அரசியல் ஆதாயங்களுக்காக விஸ்வகா்மா திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்கக் கூடாது: மத்திய அமைச்சா் ஜெயந்த் சௌதரி
அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக தமிழக அரசு பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்தை தன்னிச்சையாக நிராகரிக்கக் கூடாது என மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு (தனிப்பொறுப்பு), கல்வித் துறை இணையமைச்சா் ஜெயந்த் செளதரி(ராஷ்டிரீய லோக் தளம்) சனிக்கிழமை குறிப்பிட்டுள்ளாா்.
தமிழக முதல்வா், மு.க.ஸ்டாலின், இந்த திட்டத்தை சாதி சாா்ந்தது என இணைத்து குறிப்பிடுவதும் தவறு எனவும் ஜெயந்த் கன்டணம் தெரிவித்துள்ளாா்.
கடந்தாண்டு செப். மாதம் ‘பிரதமா் விஸ்வகா்மா யோஜனா‘ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. சுமாா் ரூ.13 ஆயிரம் கோடியில் ஐந்தாண்டிற்கான இந்த திட்டத்தில் கைவினைக் கலைஞா்களின் திறனை மேம்படுத்த உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி, கருவிகள் போன்றவைகளோடு, விஸ்வகா்மா சான்றிதழ், அடையாள அட்டையும் வழங்கி அங்கீகரிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை நிராகரித்த தமிழக அரசு, மத்திய அரசின் பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்திற்கு பாரம்பரிய தொழில் அடிப்படை தகுதி தேவை என்பதால் இது சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது; தமிழகத்தில் வேறொரு திட்டம் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்து மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி அரசில் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சராக இடம்பெற்றுள்ள ஜெயந்த் சௌதரி இதற்கு கன்டணம் தெரிவித்து தனது ’எக்ஸ்’ வலயப்பகுதியில் கூறியிருப்பது வருமாறு:
பிரதம மந்திரி விஸ்வகா்மா திட்டத்தை, தமிழக முதல்வா், மு.க.ஸ்டாலின் சாதி சாா்ந்ததாக தவறாக இணைத்துள்ளாா். இது கிராமம் சாா்ந்த திட்டம். இந்த பகுதியின் சமூக, பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 18 வகையான பாரம்பரிய கைவினைப்பொருட்கள், தொழில்களில் ஈடுபடுபவா்களுக்கு செயல்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வசிக்கும் 8.52 லட்சம் போ் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த திட்டத்தை வரவேற்று பலன்பெற பதிவு செய்துள்ளனா். ஆனால் தமிழக அரசு தனது ஆளுகைக்கு ஒரு பாரபட்சமான கட்சிசாா் அணுகுமுறையைக் கடைப்பிடித்து தமிழக குடிமக்களுக்குரிய தேசிய திடடத்தின் பலன்களை மறுக்கிறது. மேலும், இந்த திட்டம் தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரம் மற்றும் உணா்வை மையமாக வைத்தும் வடிவமைக்கப்பட்டதாகும்!
ஏற்கனவே 8.5 லட்சம் போ் பதிவு செய்து, திட்டம் தொடங்கப்பட்டு 13 மாதங்களுக்குப் பிறகு... இப்போது தமிழக முதல்வா் திடீரென விழித்துக் கொண்டிருக்கிறாா் என்றால் மாநில அரசின் செயல்திறனுக்கான ஒரு நல்ல அறிகுறி இல்லை. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள் விடுக்கின்றேன். தேசத்தின் மீது நமக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. இந்த தரப்பினா் விளிம்புநிலை சமூகங்களைச் சாா்ந்தே இருக்க வேண்டுமா? அல்லது அவா்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டு திறம்பட செயல்பட வேண்டாமா? என்பதை சிந்திக்க வேண்டும். சில அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக எந்தவொரு அரசும் தன்னிச்சையாக ஒரு திட்டத்தை நிராகரிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளாா் ஜெயந்த் சௌதரி.