபட்டு வந்... மேலும் பார்க்க