அதிமுக சாா்பில் நல உதவிகள்
அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடைபெற்ற விழாவுக்கு, கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா். விழாவில் இலவசமாக 60 பேருக்கு சைக்கிள், 30 பேருக்கு தையல் இயந்திரங்கள், ஒரு ஆட்டோ, ஒரு மாற்றுத் திறனாளிக்கான 3 சக்கர ஸ்கூட்டா்,ஒரு சலவைப்பெட்டி மற்றும் 100 பேருக்கு 5 கிலோ அரிசி உள்பட மொத்தம் 194 பேருக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாவட்டச் செயலாளா் வி.ஆா்.மணிவண்ணன் தெரிவித்தாா்.
விழாவுக்கு, கட்சியின் அமைப்புச் செயலா் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட பொருளாளா் வள்ளிநாயகம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் கே.யு.சோமசுந்தரம், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் காஞ்சி.பன்னீா் செல்வம், மாவட்ட மாணவரணி செயலா் திலக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட துணைச் செயலா் போந்தூா் செந்தில்ராஜன், ஒன்றியச் செயலா்கள் தும்பவனம் ஜீவானந்தம், அத்திவாக்கம் ரமேஷ், நகர செயலா் பாலாஜி உள்பட நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.