அரக்கோணம்: இரு தரப்பினர் மோதலில் ஒருவர் மரணம்... 2-வது நாள் சாலை மறியலால் பதற்றம்!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள பாராஞ்சி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராபர்ட் என்கிற ராஜ்குமார் (47).
இவரின் மனைவி பூங்கொடி, மகன்கள் கார்த்திக், ஆகாஷ். இந்த நிலையில், பூங்கொடிக்கு நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பூங்கொடியை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு ராபர்ட்டும், அவரின் 2 மகன்களும் காரில் அழைத்துசென்றுக் கொண்டிருந்தனர். காரை ராபர்ட்டின் இளைய மகன் ஆகாஷ் ஓட்டியுள்ளார். அரக்கோணம் - சோளிங்கர் சாலையிலுள்ள வேடல் பெரியார் நகர் பகுதியில் சென்றபோது, ராபர்ட்டின் கார் மீது எதிரே வந்த கார் மோதியுள்ளது. இதனால், இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் ஈடுபட்டுள்ளனர். எதிர்தரப்பினர் தாக்கியதில் ராபர்ட் மயங்கி விழுந்துள்ளார். சுயநினைவின்றிக் கிடந்த ராபர்ட்டை மீட்ட அவரின் மகன்கள், உடனடியாக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்தபோது, ராபர்ட் உயிரோடு இல்லை எனத் தெரியவந்தது. பணியில் இருந்த அரசு மருத்துவரும் அவரின் இறப்பை உறுதி செய்தார். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக ராபர்ட்டின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யக்கோரி ராபர்ட்டின் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், 4 மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. தொடர்ந்து, கொலை வழக்கு பதிவு செய்யக்கோரியும், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யக்கோரியும் 2-வது நாளாக இன்றைய தினமும் ராபர்ட்டின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பாராஞ்சி கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது.