அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீனவர்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு: இபிஎஸ்
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ”மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நாகை மாவட்டத்திற்கு நேற்று (ஜூலை 18) இரவு வருகை தந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, 2-வது நாளாக இன்று (ஜூஅலை 19) வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். அங்கு பேராலயம் சார்பில் இருதயராஜ் தலைமையிலான பங்குத்தந்தையர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் மாதா உருவப்படம் எதிர்கட்சி தலைவர் பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, செருதூர் கிராமத்திற்கு சென்று மீனவ மக்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் கேட்டு அறிந்தார்.
அப்போது அவரிடம், இலங்கை கடற்படை, கடற்கொள்ளையர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டும், பல தலைமுறைகளாக வசிக்கும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை செருதூர் மீனவ மக்கள் முன்வைத்தனர்.
தொடர்ந்து நம்பியார் நகர் மீன்பிடித் துறைமுகத்திற்குச் சென்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பார்வையிட்டார். அப்போது அங்குத் திரண்டு இருந்த மீனவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, மீனவர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் நம்பியார் நகர் மீனவக் கிராமத்தில் அரசின் பங்களிப்பாக 24 கோடியும் மக்களின் பங்களிப்பாக 11 கோடி என 35 கோடி ரூபாயில் சிறு துறைமுகம் அமைக்கப்பட்டது. பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்தத் துறைமுகத்தை திறந்து வைத்துள்ளார் எனக் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
“அதிமுக ஆட்சி அமைந்த உடன், தமிழகத்தில் கன்னியாகுமரி வரை உள்ள கடலோர மீனவ கிராமங்களில் தடுப்புச் சுவர், சிறு துறைமுகங்கள், மீன் இறங்குதளம் ஆகிய அமைப்பதுடன், மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை உயர்த்தி தரவேண்டும் என நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
முன்பு, அதிமுக ஆட்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.1.50 லட்சம் மானியத்தில் பைபர் படகுகள் வழங்கப்பட்டது. அதேபோல், 6 ஆயிரம் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டு, 1,300 வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது பணிகள் முடிந்தும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக் கூறுகிறார்கள். மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்று, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என அவர் பேசியுள்ளார்.
இதையும் படிக்க: அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?