புதுச்சேரியில் தொடா் மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.2) விடுமுறை!
"அந்த ஒரு விஷயம் சின்ன வருத்தத்தை உண்டாக்கிடுச்சு..." - வைரலான வேல ராமமூர்த்தி பேத்தி திருமணம்
தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே பேசு பொருளாக இருக்கும் ஒரு சம்பவம், நெல்லையை மிரட்டிய ஒரு கல்யாணம்தான். சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமிக்கத் தவறவில்லை இந்தத் திருமண செய்தி.
நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தியின் மகள் வழிப் பேத்தி வைஷ்ணவிக்கும் தென் மாவட்டங்களில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராக இருக்கும் ஆர்.எஸ். முருகனின் மகன் விஜய ராகுலுக்கும் நவம்பர் 17ஆம் தேதி நடந்த திருமணம்தான் அது.
தங்கத்தில் மாலை, ஆபரணங்கள் பதிக்கப்பட்ட புடவை ஜாக்கெட், வரதட்சணையாக ஐநூறு சவரன் நகை என யூடியூப் சேனல்கள் பரபரக்க, நாம் மாப்பிள்ளையின் அப்பா முருகனையே தொடர்பு கொண்டு பேசினோம்.
‘’எனக்கு ரெண்டு பையனுங்க, முதல் பையன் கல்யாணம் இது. எங்க குடும்பத்துல நடக்கிற முதல் விசேஷம். திருநெல்வேலி சுத்து வட்டாரத்துல ஜாதி, மதம் இருக்கிறவங்க இல்லாதவங்கனு எந்தவொரு வித்தியாசமும் பார்க்காம எல்லார் வீட்டு விசேஷத்துக்கும் எங்க வீட்டுல இருந்து ஆள் போயிடும்.
அதனால நம்ம வீட்டு விசேஷத்தையும் எல்லாரையும் கூட்டிச் செய்யணும்னு ஆசைப்பட்டோம். மரியாதை, கௌரவத்துல பொண்ணு வீட்டுக்காரங்களும் பெரிய ஆளுங்கதான். ராமநாதபுரம் மாவட்டத்தைப் பூர்வீகமாக் கொண்ட அவங்க இப்ப மதுரையில இருக்காங்க. அவங்களுக்கும் இதுல சம்மதம்கிறதால நினைச்ச மாதிரி செய்தோம். அதனால கொஞ்சம் பிரமாண்டமாகிடுச்சு.
கல்யாணத்துக்குப் பதினையாயிரம் பேர் வரை வரலாம்னு எதிர்பார்த்தோம். அதனால கச்சேரி, அது இதுனு கொஞ்சம் ஏற்பாடு செஞ்சோம். சாப்பாட்டுக்கு மாதம்பட்டி ரங்கராஜ்கிட்ட சொன்னோம். நாங்க எதிர்பார்த்ததுக்கு மேலாகவே அதாவது 25,000 பேர் வரை வந்திருப்பாங்க. ஆனாலும் சமாளிச்சிட்டோம்.
ஆனா கல்யாணத்துக்குப் பிறகு சமூக ஊடகங்கள்ல வந்த சில தகவல்கள்தான் மனசுக்கு சின்ன வருத்தத்தை உண்டாக்கிடுச்சு.
அறுநூறு பவுன் வரதட்சணை அது இதுனு இஷ்டத்துக்குப் பேசறாங்க. கல்யாணம்னா பொண்ணுக்கு அவங்க வீட்டுல விருப்பப்பட்டு நகை ஏதாவது போட்டா அதையெல்லாம் கணக்கெடுத்துச் சொல்ற மாதிரியா விவாதிப்பாங்க.
கல்யாணத்துக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.கள், எம்.பிக்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஏன் எல்லா கட்சிகள்ல இருந்தும் என்னுடைய நண்பர்கள், தொழிலதிபர்கள், அரசு உயரதிகாரிகள்னு எல்லாரும் வந்திருந்தாங்க. என்னைப் பொறுத்தவரை வந்தவங்க சந்தோஷமா கல்யாணத்தை அட்டென்ட் செய்துட்டு வயித்துக்குத் திருப்தியா சாப்பிட்டுப் போனாங்களானுதான் பார்த்தேன்’’ என்கிறார் இவர்.
திருமணத்தில் எஸ்.பி.பி சரண் கச்சேரியுடன் மதுரை முத்து, பிக்பாஸ் பிரபலம் அன்ன பாரதி உள்ளிட்ட சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
சைவம், அசைவம் எனத் தனித்தனி மெனு. தூள் பறந்த சாப்பாட்டில் ஏகப்பட்ட அயிட்டங்களாம். வந்திருந்தவர்களுக்குத் விலை உயர்ந்த வெட்டிங் ரிட்டர்ன் பரிசுப் பொருட்களும் தரப்பட்டனவாம்.
மொத்தத்தில் திருநெல்வேலியே திரும்பிப் பார்த்த திருமணம் இது என்றால் மிகையில்லை.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...