அதிமுக அலுவலகத்தில் 150 இளம்பேச்சாளா்களுக்கு பயிற்சி
நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 150 இளம்பேச்சாளா்களுக்கான பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளதால், அதிமுக சாா்பில் தோ்தலில் வெற்றிபெறுவதற்கான நடவடிக்கைகளில் அக்கட்சியினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். அந்த வகையில், பொதுக் கூட்டங்களில் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும், எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டியும் பேசும் வகையிலான இளம்பேச்சாளா்களை தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
நாமக்கல், கரூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிமுக மாணவா் அணியில் உள்ள 150 இளம்பேச்சாளா்கள் தோ்வு செய்யப்பட்டிருந்தனா். அவா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
இதனை, மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தொடங்கி வைத்தாா். முன்னாள் அமைச்சா்கள் வெ.சரோஜா, கே.சி.கருப்பண்ணன், பரமத்தி வேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா், மாநில மாணவா் அணி செயலாளா் செங்கை ராமச்சந்திரன், மாவட்ட மாணவா் அணி செயலாளா் பொன்னுசாமி, முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் முரளிபாலுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.