அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்: "ரத்து செய்க; மாநிலத்தின் அனுமதியின்றி..!"- மோடி...
அப்பார்ட்மென்ட்டில் உயிரை மாய்த்துக்கொண்ட பெண் பைலட்; காதலன் கைது - குடும்பத்தினர் எழுப்பும் கேள்வி!
மும்பையைச் சேர்ந்த 25 வயது பைலட் ஸ்ரிஷ்டி டுலி, அவரது அப்பார்ட்மெண்டில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டுலியின் குடும்பத்தினர் வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது காதலர் ஆதித்யா பண்டிட் தற்கொலைக்கு தூண்டியதாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆதித்யா பண்டிட் பொது இடத்தில் ஸ்ரிஷ்டியை அவமானப்படுத்தியதாகவும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும் அவரிடம் இருந்து பணம் பறித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மும்பையில் முக்கிய குடியிருப்பு பகுதியில் வசித்துவந்துள்ளார் ஸ்ரிஷ்டி டுலி. 27 வயதான ஆதித்யா பண்டிட் உடன் மொபைலில் ஏற்பட்ட விவாதத்துக்குப் பிறகு, டேட்டா கேபிள் பயன்படுத்தி தூக்கு போட்டுக்கொண்டுள்ளார். காவல்துறையில் ஆதித்யா தான் உடனடியாக அவரது வீட்டுக்கு விரைந்ததாகவும், கதவு பூட்டப்பட்டிருந்ததால் சாவி செய்பவரை அழைத்து திறந்து அவரை காப்பாற்ற முயன்றதாகவும் கூறியுள்ளார். ஆதித்யா ஸ்ரிஷ்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரிஷ்டி தங்கியிருந்த அப்பார்ட்மெண்டில் சோதனை செய்த காவல்துறையினருக்கு தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை.
ஸ்ரிஷ்டியின் குடும்பத்தினர் உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் வசிக்கின்றனர். அவரது உறவினர் செய்தியாளர்களிடம், "ஸ்ரிஷ்டி தற்கொலை செய்துகொண்டார் என்கின்றனர். ஆனால் எங்களால் அதை நம்பமுடியவில்லை. அவள் மிகவும் வலிமையான பெண், இல்லை என்றாள் அவளால் பைலட்டாக உருவாகியிருக்க முடியாது. இது ஒரு திட்டமிட்ட கொலை. நாங்கள் அவரது நண்பர் ஆதித்யா குறித்து கேள்விப்பட்டோம். அவர் பைலட் ஆவதற்கான பயிற்சி வகுப்பில் ஸ்ரிஷ்டி உடன் படித்தவர். ஆனால் அவரால் படிப்பை முடிவு செய்ய முடியவில்லை, அதனால் பொறாமை ஏற்பட்டு ஸ்ரிஷ்டியை மனதளவில் துன்புறுத்தியிருக்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஸ்ரிஷ்டியும் ஆதித்யாவும் ஒன்றாக விமானியாவதற்கான படிப்பில் இணைந்திருக்கின்றனர். ஆனால் ஆதித்யா பாதியிலேயே இடைநிறுத்தம் செய்துவிட்டார். ஸ்ரிஷ்டி படிப்பை முடித்து பறப்பதற்கான லைசன்ஸைப் பெற்றவுடன் மும்பையில் குடியேறிவிட்டார். கோரக்பூர் மாவட்டத்தின் முதல் பெண் விமானி ஸ்ரிஷ்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரிஷ்டி டுலி கடந்த திபாவளியை ஒட்டி ஆதித்யாவின் குடும்பத்தினருக்கு 65,000 ரூபாய் வழங்கியுள்ளார். இதனை அவரது ஒருமாத வங்கி அறிக்கை மூலம் குடும்பத்தினர் அறிந்துகொண்டுள்ளனர். இதனால் ஸ்ரிஷ்டி ஆதித்யாவுக்கு பணம் கொடுக்க மறுத்ததுகூட பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகக் கூறியுள்ளனர்.
மேலும், ஸ்ரிஷ்டி தற்கொலை செய்ததாக கூறப்படும் நேரத்துக்கு 15 நிமிடங்கள் முன்புதான் அவரது அம்மா மற்றும் அத்தையிடம் பேசியதாகவும் தெரிவிக்கின்றனர்.
டெல்லி, ஃபரிதாபாத்தைச் சேர்ந்த ஆதித்யா ஸ்ரிஷ்டியைச் சந்திக்க அடிக்கடி மும்பை சென்று வந்துள்ளார். ஸ்ரிஷ்டி மற்றும் ஆதித்யாவின் உறவு குறித்து ஸ்ரிஷ்டியின் குடும்பத்தினர் அறிந்திருக்கவில்லை. ஆனால் ஸ்ரிஷ்டி சகோதரிக்கு தெரிந்திருக்கிறது. ஸ்ரிஷ்டியின் நண்பர்களிடம் விசாரித்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
ஆதித்யா ஸ்ரிஷ்டியை பொது இடங்களில் கத்தித்திட்டுவது போன்ற துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஒருநாள் அவரை நடுரோட்டில் காரில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.
ஸ்ரிஷ்டி அசைவம் சாப்பிடுவதை ஆதித்யா பண்டிட் வெறுத்துள்ளார். இதுகுறித்து இருவருக்கும் அடிக்கடி சண்டை எழுந்துள்ளது. சமீபத்தில் ஆதித்யா பண்டிட்டின் சகோதரி திருமணத்துக்கு அவர்கள் செல்லமுடியாமல் போயிருக்கிறது. இதுவும் அவர்களுக்குள் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த மரணத்தில் மற்றொரு பெண் விமானி மீது சந்தேகம் இருப்பதாக ஸ்ரிஷ்டியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த பெண்தான் சாவி தயாரிப்பாளரை அணுகியுள்ளார் என்கின்றனர். ஸ்ரிஷ்டியின் மரணத்துக்கு நீதி வேண்டி உத்தரப்பிரதேச முதல்வரிடம் முறையிடப் போவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.