ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதாக்கள்: மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல்
அமித் ஷாவுக்கு கேஜரிவால் கடிதம்..! எதைப் பற்றி?
தில்லியில் மோசமடைந்துவரும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பாஜக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து விவாதிக்க கோரி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், சமீப காலமாக தில்லியில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. கடந்த சில மாதங்களாக தில்லியில் உள்ள பள்ளிகளுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும் இந்திரா காந்தி விமான நிலையத்திற்கும் சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நாட்டின் "குற்றத் தலைநகரம்" என்று தில்லியை அழைக்கின்றனர்.
2025 பிப்ரவரியில் நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கேஜரிவால் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
உங்கள் கண்காணிப்பின் கீழ் சட்டம்-ஒழுக்கு சீர்குலைந்துள்ள எங்கள் தலைநகரம் கற்பழிப்பு தலைநகர், ரௌடிகளின் தலைநகர், போதைப்பொருள் தலைநகர் என்றெல்லாம் அழைக்கப்படுவது வெட்கக்கேடானது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் அனைத்து இடங்களிலும் செயல்படுகின்றன. போதைப்பொருள் மாஃபியா நகரம் முழுவதும் பரவி வருகிறது. மொபைல் மற்றும் செயின்பறிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால் மக்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களில் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகள், 100-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், வணிக வாளகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்து வந்துள்ளது. குற்றவாளிகளை ஏன் கைதுசெய்யவில்லை? என்ற கேள்வி எழுப்பினார்.
வெடிகுண்டு மிரட்டல்களால் தில்லியில் பள்ளி குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
தில்லியின் சட்டம் ஒழுங்கு மத்திய அரசின் கீழ் இருப்பதாகவும், நிலைமையை உடனடியாக சரிசெய்ய அமித் ஷா செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
19 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கொலைகளில் தில்லி முதலிடத்தில் உள்ளது. 2019-ஆம் ஆண்டிலிருந்து போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் 350 சதவிகிதம் அதிகரித்துள்ளன, ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள் மற்றும் வணிகர்கள் தொடர்ந்து மிரட்டி பணம் பறிக்கும் அழைப்புகளைப் பெறுகிறார்கள்.
இந்தப் புள்ளி விவரங்கள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்குச் சான்றாகும் என்றார்.
மக்களின் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், தேசிய தலைநகரில் சிறந்த சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைக்குத் தகுதி பெறவில்லையா?" என்பது தான். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும் என்று கேஜரிவால் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினார்.