மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அசுர வெற்றி! ஜார்க்கண்ட்டை தக்கவைத்தது இந்தியா கூட...
அரசு அதிகாரிகளுடன் கோயிலுக்குள் நுழைந்த தலித் மக்கள்; உற்சவ மூர்த்தியை இடம் மாற்றிய கிராமத்தினர்
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் ஹனகெரே கிராமத்திலுள்ள காலபைரவேஸ்வர சுவாமி எனும் பழைமையான கோயிலுக்குள் தலித்துகள் நுழைந்ததால், கோயிலின் உற்சவ மூர்த்தியை அந்தக் கிராமத்தினர் வேறு இடத்துக்கு மாற்றிய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸாரின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், அறநிலையத்துறையின் கீழ் வரும் அக்கோயிலுக்குள் நுழைய தலித் மக்களுக்கும் உரிமை உள்ளது என முடிவானது. இந்தக் கோயிலானது, காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.சீனிவாஸ் தலைமையில் சமீபத்தில்தான் புதுப்பிக்கப்பட்டது.
இருப்பினும், தலித் மக்களைக் கோயிலுக்குள் அனுமதிப்பதை அந்தக் கிராமத்தினர் எதிர்த்துவந்தனர். அதோடு, கோயிலின் உற்சவ மூர்த்தியைக் கோயில் வளாகத்தில் வேறு அறைக்கு இடம் மாற்றினர். இதனால், நேற்று பிற்பகல் சில மணிநேரம் கோயில் மூடப்பட்டது. பின்னர், மாலையில் கோயில் திறக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக போலீஸாரும் குவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் நுழைந்தனர். வழக்கம்போல அனைத்து சடங்குகளும் நடைபெற்றன. பின்னர், இது குறித்துப் பேசிய தாசில்தார் சிவக்குமார் பீரதார், ``இந்தப் பிரச்னைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்படும்" என்று தெரிவித்தார்.