`அரசியல் முடிவு அவரது தனிப்பட்ட விருப்பம்; அதில் குடும்பத்துக்கு தொடர்பு இல்லை' -ஆதவ் அர்ஜூனா மனைவி
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா சில நாள்களுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தார்.
நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் ஆதவ் அர்ஜூனா பேசிய விஷயம் இணையத்தில் தீயாய் பேசப்பட்டது. தற்போது ஆதவ் அர்ஜூனாவின் மனைவியான டெய்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பரஸ்பரம் அவர்கள் எடுக்கும் சுயாதீனமான முடிவு குறித்தும், பர்சனல் மற்றும் வேலை சார்ந்த விஷயங்களை தனித்தனியாக வைத்திருப்பது குறித்தும் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் அவர், ``நான் டெய்சி. நானும் ஆதவ் அர்ஜுனாவும் பர்சனல் மற்றும் வேலைகள் சார்ந்த விஷயங்களை தனித்தனியாக வைத்திருப்பதுதான் எங்களுடைய முடிவு. அனைத்து வேலை சார்ந்த விஷயங்கள், அரசியல் சார்ந்த முடிவுகள் சுயாதீனமாக எடுக்கப்படுவதுதான். அதற்கு எங்கள் குடும்பத்துடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. தவறாக பகிரப்பட்டு வரும் தகவல்களையும் வதந்திகளையும் அகற்றுவதுதான் இந்த அறிவிப்பு கடிதத்தின் நோக்கம்.
எங்கள் இருவருக்கும் தனித்தனியான பார்வை இருக்கிறது. இருவரின் முடிவுகளுக்கும், தனியுரிமைக்கும் பரஸ்பரம் மதிப்புக் கொடுப்பவர்கள் நாங்கள். பொய்யான கருத்துகள் பகிரப்படுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். எங்களை ஒருவருக்கொருவர் வேலை சார்ந்த விஷயம் மற்றும் பொதுவாழ்க்கையில் சிக்க வைக்காமல் இருப்பதற்கு எங்களின் நண்பர்கள், உறவினர்களிடம் மரியாதையாக கோரிக்கை வைக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
