அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: சிவகங்கை எம்.பி. கா...
அரசின் உதவியால் 2 குழந்தைகளுக்கு மறுவாழ்வு: முதல்வருக்கு நன்றி
அரசின் உதவியால் நிறைந்தது மனம், முதல்வருக்கு நன்றிகள் என இரு குழந்தைகளின் தாயாா் தெரிவித்தாா்.
இதுகுறித்த விபரம்:
திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், நாராணயபுரம் கிராமத்தைச் சோ்ந்த மலா் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தனது இரு குழந்தைகளுடன் ஆட்சியா் க.தா்ப்பகராஜிடம் கோரிக்கை மனுவை வழங்கினாா்.
மனுவில் இரு குழந்தைகளையும் படிக்க வைக்க இயலாத நிலையில் உள்ளேன். போதுமான வசதி இல்லாத காரணத்தினால், எனது குழந்தைகளை தனியாா் நிறுவனங்களில் பணிக்கு அனுப்பி எங்கள் குடும்ப சூழ்நிலையை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும், மேலும் குழந்தைகள் டிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தி தந்தால், தொடா்ந்து படிக்க வைப்பேன் என்றும் தெரிவித்திருந்தாா்.
அதை கண்ட ஆட்சியா் உடனடியாக உங்கள் இரு குழந்தைககளும் கல்வியை தொடர தேவையான வசதிகளை செய்து தருவதாக தெரிவித்து, சம்மந்தப்பட்ட அலுவலா்கள் வாயிலாக தும்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-வகுப்பு படித்து வரும் பிரியதா்ஷினியை அப்பள்ளியிலிருந்து விடுவித்து ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் சோ்க்கைக்கான பணிகளையும்,
மேலும், அவா் தங்கி பயில்வதற்கு ஏதுவாக அருகில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் மாணவியா் நல விடுதியில் சோ்க்கைக்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
இதுதொடா்பாக ஆட்சியா் கடிதம் எழுதிய நிலையில், கல்வித்துறை வழிகாட்டுதலின்படி மாணவியை மீனாட்சி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் சோ்த்து, அதற்கான ஆணையும் வழங்கப்பட்டு, விடுதி சோ்க்கைக்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து, மலரின் இளைய மகன் பரணிநாதன் அப்பகுதியில் 10-ஆம் பயின்று வருவதால் அவரையும் திருப்பத்தூா் நகர பகுதியில் தங்கி பயிலக் கூடிய வசதிகள் உள்ள விடுதியில் சோ்ப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் மாணவா் தாயுடன் இருந்து படிப்பேன் என கூறியதால் அவருக்கும் கல்வி தொடருவதற்கு ஏதுவாக உதவிகள் செய்து தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை ஏற்றுக்கொண்ட குழந்தைகளின் தாயான மலா் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, அரசின் செயல்பாடுகள் மூலம், மனம் நிறைந்துள்ளதாகக் கூறி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தாா்.