`அரசியலமைப்பு, இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, அதானி' - பிரியங்காவின் நாடாளுமன்ற கன்னிப் பேச்சு
இந்தாண்டு மத்தியில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய மக்களைவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மற்றும் காங்கிரஸின் பாரம்பர்ய தொகுதி ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றார்.
பின்னர், ஏதாவது ஒரு தொகுதியின் எம்.பி பதவியை ராஜினாமா செய்யவேண்டிய சூழலில், வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.
அதையடுத்து, வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது காங்கிரஸிலிருந்து பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டார். கடந்த மாதம் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி முதல் தேர்தலிலேயே எம்.பி ஆனார். அதனையடுத்து, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அரசியலமைப்பு புத்தகத்தைக் கையிலேந்தியப்படி பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், இன்றைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மக்களவையில் பிரியங்கா காந்தி தனது முதல் நாடாளுமன்ற உரையை நிகழ்த்தியிருக்கிறார். பிரியங்கா காந்தி தனது கன்னிப் பேச்சில், ``கோடிக்கணக்கான இந்தியர்களின் போராட்டம், கடினமான சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடும் அவர்களின் வலிமை, நீதி கிடைக்கும் என்ற அவர்களின் நம்பிக்கை ஆகிட்டவற்றில் நமது அரசியலமைப்பின் சுடர் எரிகிறது. நமது மக்களைக் காக்கும் `பாதுகாப்பு கவசம்' அரசியலமைப்புச் சட்டம். நீதி, ஒற்றுமை, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றின் கவசம் இது.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஆளும் தரப்பு இந்த கவசத்தை உடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. லோக் சபா தேர்தல் முடிவுகள் அவர்கள் நினைத்தபடி வந்திருந்தால், இந்நேரம் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றும் பணியையும் இவர்கள் தொடங்கியிருப்பார்கள். அரசியலமைப்பை இந்த நாட்டு மக்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் மூலம் இவர்கள் தெரிந்துகொண்டதால்தான் அரசியலமைப்பைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள். தேர்தலில் கிட்டத்தட்ட தோல்வியடைந்ததால், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவது பற்றிய விவாதங்கள் இனி நாட்டில் வேலை செய்யாது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
இந்த அரசு, லேட்டரல் என்ட்ரி (நேரடி நியமன முறை), தனியார்மயமாக்கல் ஆகியவற்றின் மூலம், இட ஒதுக்கீட்டைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் தேவை. ஆனால், தாய்மார்களின் மாங்கல்யத்தை அது பறித்துவிடும் என்று பேசி அதைச் சிறுமைப்படுத்துகிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது. சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம், அனைவரின் நிலையை அறிந்து அதற்கேற்ப கொள்கைகளை உருவாக்க முடியும். அதேபோல், ஆளுங்கட்சியினர் கடந்த காலத்தைப் பற்றியே பேசுகிறார்கள். ஏன் நிகழ்காலத்தைப் பற்றிப் பேசுவதில்லை.
நாட்டின் மீதான எல்லாவற்றுக்கும் நேரு தான் பொறுப்பா? நேருவைப் பற்றிப் பேசுகிறவர்கள் என்ன செய்கிறார்கள்... யாருடைய பெயரை நீங்கள் பேசத் தயங்குகிறீர்களோ, அவர்தான் ஹெச்.ஏ.எல் (HAL), பெல் (BHEL), செயில் (SAIL), கெயில் (GAIL), ஓ.என்.ஜி.சி (ONGC), என்.டி.பி.சி (NTPC), ரயில்வே, ஐ.ஐ.டி (IIT), ஐ.ஐ.எம் (IIM), எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பல பொதுத்துறை நிறுவனங்களை நிறுவினார். புத்தகங்களிலிருந்தோ, உங்களின் பேச்சுகளிருந்தோ இவரின் பெயரை நீங்கள் அழிக்கலாம். ஆனால், நாட்டின் சுதந்திரம் மற்றும் தேசத்தைக் கட்டமைத்ததில் அவரது பங்கை ஒருபோதும் அழிக்க முடியாது.
இன்று எல்லாமே ஒருவருக்காக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த அரசு, அனைத்து குளிர்பதன கிடங்குகளையும் அதானிக்குக் கொடுத்துவிட்டது. ஹிமாச்சல் ஆப்பிள் விவசாயிகள் கண்ணீர் விடுகிறார்கள். ரயில்வே, விமான நிலையங்கள் உட்பட அனைத்துத் தொழில்களும் ஒரு நபருக்கு வழங்கப்படுகிறது. அந்த ஒரு நபருக்காக 142 கோடி மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்." என்று கூறினார்.
மேலும், தனது உரையில் உத்தரப்பிரதேசத்தின் சம்பல் வன்முறைச் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பிரியங்கா காந்தி, ``சம்பலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிலர் எங்களைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்களில் அட்னான், உசைர் என்ற இரண்டு சிறுவர்கள் இருந்தனர். அந்த இருவரில் ஒருவருக்கு என்னுடைய மகன் வயது (17), மற்றொருவர் சிறியவர். அவர்களின் தந்தை ஒரு தையல்காரர். அவருக்கு, தன் மகன்களைப் படிக்க வைத்து ஒருவரை டாக்டராக்க வேண்டும், மற்றொருவரை வாழ்வில் வெற்றிபெற வைக்கவேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால், தையல்கார தந்தையை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
இருந்தாலும், அந்த 17 வயது அட்னான் என்னிடம் வந்து, `நான் வளர்ந்து டாக்டராவேன். தந்தையின் கனவை நனவாக்குவேன்.' என்றார். இந்தக் கனவும், நம்பிக்கையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அவரது இதயத்தில் விதைக்கப்பட்டது." என்று கூறினார்.
பிரியங்கா காந்தியின் இந்த உரைக்குப் பின்னர், நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசிய அவரின் சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தன்னுடைய தங்கை தனக்கு நாடாளுமன்ற கன்னிப் பேச்சை விடவும் சிறப்பாக உரையாற்றியதாகச் செய்தியாளர்களிடம் கூறினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...