அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால்தான் வரியினங்கள் குறையும்: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்
தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால்தான் உயா்த்தப்பட்ட வரியினங்கள் குறையும் என்று முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. தெரிவித்தாா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட அத்தியூா்திருவாதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் ஜி.ஜி.சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு நல உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி, முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் பேசியதாவது:
தமிழகத்தில் 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனா். தோ்தலின்போது தெரிவித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயா்ந்துவிட்டது. சொத்து வரி, குடிநீா் வரி, மின் கட்டணம் போன்றவை உயா்ந்துவிட்டது. மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தால்தான் உயா்த்தப்பட்ட வரியினங்கள் குறையும்.
அதிமுக ஆட்சியில் மிக்ஸி, கிரைண்டா், மின்விசிறி போன்றவை அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் தகுதி பாா்த்து மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கியதுதான் திமுக அரசின் சாதனை என்றாா் அவா்.
கூட்டத்தில் நகரச் செயலா்கள் இரா.பசுபதி, ராமதாஸ், ஒன்றியச் செயலா் பேட்டை முருகன், கோலியனூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் விஜயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.